June 4, 2023

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைச்சுடுச்சு!

தமிழகத்தில் இதுவரை மதுரை மல்லிகை, காஞ்சி பட்டு, திருப்பதி லட்டு, தஞ்சாவூர் மரக் குதிரை, நீலகிரி தேயிலை என 31 பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் அதிக புவிசார் குறியீடுகளைப் பெற்ற மூன்றாவது மாநிலமாகத் தமிழகம் திகழும் சூழலில் தற்போது சுவைமிக்க ’ ‘கோவில்பட்டி கடலை மிட்டாய்’க்கு கிடைத்துள்ளது. ஒரு பொருளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது என்றால் அப்பகுதி அல்லாத மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களோ அல்லது ஊரைச் சேர்ந்தவர்களும் அதே பெயரைப் பயன் படுத்தி அந்த பொருளை தயாரிக்க முடியாது. அதாவது இனி கோவில் பட்டியை தவிர மற்ற இடங்களில் இருந்து யாரும் அந்தப் பெயரில் கடலைமிட்டாய் தயாரிக்கவோ, சந்தைப்படுத்தி விற்பனை செய்யவோ முடியாது. அப்படி விற்பனை செய்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியுமாக்கும்.

கடலை மிட்டாய் என்பது தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கக் கூடியது என்றாலும் கோவில்பட்டி கடலை மிட்டாய் என்றால் அதன் சுவை இன்னும் அதிகம் என்பது நாம் அறிந்ததே. இத்தகைய கடலை மிட்டாய் அதிக அளவில் உண்பதால் நல்ல உடல் கட்டு வருவதோடு அதிக எடை உள்ளவர்களின் எடை குறையும். இன்னும் பல நன்மைகள் உண்டு இதை உண்பதால். நிலக்கடலைகளை ஆற்றுமணலுடன் சேர்த்து வறுத்து, அதன் தோலை நீக்கிய பின்னர், கம்பிப் பதத்திலான வெல்லப்பாகுடன் கலந்து, தட்டையாக்கி சதுரம், அரைச் சதுர வடிவில் வெட்டி எடுக்கின்றனர். இதே பதத்தில், உருண்டை பிடித்து கடலை உருண்டையும் செய்வார்கள். ஆனால், கடலைமிட்டாய்தான் இங்கு பிரசித்தி பெற்றது. இந்தக் கடலை மிட்டாய்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, பண்டல்களாக அடுக்கி வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்தால் கூட கைக்கு வரும் கடலை மிட்டாய் சுவையும் தரமுமாக இருப்பதை உணரலாம். ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் கடலை மிட்டாய் தயாரிப்பவர்களில் சிலர், தரமற்ற வகையில் கடலைமிட்டாய் தயாரித்து, `கோவில்பட்டி கடலைமிட்டாய்’ என்ற பெயரில் விற்பனை செய்து வருகிறார்கள். இது குறித்து, கோவில் பட்டியைச் சேர்ந்த கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் அரசிடம் முறையிட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு தற்போதைய திருப்பூர் மாவட்ட ஆட்சியரும், அப்போதைய கோவில்பட்டி சப்கலெக்டருமான டாக்டர். விஜய கார்த்திகேயன் மூலம் கடலைமிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கிடக்கோரி விண்ணப்பிக்கப்பட்டது. பின்னர், 2017-ல் மீண்டும் ஒருமுறை விண்ணப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது புவிசார் குறியீடு அளித்துள்ளது மத்திய அரசு. ஆம் . பழனி பஞ்சாமிர்தத்தைத் தொடர்ந்து கடந்த வருடம் திண்டுக்கல் பூட்டிற்கும், காரைக்குடி கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு கிடைத்தது. தற்போது கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு ஜிஐ டேக் (புவிசார் குறீயீடு) கிடைத்துள்ளது.

அதாவது இந்தியாவின் ஒவ்வொரு பகுதிகளிலும் அதன் நிலப்பகுதிக்கு ஏற்ப தனித்தன்மைகள் மற்றும் அடையாளங்கள் கொண்ட பொருள்கள் கண்டறியப்பட்டு, அப்பொருள்களுக்கு அங்கீகாரம் அளிப்பதே புவிசார் குறீடாகும் (Geographical Indication). குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரியமாக விளைவிக்கப்படுவதற்கும் அல்லது தயாரிக்கப் பட்டதற்கும், அதன் தரத்தை காப்பதற்குமான சான்றாக இது விளங்குகிறது. இதற்காக 1999ம் ஆண்டு பொருள்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு 2003ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. ஒரு பொருளின் தனித்தன்மைகாக அது தயாரிக்கப் படும் விதத்திற்கும் அளிக்கப்படும் இந்த ஜிஐ டேக் வரிசையில் தற்போது சுவைமிக்க ’ ‘கோவில்பட்டி கடலை மிட்டாய்’க்கு கிடைத்துள்ளதால் கடலைமிட்டாய் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.