இது கதையல்ல. நிஜ வாழ்க்கை – க/பெ ரணசிங்கம் இயக்குநர் பேட்டி!

இது கதையல்ல. நிஜ வாழ்க்கை – க/பெ ரணசிங்கம் இயக்குநர் பேட்டி!

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படம் க/பெ. ரணசிங்கம். இப்படம் அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி முதல் ஓ.டி.டி மற்றும் டி.டி.ஹெச் தளங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷூம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பெ. விருமாண்டி இயக்கத்தில் வெளிவர இருக்கும் இந்த திரைப்படத்தை. 199 ரூபாய் கொடுத்து வீட்டிலிருந்தபடியே டிடிஎச்சில் இந்த திரைப்படத்தை பார்த்துக் கொள்ள முடியும்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியானதை தொடர்ந்து மக்களுக்கு இந்த படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் வெளியீட்டிற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் இந்த நேரத்தில் மக்களுக்கு இந்த படத்தை பார்க்க இணையத்திலும், டி.டி.ஹெச்சில் பதிவு செய்வதைப் பற்றி படக்குழுவினர் சமூக வலைத் தளங்களின் மூலம் நினைவூட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் விருமாண்டியிடம் பேச்சுக் கொடுத்த போது, ‘’‘அறம்’ படத்துக்காக ராமநாதபுரம் பக்கம் போயிருந்தேன். அந்த ஊரையும் மக்களையும் எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. நாமதான் ஒரே நாள்ல மக்கள் மனசப் புரிஞ்சி பழகுற கிராமத்து ஆளுதானே. அதனால அவங்ககிட்ட பேசிப்பார்த்தா கதையா கொட்டுது. அங்கே நடந்த ஒரு நிஜமான சம்பவம்தான் படமாகியிருக்கு. இந்தக் கதைக்குள்ள கூட இன்னொரு கதையிருக்கு. டைரக்டர் தாஸ் ராமசாமிகிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். ‘பிரமாதமா இருக்கு அண்ணே ’ன்னு சொல்லிட்டுப் போயிட்டார். ராத்திரி ‘அறம்’ தயாரிப்பாளர் ராஜேஷ் சார் போன் பண்ணி ‘விருமாண்டி, நல்ல கதை ஒண்ணு உங்ககிட்ட இருக்காம். எனக்குச் சொல்ல மாட்டீங்களா’ன்னு கேட்டார்.

அடுத்த நாளே ஓடிப் போய் கதை சொன்னேன். சொல்லி முடிச்ச உடனே படத்துக்கான வேலை கள் ஆரம்பமாகிவிட்டது. ஒரு நல்ல கதாநாயகனையும், கதாநாயகியையும் கொடுத்து படத்தை உடனே ஆரம்பித்து வைத்ததெல்லாம் பெரிய கொடுப்பினை. வசனம் எழுதின நண்பன் சண்முகத்தையும், அடையாளம் காட்டிய தாஸ் அண்ணனையும், வாய்ப்பு தந்த ராஜேஷ் சாரையும், கனவுக்கு உருவம் கொடுத்த சேதுபதி, ஐஸ்வர்யாவையும் காலத்துக்கும் மறக்க இயலாது.” என்றார்

மேலும் “நான் நடிகர் பெரிய கருப்புத் தேவரோட பையன். வாழ்க்கையின் அடித்தட்டு மக்களை ரத்தமும் சதையுமா பார்த்து வளர்ந்தவன். ஒருவேளை சாப்பாட்டுல இருக்கிற உழைப்போட அருமை தெரியும். சக மனுஷங்க படுகிற பாடு தெரியும். என்னுடைய ‘க/பெ ரணசிங்கம்’ படம் எமோஷனல் படம்தான். நாம் வெளியே பார்க்க சந்தோஷமா தெரிஞ்சாலும் உள்ளுக்குள்ள கஷ்டங்களை அடக்கிவெச்சுட்டு திரிவோம்.அது மாதிரியே நமக்கும் அரசு அதிகாரிகளுக்கும் அன்றாடம் நடக்கிற பிரச்னைகள், சீற்றங்கள், அதற்கான போராட்டம்னு இதுல அழகான வாழ்க்கை இருக்கு. அதற்காக போராடுகிற ஒரு பெண், அவளுக்குத் துணையாக கணவன்னு பெரிய வேகமெடுத்துப் போகும் கதை. யதார்த்தமாகவும் கமர்ஷியலாகவும் எமோஷனலாகவும் இந்தப்படத்தை உருவாக்கியிருக்கேன். நமக்கு பக்கத்தில் நடக்கிற விஷயங்களைப் பார்த்து கோபம் பொங்கும்.இதில் தைரியமாக வெளிப்படுகிற பெண்ணையும் ஆணையும் உருவகப் படுத்தியிருக்கேன். அத்தனை ஆவேசங்களையும் மீறி இதில் ஓர் அருமையான வாழ்க்கை இருக்கு. நாம் வாழ்ந்து பார்த்த, இன்னும் நிறையப் பேர் வாழ்ந்துகிட்டிருக்கிற அசல் வாழ்க்கையே இது…’’ என்று பெருமிதமாகச் சொன்னார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

கதை பொதுப் பிரச்னை என்பதும், மெயின் ரோல் ஹீரோயின் என்றாலும் படம் முழுக்க விஜயசேதுபதி வர்ந்து போல் காட்சி அமைப்புள்ள இப்படத்துக்கு ஓடிடியில் ஏக வரவேற்பு இருந்தே தீரும் என்று படக்குழு நம்புகிறது. ம்.. பார்ப்போம்.. இன்னும் இரண்டு நாட்கள்தானே! பார்த்து விடுவோம்!!

Related Posts

error: Content is protected !!