June 4, 2023

கேரளா தங்க கடத்தல் வழக்கு – ஸ்வப்னா சுரேஷுக்கு ஜாமீன்!

கேரள தங்கக்கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் பிஎஸ் மற்றும் 6 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) உபா சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கில், கேரள ஐகோர்ட் இன்று ஜாமீன் வழங்கியது.

வெளிநாடுகளிலிருந்து கேரளாவிற்கு நூற்றுக்கணக்கான கிலோவில் தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக ஸ்வப்னா என்ற பெண் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அமலாக்கத்துறை , ஸ்வப்னா மீது கருப்புப் பண தடுப்புச் சட்டம் மற்றும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள், நாட்டின் பொருளாதார பாதுகாப்பை அச்சுறுத்தி சீர்குலைக்கும் நோக்கத்துடன் தங்களுக்குள் சதி செய்து, பயங்கரவாத கும்பலை உருவாக்கி, நிதி திரட்டி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து தங்கத்தை கடத்தி வந்தனர் என்பது என்ஐஏ வழக்கு. இதனால், அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இந்திய நாட்டின் நட்புறவை சேதப்படுத்தினர் என்று சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) பிரிவு 16, 17, 18 மற்றும் 20 ன் கீழ் வழக்குப் பதியப்பட்டிருந்தது.

குற்றப்பத்திரிகையில் உபா சட்டத்தின் கீழ் இது ஒரு குற்றமாக இல்லை. சுங்கச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய தங்கக் கடத்தல் குற்றத்தை குறிப்பிட்டு மட்டுமே குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும், நாட்டில் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்ய கடத்தல் நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மனுவில் சுட்டிக்காட்டினர்.

எனினும் ஸ்வப்னா மீது சுங்கத்துறை சார்பில் காஃபிபோசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரது சிறை வாசம் தொடர்கிறது என்று தகவல் வருகிறது.