ஆட்சி எனக்குதான் : இல்லையில்லை ஆட்சி எனக்கே!- பாஜக + காங்கிரஸ் மல்லுக்கட்டு!

ஆட்சி எனக்குதான் : இல்லையில்லை ஆட்சி எனக்கே!- பாஜக + காங்கிரஸ் மல்லுக்கட்டு!

கிரிகெட் டி 20 மேட்ச் ரிசல்ட் மாதிரி பரபரப்பாக வந்துக் கொண்டிருந்த கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், அதிக தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ள பாஜக, ஆட்சி அமைக்கக்கோரி அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம் அண்டர்க்ரவுண்ட் பேச்சு வார்த்தை மூலம் கூட்டணி சேர்ந்து விட்ட காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்களும் ஆளுநரிடம் ஆட்சி அமைக்கக்கோரி அழைப்பு விடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

கர்நாடக தேர்தலில்: பாஜக 100 தொகுதிகளில் வெற்றி, காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி, மஜத 37 தொகுதிகளில் வெற்றி, பிற கட்சிகள் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. 222 தொகுதிகளில் நடைபெற்றே தேர்தலில் 6 தொகுதிகளுக்கு இன்னும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மற்ற முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கதாக நிலையில் காங்கிரஸ் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைக்க முடிவுசெய்துள்ளது.

முதலமைச்சர் பதவி மதசார்பற்ற ஜனதா தளத்திற்கும், துணை முதலமைச்சர் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 20 அமைச்சர் பதவிகளும், மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 14 அமைச்சர் பதவிகளும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக மஜத மூத்த தலைவர் தானிஷ் அலி தெரிவித்திருந்தார். அதன்படி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் பரமேஷ்வரா தலைமையில் ஆளுநரை சந்திக்க காங்கிரஸ் குழு ஒன்று சென்றது. ஆனால் ஆளுநர் இல்லத்தில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பரமேஷ்வரா தலைமையிலான குழு அங்கிருந்து திரும்பிவிட்டது.

அதே சமயம் முதல்வர் சித்தராமையா, ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதற்கிடையில், சுயேட்சை வேட்பாளர் ஒருவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கர்நாடக ஆளுநரை பாஜகவின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சந்தித்து ஆட்சியமைக்க உரிமைக் கோரினார். சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 7 நாள் அவகாசம் தாருங்கள் என கவர்னரை எடியூரப்பா கேட்டுகொண்டதாகத் தெரிகிறது. இந்த சந்திப்பு முடிந்த சில நிமிடங்களில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி ஆளுநரை மதசார்பற்ற ஜனதா தள முதல்வர் வேட்பாளர் குமாரசாமி சந்தித்தார். குமாரசாமியுடன் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் உடன்சென்றனர்.

ஆளுநரைச் சந்தித்த பின்னர் குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்: ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளோம். ஆட்சியமைக்க யாரை அழைப்பது என்பது ஆளுநரின் முடிவு என்று தெரிவித்தார்

Related Posts

error: Content is protected !!