நம்ம நாட்டுலே 1000 பேருக்கு ஒரு டாக்டர் கூட இல்லை! – மத்திய அரசு தகவல்!

நம்ம நாட்டுலே 1000 பேருக்கு ஒரு டாக்டர் கூட இல்லை! – மத்திய அரசு தகவல்!

தூய்மை இந்தியா என்ற திட்டத்தை செயல்படுத்தி வரும் நம் இந்திய திருநாட்டில் சுகாதாரம் முறையாக இல்லாததால் ஆரோக்கியக் குறைபாடுகளும் இதனால் பொருளாதார இழப்புகளும் ஏற்படுவதோடு ஒவ்வொரு ஆண்டும் வயிற்றுப்போக்கினால் சுமார் 1,00,000 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். அதாவது உருவகமாகக் கூற வேண்டுமெனில் நாளொன்றுக்கு 2 ஜம்போ ஜெட் விமானங்கள் விழுந்து நொறுங்கினால் ஏற்படும் உயிரிழப்பாகும் இது. இதனால் குழந்தைகளின் உடல் ரீதியான மற்றும் அறிதிறன்களில் பாதிப்பு ஏற்படுகிறது, இதனால் உற்பத்தித் திறனில் பாதிப்பு ஏற்படுகிறது.மொத்தமாக சுத்தமின்மை, சுகாதாரமின்மையினால் இந்தியாவுக்கு அதன் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% இழப்பு ஏற்படுகிறது என்று குடிநீர் மற்றும் சுகாதார மத்திய அமைச்சகச் செயலர் பரவேஸ்வரன் ஐயர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி நேரத்தில் மத்திய சுகாதாரத் துறை இணை மந்திரி அனுபிரியா படேல், இந்தியாவில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கையை பற்றிய தகவலை வெளியிட்டார். அப்போது அவர் பேசிய போது, ”இந்தியாவில் 1000பேருக்கு ஒரு டாக்டர் என்பதற்கும் குறைவாகவே டாக்டர்கள் இருக்கிறார்கள் என்று உலக சுகாதார கழகம் கூறி உள்ளது. இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ள அலோபதி டாக்டர்கள் எண்ணிக்கை 10,22,859 ஆகும். இதில் 8.18 லட்சம்டாக்டர்கள் தான் மருத்துவ சேவையில் உள்ளனர். இதன்படி பார்த்தால் 1000க்கு 0.62 என்ற கணக்கில் தான் டாக்டர்கள் உள்ளனர். இந்தியாவின் மக்கள் தொகை 133 கோடியை எட்டியிருக்கும் போது டாக்டர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவே.

இந்தியாவில் 479 மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுக்கு 67,218 பேர் எம்.பி.பி.எஸ்.படிக்கிறார்கள். மக்கள் தொகைக்கு ஏற்ப டாக்டர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 12,870 எம்.பி.பி.எஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். உலக சுகாதார அமைப்பு 1000 பேருக்கு ஒரு மருத்துவர் என்று நிர்ணயித்த நிலையில் இந்தியாவில் குறைவான மருத்துவர்களே உள்ளனர் என்றாலும் இந்தியாவின் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் அதிகரிக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!