குஷி விமர்சனம்!

எந்த வரையறைக்குள் கொண்டு வர முடியாதவைகளில் முக்கியமானது காதல். இப்படி இப்படி இருந்தால் காதல்.. அப்படி அப்படி நடந்து கொண்டால் காதல் என்றெல்லாம் யாரும் ஆணித்தரமாக கூறி விட முடியாது. இந்தக் காதல் என்பதே பார்த்தவுடன் காதல், பழக பழக காதல், நட்புக்கு பிறகு வரும் காதல் இதையெல்லாம் தாண்டி காதல் குறித்த எல்லைகள் பலவும் உண்டு..ஆனால் இவற்றிலிருந்து மாறுபட நினைத்து லவ் ஒன்றை விவாதப் பொருளாகக் வேண்டும் என்பதற்காக கடவுள் மறுப்பு பாலிசி கதைக்குள் புகுத்தி கொஞ்சம் ரசிக்கும்படி கொடுத்திருந்தாலும் ஏனோ பலக் காட்சிகளின் போது சோர்வு ஏற்பட்டு எப்போ படம் முடியும் என்று கேட்க வைத்து விடுகிறார்கள்.. !
கடவுள் உண்டு என்று நம்புவது மட்டுமின்றி ஆன்மிக சொற்பொழிவு, ஜோதிடம் என்று இருப்பவரின் மகள் சமந்தா. பக்கா நாத்திகவாதியின் வாரிசு விஜய் தேவரகொண்டா .. வசதியான பேமிலியாக இருந்தாலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலைக்கு போக ஆயத்தமாகும் விஜய் தேவரகொண்டாவுக்கு காஷ்மீரில் அப்பாயிண்ட்மெண்ட் போடப்படுகிறது. இதனால் காஷ்மீருக்கு போன இடத்தில் பர்தா அணிந்திருந்த சமந்தாவை பார்த்தவுடன் ப்சசெகென்று காதல் பற்றிக் கொள்கிறது. பிறகென்ன உலகச் சினிமா பாணியில் சமந்தாவை துரத்தி துரத்தி விஜய் தேவரகொண்டா லவ்வுகிறார். ஒரு கட்டத்தில் சமந்தாவும் விஜய் தேவரகொண்டாவின் காதலை ஏற்றுக் கொள்ளும் சமயத்தில் தான் ஒரு ஆர்த்தடாக்ஸ் பிராமின் என்ற உண்மையைப் போட்டு உடைக்கிறார் சமந்தா. அதே சமயம் இரண்டு பேர் குடும்பத்திலும் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது. இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணம் செய்து கொண்ட சில மாதங்கள் கழித்து ஆராத்யா கருவுறுகிறார். ஆனால் கருச்சிதைவு ஏற்படுகிறது. ஜாதகம், நாள் நட்சத்திரம் பார்க்காமல் செய்தது தான் இதற்கு காரணம் என்கிறார் நாயகியின் அப்பா வ். இதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தர்க்கம் செய்கிறது ஹீரோ குடும்பம். காதலர்கள் மத்தியில் விரிசல் வருகிறது. இறுதியில் ஜெயித்தது காதலா? விஞ்ஞானமா? சாஸ்திரமா? என்று விவரிக்கிறது குஷிக் கதை.
அரத பழசான கதைதான்.. ஆனால் விஜய்தேவரகொண்டா & சமந்தா ஜோடியைப் பார்க்கும் போதெல்லாம் கதையே மறந்து ரசனை மோடுக்கு போய் விடுகிறது. தொடக்க காட்சிகளில் காஷ்மீரில் நடத்தும் காதல்.விளையாட்டு எம்.ஜி.ஆரின் அன்பே வா ஸ்டைலில் துள்ளலாக நகர்கிறது. அதிலும் முஸ்லிம் பெண் பேகம் என்ற பெயரில் புர்கா அணிந்து.சமந்தா தோழியுடன் நடப்பதும் அவரை விஜய் தேவரகொண்டா காதலிப்ப தாக சொல்லி சுற்றிச்சுற்றி வருவதும் வழக்கமான காதல் காட்சிகளாக இருந்தாலும் இருவரும் இணைந்து வரும் சீன்கள் ஒவ்வொன்றும் ஒரு கவிதை வாசித்த ஃபீலிங்கை கொடுக்கிறது. குறிப்பாக விஜய் தேவரகொண்டா சமந்தாவை காதலோடு அவர் பார்க்கும் ஒவ்வொரு பார்வையும் காஷ்மீர் பனிப்பாறைகளும் உருகிவிடும் அளவுக்கு பார்வைகளாக இருக்கிறது. ஆரம்பத்தில் காதலியாக ஒரு பெண்ணை ரசிப்பவர், மனைவியான உடன் அவருடைய செயலை வெறுப்பது, அதே மனைவி பிரிந்த உடன் அவர் இல்லாமல் தவிப்பது என்று ஆண்களின் சகல உணர்ச்சிகளையும் அழகாக எக்ஸ்போஸ் செய்து ஸ்கோர் செய்கிறார். சமந்தாவும் தன் காந்தவிழிகளால் ரசிகர்களின் இதயங்களையே கவர்ந்து விடுகிறார். தன்னை துரத்தி துரத்தி காதலிக்கும் விஜய் தேவரகொண்டாவை அவர் பார்க்கும் விதமும், பிறகு காதலில் விழுந்தவுடன் அவர் வெளிப்படுத்தும் காதலும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. எந்த இடத்திலும் அதிகமாக நடிக்காமல் அளவான நடிப்பை கொடுத்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறார் . என்றாலும் சோக காட்சிகளில் மேக்கப் அளவுக்கு அதிகமாக அப்பியிருப்பதால் சீனே ஒட்டாமல் போய் விடுகிறது.
காமெடி காட்சிக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்ட வெண்ணிலா கிஷோர், பிரம்மானந்தா, ராகுல் ராமகிருஷ்ணா, முகமது அலி ஆகியோர் மிகச் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தில் கலகலப்பை கூட்டி இருக்கின்றனர். ஹீரோ விஜய் தேவர் கொண்டாவின் அப்பாவாக வரும் நாத்திகவாதி சச்சின் கெடேகர், ஹீரோயின் சமந்தாவின் அப்பாவாக வரும் ஆத்திகவாதி முரளி ஷர்மா ஆகியோர் தங்கள அனுபவத்தால் போட்டி போட்டுக்கொண்டு நடித்து சின்ன சின்ன வில்லத்தனம் காட்டி படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். விஜய் தேவரகொண்டாவின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன் கடவுள் பக்தியோடு நடித்து ஆங்காங்கே கைத்தட்டல் பெறுகிறார். சமந்தாவின் பாட்டியாக வரும் மூத்த நடிகை லட்சுமி அவருக்கான வேலையைச் சிறப்பாக செய்து ரசிக்க வைத்துள்ளார்.
முரளியின் ஒளிப்பதிவில் காஷ்மீரின் மலை முகடுகளும், பனிப்பொலிவும் நம்மிடையே பேசுவது போல் இருக்கிறது. அத்துடன் சமந்தா & தேவரகொண்டா ஜோடியுடன் போட்டுக் கொண்டு நம்மை கவர முயன்று ஜெயித்தும் விடுகிறார். அப்துல் வகாபின் இசையில் காதல் பாடல்கள் தியேட்டரில் படத்தோடு பார்க்கும் போது சிறப்பாக உள்ளது .
குறை சொல்லவும் எவ்வளவோ உண்டு என்றாலும் கடவுள் உண்டா, இல்லையா? என்று டி வி விவாதத்தில் மோதிக் கொள்ளும் சீனிவாச ராவ், சச்சின் கேதெர்கர் இருவரில் யாருடைய கொள்கை ஜெயிக்கப்போகிறது என்ற விவாதத்தை கிளப்பிவிடும் இயக்குனர் சிவா அதை கிளை மாக்சில் விஜய தேவர கொண்டாவின் தந்தை தன் கடவுள்.மறுப்பு கொள்கையை கைவிட்டு கோயிலில் நடக்கும் ஹோமத்தில் பங்கேற்க வரும் போது அரங்கில் சலசலப்பை ஏற்படுத்துவதில் குஷியை தொலைத்து விடுகிரார்.
மொத்தத்தில் குஷி -சுமார்
மார்க் 2.75