காப்பான் – விமர்சனம்

காப்பான் – விமர்சனம்

அதிரடி திருப்பங்களும், ஆக்‌ஷன் காட்சிகளையும் கலந்து கட்டிக் கொடுத்து  கமர்ஷியல் ஹிட் அடித்த அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யாவும் இயக்குனர்  கே.வி. ஆனந்தும் இணைந்து கொடுத்து இருக்கும் மூன்றாவது படமான காப்பான் பட விமர்சந்த்துக்குள் போகும் முன் ஒரு சராசரி இந்திய குடிமகனாய் தெரிந்து கொள்ள சில விஷயங்களை அறிந்து கொள்வது நல்லது.

நம் அந்த கால பாரத பிரதமர் தொடங்கி இப்போதைய பிரதமர் வரைக்கும் கிட்டத்தட்ட 35 சர்வதேச பயங்கரவாத குழுக்களிடம் இருந்து மிரட்டல்கள் உள்ளன. பாகிஸ்தானில் இருந்து மட்டும் அந்த காலத்தில் இருந்து  8-க்கு அதிகமான பயங்கரவாத குழுக்கள் பிரதமரைக் குறி வைக்கின்றன. அதனால்தான் பிரதமரை பாதுக்காக்க ஒரு ஸ்பெஷல் டீம் 1985ல் தனி சட்டம் மூலம் உருவாக்கப் பட்டது. அதுதான் Special Protection Group எனப்படும் எஸ்.பி.ஜி., இந்த டீமை உருவாக்கியவர் அப்போதைய ஐ.பி.எஸ்., அதிகாரியும் தமிழரு மான சுப்பிரமணியன். அவர் திட்டப்படி பிரதமரின் ஒவ்வொரு நகர்வையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது இவர்களது பணி. மிரட்டல், பயங்கர வாதிகள் தாக்குதல், இயற்கை பேரிடர் போன்ற வற்றில் இருந்து பிரதமரை இவர்கள் பாதுகாக்க வேண்டும். பிரதமர் காரைச் சுற்றி எப்போதும் 5 எஸ்.பி.ஜி., வீரர்கள் இருப்பர். பிரதமர் எங்காவது சென்றால், அங்கு பாதுகாப்பு நன்றாக இருக்கிறது என்று இவர்கள் கூறினால் தான், காரை விட்டு பிரதமர் இறங்க முடியும். இந்த 5 பேரும் புல்லட் புரூப் ஜாக்கெட் அணிந்திருப்பர். ஏதாவது குண்டு வெடித்தாலோ கலவரம் ஏற்பட்டாலோ பிரதமரை சுவர் போல நின்று காப்பாற்றுவர்.இவர்களில் ஒருவர் எப்போ தும் கையில் ஒரு கறுப்பு பை வைத்திருப்பார். இதில் தான் ‛எலக்ட்ரானிக்’ பாதுகாப்பு கருவி இருக்கும். ஏதாவது நெருக்கடி என்றால் இந்த கருவி இயக்கப்பட்டு, பிரதமரைச் சுற்றி எலக்ட்ரானிக் சுவரை ஏற்படுத்தி விடும். எந்த ரிமோட் கருவியையும் இந்த சுவர் செயல் இழக்க செய்து விடும். இப்படியாப்பட்ட ஹைடெக்-க்கான எஸ் பி ஜி டீம் அதிகாரியாக சூர்யா நடித்திருக்கும் படம்தான் ‘காப்பான்’.

ராணுவ வீரரான சூர்யா ஒரு சராசரி (ஆர்கானிக்) விவசாயி மாதிரி வாழ்ந்து கொண்டு ஏகப்பட்ட அண்டர்கவர் ஆபரேஷன்களை வெற்றிக்கரமாக முடித்து ஸ்கோர் செய்தவர், அதிலும் ஃபாரீனுக்கு செல்லும் இந்திய பிரதமர் மோகன்லாலை கொலை செய்யும் சதி திட்டத்தை தன் சாதுரியத்தால் முறியடிக்கிறார். இதை அடுத்து பிரதமர் மோகன்லால் இந்த சூர்யாவை தனது தனிப்பட்ட பாது காவலராக நியமிக்கிறார். ஆனாலும் பி. எம். மோகன்லால் பயங்கரவாதிகளால் கொல்லப் படுகிறார். அதன் பின்னர் (வாரிசு) அரசியல் சூழல் காரணமாக மோகன்லாலின் மகனான ஆர்யா பிரதமராக பதவியேற்கிறார். ஆர்யாவிற்கும் சூர்யா தான் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கிறார். ஆனால் ஆர்யாவையும் தொடர்ந்து கொலை செய்ய முயற்சிக்கப் பட, அவரை யார் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து அவர்களை எஸ் பி ஜி நாயகனான சூர்யா வீழ்த்துவதே ‘காப்பான்’ படத்தின் கதை.

கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளியான விவசாயி ரோலிலும், பிரதமர் செக்யூ ரிட்டி இன்சார்ஜாகவும் வரும் சூர்யா தன் கேரக்டரில் பக்காவாக பொருந்தி தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் எஸ் பி ஜி அதிகாரிக்கான தோற்றம், எச்சரிக்கையான பார்வை, மிடுக்கான நடை என தனிக் கவனம் பெறுகிறார். எல்லா நாயகன்களுக்கும் இருக்கும் ஆக்‌ஷன் ஆசையை சூர்யா இப்படத்தின் மூலம் தணித்துக் கொண்டால் தேவலை.

மோகன் லால். சீனியர் ஆர்டிஸ்ட். இதில் பிரதமராக நடித்திருக்கிறார். இவர் பேசும் தமிழ் வசனங் களில் மலையாள வாசனை கலந்திருந்தாலும், அவரின் வசனங்களுக்கு திரையரங்குகளில் கைத் தட்டல் சவுண்ட் கேட்கதான் செய்கிறது. பி. எம் ஆபீஸ் ஸ்டாப்-பாக வரும் சாயிஷா அழகு. ஆனால் டைரக்டர் சொன்ன வேலையை மட்டும் செய்திருக்கிறார். மோகன் லாலின் மகனாக நடித்திருக்கும் ஆர்யா ஆஜர் சார் சொல்லி இருக்கிறார் . கார்ப்பரேட் முதலாளியாக நடித்திருக்கும் பொம்மன் இரானி வில்லனாம். சமுத்திரக்கனி, பிரேம், பூர்ணா, தலைவாசல் விஜய் ஆகியோரும் வந்து போகிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜூன் இசையில் பாடல்கள் படம் பார்க்கும் போது கேட்கும்படி இருக்கின்றன. குறிப்பாக காஷ்மீரில் குழந்தைகள் பாடும் பாடல் அருமை. ஆனால் படம் முடிந்து வெளியேறும் போது அந்த பாடல் இசை அல்லது ஓசை கூட நினைவுக்கு வரவில்லை. ஒளிப் பதிவாளர் எம்.எஸ். பிரபு காட்சிகளை கச்சிதமாக படமாக்கியுள்ளார். ஆண்டனி தன் படத்தொகுப்பின் மூலம் திரைக் கதையை இன்னும் விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கலாம். ஏகப்பட்ட தேவையில்லாத காட்சிகள் அவர் கத்திரிக்கு தப்பி படத்தின் ஓட்டத்திற்கு தடை ஏற்படுத்துகிறது.

காப்பான் படக் கேப்டன் கே வி ஆனந்த் இயக்கிய கனா கண்டேன் தொடங்கி கவண் வரையிலான ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு துறையில் நடக்கும் அரசியலை தோலுரித்து காட்டி அசத்தி இருக்கிறார். அந்த வகையில் இந்த காப்பான் படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயத் திற்கு ஏற்படும் சிக்கல்களை சொல்ல முயன்றுள்ளார். கூடவே ஆன் லைன் அலப்பறையால் சமூக பிரச்னையாகி விட்ட இயற்கை விவசாயம், தஞ்சை மீத்தேன் போராட்டம், பூச்சிகளை வைத்து உயிரியல் யுத்தம் என பல விஷயங்களை கேஷூவலாக தொட்டு செல்கிறார். ஆனாலும் அடுத்தடுத்து பிரதமரை கொல்ல முயலும் காட்சிகளை மட்டுமே யோசித்து நம்ம சலிப்படைய வைத்து விட்டார் கே.வி. ஆனந்த்.    அது மட்டுமின்றி  காப்பான் படத்துக்கு உயிர் கொடுத்தவர் எஸ் பி ஜி மேன் மெயின் ரோலில் நடித்திருக்கும் சூர்யா தொடங்கி பிரதமராக நடித்திருக்கும் மோகன் லால் பேசும் வசனங்கள் பெரும்பாலானவற்றில் அடல்ஸ் ஒன்லி முத்திரை பதிப்பதிருப்பதைக் கவனிக்க தவறி விட்டது சோகம்தான்.

ஆக இந்த காப்பான் படத்தில் ஹீரோ சூர்யா குட் மார்க் வாங்கினாலும் இயக்குநர் கே வி ஆனந்த் ஜஸ்ட் பாஸ் மார்க்-தான் வாங்கி இருக்கிறார்.

மொத்தத்தில் ஆந்தை டீம் மார்க் 3.5 / 5

Related Posts

error: Content is protected !!