கரகாட்டக்காரன் படம் – ரிலீஸாகி 31 வருஷமாச்சு!- சில சுவையான நினைவலைகள்!

கரகாட்டக்காரன் படம் – ரிலீஸாகி 31 வருஷமாச்சு!- சில சுவையான நினைவலைகள்!

கரகாட்டக்காரன் படம் ரிலீஸாகி இன்னியோட 31 வருசங்கள் ஓடிப் போச்சு அப்ப்டீன்னு கங்கை அமரன் மூலம் நெனவு வந்ததை அடுத்து நம்ம கட்டிங் கண்ணையா அனுப்பியிருக்கும் சேதியிது :

. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்டோர் நடித்த கரகாட்டக்காரன் படம் கடந்த 1989ம் ஆண்டு ஜூன் மாதம் 16ம் தேதி வெளியானது. இசைஞானி இளையராஜா இசையில் அந்த படத்தில் வந்த அனைத்து பாடல்களுமே ஹிட்டாகின. ‘முந்தி முந்தி விநாயகனே’, ‘மாங்குயிலே பூங்குயிலே’, ‘குடகுமலை காற்றில்’, ‘இந்த மான் உந்தன் சொந்த மான்’, ‘ஊருவிட்டு ஊரு வந்து’ என்று எல்லாப் பாட்டுகளும் அதிரிபுதிரி ஹிட்டானது. தியேட்டரில் படம் வந்தால், முறுக்கு, கடலைமிட்டாய், கூல்டிரிங்ஸ் என்றெல்லாம் முன்னதாகவே வாங்கிவைப்பார்கள். ‘கரகாட்டக்காரன்’ ஓடிய தியேட்டர்களில் இன்னொன்றையும் மறக்காமல் தயாராக வைத்திருந்தார்கள். அது… வேப்பிலை.

ஆமாம்… க்ளைமாக்ஸ் காட்சியில் வரும் ‘மாரியம்மா மாரியம்மா’ பாட்டுக்கு, அங்கிருந்தும் இங்கிருந்துமாக பெண்களும் ஆண்களும் சாமியாடினார்கள். அவர்களை சாந்தப்படுத்த வேப்பிலையும் விபூதியும் தயாராக வைத்திருந்தார்கள் தியேட்டர்காரர்கள். மொத்தம் 425 நாட்கள் ஓடி ராமராஜனுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம் கரகாட்டக்காரன்.கவுண்டமணி, செந்தில் காம்பினேஷன் மற்றும் கோவை சரளாவின் காமெடிகள் இப்போதுவரை டிரெண்டில் இடம்பிடிக்கின்றன. முக்கியமாக, வாழைப்பழக் காமெடியை 30 வருடங்கள் கழித்தும் இன்னும் ரசிக்கிறார்கள்.

உண்மையில் 1980-களின் இறுதியில் தமிழ் சினிமாவில் மாயாஜாலத்தை நிகழ்த்திய படம் ‘கரகாட்டக்காரன்’.

இந்தக் ‘கரகாட்டக்கார’னின் வெற்றி என்பது 80-களின் இறுதியில் ஈடு இணையில்லாததாக அமைந்தது. அந்தக் கால கட்டத்தில் கதாநாயகர்களின் சாகசங்களைக் கொண்ட படங்கள் வந்துகொண்டிருந்த வேளையில், ஒரு தென்றலைப் போல வந்த படம் ‘கரகாட்டக்காரன்’. ரஜினி, கமல் எனப் பெரிய ஹீரோவுக்குக் கிடைக்கும் வரவேற்பு ‘கரகாட்டக்காரன்’ படத்துக்கு எடுத்த எடுப்பிலேயே கிடைக்கவில்லை ‘ஸ்லோ பிக்அப்’ படம்தான். இந்தப்படம் குறிச்சு கங்க அமரன்கிட்டே பேச்சுக் கொடுத்தப் போது, “‘கரகட்டாக்காரன்’ படத்தின் பட்ஜெட் என்று பார்த்தால், 18ல் இருந்து 20 லட்சத்துக்குள்ளேதான் இருக்கும். ஆனால் வியாபாரம் பெரிதாக இல்லை. அப்போது ‘அண்ணனுக்கு ஜே’ என்று ஒரு படம் எடுத்துக் கொண்டிருந்தோம். ‘கரகாட்டக்காரன்’ படமும் எடுத்துக் கொண்டிருந்தோம். ’கரகாட்டக்காரன்’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘படம் கிராமத்துக் கதையா இருக்கு, ஆட்டமும் பாட்டுமா இருக்கு’என்று ஏதேதோ காரணங்கள் சொல்லி, விலையைக் குறைப்பதில் குறியாக இருந்தார்கள்.

எங்களுக்கும் இந்தப் படம் அப்படி ஓடும் இப்படி ஓடும் என்றெல்லாம் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. படம் ஜாலியா இருக்கு, பொழுதுபோக்கா இருக்கு. மக்கள் ரசிக்கிற மாதிரி இருக்குன்னுதான் நினைச்சோம். அப்போது, நட்பு ரீதியா நண்பர்களுக்கெல்லாம் போட்டுக் காட்டினோம். சத்யராஜ் அந்தப் பக்கம் இருந்தார். ‘வாங்களேன், படம் பாருங்களேன்’ என்று கூப்பிட்டோம். படம் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னார். இப்படி பல நடிகர்கள் படம் பார்த்திருக்கிறார்கள்.ஆனால் இவ்வளவு பெரிய சக்ஸஸ் ஆகும்னு தெரியலை.

ரஜினி சார், எங்களுக்கு ‘ராஜாதி ராஜா’ பண்ணினார். அப்போது வந்து, ‘எப்படி சாமி, இந்தக் கதையை திங்க் பண்ணினீங்க’ என்று கேட்டார். ‘இதுல திங்க் பண்றதுக்கு என்னங்க இருக்கு? எங்க ஊர்ல கரகாட்டம் ஆடிக்கிட்டிருப்பாங்க. அவங்க லைஃப் எப்படி இருக்கும்னு கதை பண்ணினோம். அவ்ளோதான்’ என்றோம்.
பொதுவாகவே, கரகாட்ட கோஷ்டி என்றில்லை. சங்கீத குரூப், டிராமா குரூப் எல்லாமே ஜோக் அடித்துக்கொண்டு, ஜாலியாக இருப்பவர்கள்தான். எப்போதும் கேலியும் கிண்டலும் நக்கலும் எனப் பேசிக்கொண்டிருப்பார்கள். அதனுடைய உச்சம், கரகாட்டக்காரர்கள்தான். அதையெல்லாம் வைத்துக் கொண்டு பண்ணியதுதான் ‘கரகாட்டக்காரன்’ படம். இந்த டைட்டில்தான் முடிவு பண்ணினோம். அப்படியே வைத்தோம்.” அப்படீன்னு சொன்னார்

ஆனால், அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்த ரசிகர்கள், அதைப் பற்றிச் சிலாகித்துப் பேசிப்பேசியே அந்தப் படத்துக்கு விளம்பரத்தைத் தந்தார்கள். படத்தைப் பற்றியும், அதன் இசையைப் பற்றியும் பாடலைப் பற்றியும் நகைச்சுவைக் காட்சிகளைப் பற்றியும் குறிப்பாக வாழைப்பழ காமெடியையும் ஆராதித்த ரசிகர்களால் பின்னர் அந்தப் படம் பிரம்மாண்ட வெற்றியை நோக்கி சென்றது. வெற்றியென்றால்… உங்கள் வீட்டு வெற்றி எங்கள் வீட்டு வெற்றி இல்லை. தெறிக்கவிட்ட வெற்றி. அதிரிபுதிரி வெற்றி. மதுரையில் 350 நாட்களைக் கடந்து ஓடியது. திருச்சி, கோவை, நெல்லை, தஞ்சாவூர், சேலம், விழுப்புரம், நாகப்பட்டினம், கடலூர் என பல ஊர்களிலும் 100 நாள், 150 நாள், 175 நாள் என போட்ட தியேட்டர்களிலெல்லாம் வசூல் மழை. ரசிகர்கள் படத்தைத் திரும்பப் பார்த்தார்கள். திரும்பத் திரும்பப் பார்த்தார்கள். மூன்றாம் நாள் பார்த்துவிட்டு, முப்பதாம் நாள் திரும்பவும் பார்க்கப் போனவர்கள், படம் பார்க்க முடியாமல், ‘ஹவுஸ்ஃபுல்’ போர்டை மட்டும் பார்த்துவிட்டு வந்தார்கள்.

பாட்டுக்காகப் படம் பார்த்தார்கள். இசைக்காகப் படம் பார்த்தார்கள். கதைக்காக பார்த்தார்கள். பொழுதுபோக்கிற்காக பார்த்தார்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக, காமெடிக்காகப் பார்த்தார்கள். பார்த்துக்கொண்டே இருந்தார்கள். இராமராஜன் என்னும் நடிகர் ஆட்டத்தில் வல்லவரல்லர். ஆனால், அவரைக் கரகாட்டக்காரனாகக் காட்டியது யாரையுமே உறுத்தவில்லை. அவருடைய ஆட்டத்திலும் நமக்குக் குறை தோன்றவில்லை. பாடத் தெரியாத நடிகரைப் பாடுவதுபோல் காட்டிவிடலாம். அதுபோல் எளிதில்லை ஆடத்தெரியாத நடிகரை ஆட வைப்பது. கரகாட்டக்காரனில் அது நடந்தது.

‘கரகாட்டக்கார’னின் வெற்றிக்கு எதை முக்கியக் காரணமாகச் சொல்ல முடியும்? அந்தப் படத்தைப் பார்த்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனைமிக்க காட்சி பிடித்திருக்கலாம். ஆனால், தமிழர்களின் மரபு சார்ந்த அடையாளத்தை வெகுமக்கள் ஊடகம் மூலமாக மீட்டுருவாக்கம் செய்ததே படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். இத்தனைக்கும் இந்த‘கரகாட்டக்காரன்’ படத்தின் கதை புதுமையானதும் இல்லை. கொத்தமங்கலம் சுப்பு எழுதி 1968-ல் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் தாக்கத்தில் உருவாகி கிராமியக் கதைக் களத்தையும் கிராமியக் கலையையும் பொருத்திக்கொண்டு வெற்றி பெற்ற ஜனரஞ்சக இசைச்சித்திரம்தான் ‘கரகாட்டக்காரன்’. ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தில் நாகஸ்வரக் கலைஞருக்கும் நாட்டியக் கலைஞருக்கும் இடையே காதல் கதை என்றால், ‘கரகாட்டகாரன்’ படத்தில் இரு கரகாட்டக் கலைஞர்களுக்கு இடையே ஏற்படும் காதல்தான் கதை.

கூடவே இப்படத்தின் காமெடிக்காக உழைத்த கவுண்டமணி – செந்தில் பற்றி சொல்லுங்க என்று கங்கை அமரனைடம் கேட்ட போது, ‘அப்போ கொஞ்சம் படம் கம்மியாகத்தான் இருந்த நேரம். மதுரைக்கு பக்கத்தில் கிராமம். உள்ளே போய் பார்த்ததுமே, பிடித்துவிட்டது. இது அவங்க வீடு, அது இவங்க வீடு என்று முடிவு செய்து, படப்பிடிப்பைத் தொடங்கிவிட்டோம். நாங்கள் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே கவுண்டமணியெல்லாம் பழக்கம். சங்கிலி முருகன் அண்ணன் டிராமான்னு இருந்தோம். அதில் ஓஏகே. தேவர்தான் ஹீரோ. தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் எல்லாரும் நடித்தார்கள். நாங்கள்தான் மியூஸிக். பாவலர் பிரதர்ஸ்னு இசையமைச்சிட்டிருந்தோம்.

அப்பவே, டிராமால, கவுண்டமணி நடிப்பைப் பார்த்து விழுந்து விழுந்து சிரிப்போம். மியூஸிக் இன்ஸ்ட்ரூமெண்ட் வரைக்கும் வந்துருவார். ஸ்டேஜ்ல எங்ககிட்ட விழுற மாதிரி வருவாரு. இப்படி கலாட்டா பண்ணுவாரு கவுண்டமணி. அப்பலேருந்தே பழக்கம். அப்புறமா செந்திலும் பழக்கமாயிட்டார். இப்படித்தான் எங்க படத்துல அவங்க வந்தாங்க.

’சொப்பனசுந்தரி’ன்னு அந்தக் காலத்துல ஒரு படம் வந்துருந்துச்சு. ஐம்பதுகள்ல வந்த படம் அது. சும்மா விளையாட்டா பேசிட்டிருந்தோம். அப்பதான் இந்த சொப்பனசுந்தரி கிடைச்சிச்சு. முப்பது வருஷத்துக்கு முன்னாடி ஒரு சின்னப்பொண்ணுன்னு ஒரு கற்பனை. அவ யாரு, எப்படி இருப்பா, எதுவுமே தெரியாது யாருக்கும். அந்தக் காமெடி இந்த அளவுக்கு ஹிட்டாகும்னு நினைக்கவே இல்லை.” என்றார்

உண்மைதான் அந்த கரகாட்டகாரன் படம் ஓடிய அரங்குகள் இன்று பாழடைந்துவிட்டன. படத்தில் இடம்பெற்ற காந்திமதி, சண்முகசுந்தரம் போன்ற கலைஞர்கள் பலர் இன்றில்லை. மீதமுள்ளவர்களில் பலர் ஓய்வு பெற்றுவிட்டார்கள். ஆனால், கரகாட்டக்காரனைப் பார்ப்பதற்கு இப்போதும் மக்கள் இருக்கிறார்கள். போக்குவரத்து நெரிசலில் நிற்கும் ஏதோ ஒரு வண்டி “மாங்குயிலே பூங்குயிலே” என்கிறது. பண்பலைகளில் இரவு நேரத்தில் “குடகுமலைக் காற்று” வருகிறது.. கூடவே இதோ நம்ம கட்டிங் கண்ணையாவின் நினைவலைக் குறிபுகளும் வருவதே காலம் கடந்த சாதனைதானே!

Related Posts