பலான படம் படம் பார்த்தாலே கைது 7 ஆண்டுகள் வரை சிறை : காவல்துறை எச்சரிக்கை

பலான படம் படம் பார்த்தாலே கைது  7 ஆண்டுகள் வரை சிறை : காவல்துறை எச்சரிக்கை

செல்போன் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 18வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமியர் 43 சதவீதத்தினர் இணையதள வசதியுடன் கூடிய ஸ்மர்ட் போன் பயன்படுத்துவதாக யுனிசெப் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. அதில் 92 சதவீத சிறுவர் சிறுமியர் இணையதளங்களில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருந்தது.

சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் பதிவேற்றம் செய்யப்படும் சிறுவர் சிறுமியரின் நிர்வாணப்படங்கள் குறித்து ஆய்வு செய்த யுனிசெப் அது தொடர்பான புள்ளி விவரங்களையும் வெளியிட்டு இருந்தது. அதன்படி 5வயது முதல் 12வயது வரையிலான 48சதவீத குழந்தைகளின் நிர்வாண படங்களும், 13முதல் 15வயது வரையில் 23.8சதவீத சிறுவர், சிறுமியர் நிர்வாண படங்களும், 16வயது முதல் 18வயதுவரையில் உள்ள 28சதவீத சிறார்களின் நிர்வாண படங்களும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதன் காரணமகவே நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உலகளவில் அதிகம் ஆபாச படம் பார்க்கும் நாடாக இந்தியா இருப்பது மென்மேலும் வேதனைகளுக்கு ஆளாக்கியுள்ளது. அதிலும், குறிப்பாக, சென்னை முதலிடம் வகித்திருப்பது தமிழக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து, பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் ஆபாச வீடியோக்களை பார்க்கும் பழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில். குழந்தைகளின் ஆபாச படங்களை இணையதளங்களில் பார்ப்பவர், பதிவேற்றுபவர்களும், பதிவிறக்கம் செய்தவர்களும் இனி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தமிழக காவல் துறை எச்சரித்துள்ளது.

முன்னதாக அமெரிக்க உளவு துறை இந்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய சமீபத்திய தகவலில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்க்கும் இளைஞர்கள் இந்தியாவில் தான் அதிகம் என்றும், அதுவும் தமிழகத்தில் இந்த எண்ணிக்கை அதிகம் என்ற தகவலை வெளியிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதற்கான பட்டியலும் தமிழக காவல் துறையிடம் கொடுக்கப்பட்டிருப்பதை உறுதிபடுத்துகிறார் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் கூடுதல் டிஜிபி ரவி.

குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து பதிவேற்றப்பட்ட இணையதளங்களை பயன்படுத்தி வரும் ஆயிரக்கணக்கானவர்களின் பட்டியலை தான் மத்திய உள்துறை தமிழக காவல் துறைக்கு வழங்கியுள்ளது. குழந்தைகளின் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பவர்களும் கூட அந்த பட்டியலில் உள்ளனர்.

அவர்கள் அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கை தொடங்கவிருப்பதாக அதிர வைக்கிறார் கூடுதல் டிஜிபி ரவி. அவ்வாறு கைது செய்யப்படுபவர்கள் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக கையாளுதல் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்து 3 ஆண்டுகளில் இருந்து அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என எச்சரிக்கிறது காவல் துறை.

சமீபத்தில் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைதான குற்றவாளிகளும் இளம் வயதினர் தான். இதற்கெல்லாம் மிக முக்கிய காரணம் பாலியல் குறித்த வக்கிர எண்ணங்களுடன் இளம் வயதினர் வளர்வது தான் என உளவியல் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

ஒழுக்கத்துடன் ஆரோக்கியமான இளம் சமூகம் உருவாக்கினால் தான் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடும் குற்றங்களை தவிர்க்க முடியும் என்கின்றனர் காவல் துறையினர்.

Related Posts

error: Content is protected !!