கூகுளை அதகளப்படுத்திய லக்பதி திதி(லட்சாதிபதி சகோதரிகள்)!

கூகுளை அதகளப்படுத்திய லக்பதி திதி(லட்சாதிபதி சகோதரிகள்)!

பார்லிமெண்டில் நேற்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லக்பதி திதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவர் இந்தியாவில் ஒரு கோடி பெண்கள் லக்பதி திதி திட்டத்தின் கீழ் லட்சாதிபதி ஆனார்கள். லக்பதி திதி திட்டத்தின் கீழ் இந்தியாவில் சுமார் 2 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க இலக்கு வைத்துள்ளதாகவும், இந்த இலக்கை 3 கோடியாக உயர்த்துவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் அறிவித்தார். அதையடுத்து அதென்ன லக்பதி திதி என்று பலரும் கூகுளில் தேட ஆரம்பித்தார்கள். அந்த வகையில் ஆச்சரியமான தகவல்களையும் அவர்கள் கண்டடைந்தனர்.

மகளிருக்காக மத்திய அரசு, சுய உதவி குழுக்கள் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் பெண்களின் வளர்ச்சியை ஊக்கப்படுத்துவதோடு அவர்களின் தன்னம்பிக்கையையும் அதிகரிக்க செய்கிறது. அவற்றில் ஒன்றுதான் லட்சாதிபதி சகோதரிகள் எனப்படும் லக்பதி திதி யோஜனா திட்டம்.இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் தங்களுக்கான பணியை செய்து தன்னிறைவு அடைவதோடு மற்ற பெண்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் செயல்பட முடியும். இந்த திட்டம் ஹரியான மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தின் அலிகா கிராமத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.அங்கு இந்த திட்டத்தின் பெயர் பிரேம் சுய உதவிக் குழு. இந்தக் குழுவுடன் தொடர்புடைய பல பெண்கள் தற்போது ஆண்டுக்கு லட்சக்கணக்கில் சம்பாதித்து தங்களின் குடும்பத்தை கவனித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த லக்பதி திதி யோஜனா திட்டத்தைதான் நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் தொடங்கவுள்ளதாக கூறி இருந்தார் பிரதமர் மோடி.

அதன் தொடர்ச்சியாக மகளிர் சக்தி திட்டங்களுக்கு உந்துதலாக இருக்கும் வகையில் மூன்று கோடி ‘லக்பதி தீதி’களை உருவாக்கும் இலக்கை நோக்கிய மத்திய அரசின் முடிவை நிதியமைச்சர் தனது உரையில் அறிவித்தார். முன்னதாக இரண்டு கோடியாக அறிவிப்பான இலக்கு தற்போது, 3 கோடி இலக்குக்கு உயர்வு கண்டுள்ளது. 9 கோடி பெண்களைக் கொண்ட 83 லட்சம் சுய உதவிக்குழுக்கள், கிராமப்புறங்களின் சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளித்தலுக்கு தன்னம்பிக்கையுடன் மாற்றம் தந்திருக்கிறார்கள்.இத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கு வழக்கத்துக்கு மாறான நுட்பங்களில் தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டது. ‘நமோ ட்ரோன் திதி’ திட்டத்தின் கீழ், குழுக்களுக்கு, 15 ஆயிரம் ட்ரோன்கள் வழங்கப்படுகின்றன

பிளம்பிங், எல்இடி பல்ப் தயாரித்தல், ஆளில்லா விமானங்களை இயக்குதல் மற்றும் பழுது பார்த்தல் போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகள் அவற்றுக்கான உதாரணமாகும். இந்த சுய உதவிக் குழு பெண்களின் முன்னேற்றம் அவர்களின் வருமானத்துக்கான வழிகள், தொழிற் பயிற்சிகள், ஒட்டுமொத்தமாக சுய உதவிக் குழுப்பெண்கள் வாயிலாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு லட்சாதிபதி சகோதரிகளுக்கான இலக்குகள் தற்போது உயர்த்தப்பட்டுள்ளன என்பதுதான் இந்த திட்டத்தின் சிறப்பம்சாம்.

error: Content is protected !!