எனது பெயர் கமல்ஹாசன்! – ஸ்டெர்லைட் போராட்ட ஸ்பாட்டில் கமல் பேச்சு!.

எனது பெயர் கமல்ஹாசன்! – ஸ்டெர்லைட் போராட்ட ஸ்பாட்டில் கமல் பேச்சு!.

முத்து நகரான தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களின் போராட்டம் 49-ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதாவது தூத்துக்குடி மதுரை பைபாஸ் சாலையில் ஒரு ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது. இங்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்திக்காக ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டது.இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆலை மூடப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர் . இந்த போராட்டத்தில் மக்கள் நீதிமையம் கட்சி தலைவர் கமல் பங்கேற்று தனது ஆதரவினை தெரிவித்தார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மாணவர் களுக்குத் தான் தற்போது முதலில் போராட்ட உணர்வு வருகிறது. இது ஒரு நல்ல மாற்றம். காவிரிக்காகப் போராட ஆரம்பித்ததைப் போல் அரசியலிலும் இதே மாற்றத்தை மாணவர்கள் ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட இன்று நான் தூத்துக்குடிக்கு செல்கிறேன். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்துக்கு இன்று அழுத்தம் கொடுக்க வேண்டிய நாள். அதனால் மக்களுடன் சென்று போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். இது முக்கியமான கட்டம். காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் தேவைப்பட்டால் களத்தில் இறங்கிப் போராடுவோம். இது தொடர்பாக 4ஆம் தேதி திருச்சியில் பேசவுள்ளேன்” என்று தெரிவித்தார்.

அதையடுத்து தூத்துக்குடியில் போராட்டத்தில் பங்கேற்க வரும் வழியில் தனது ரசிகர்களிடம் காரில் இருந்தவாறு கமல் பேசிய போது: மக்கள் உயிரை பற்றி கவலைப்படாத தொழில் தேவையில்லை. மக்களின் குரல் தமிழக அரசுக்கு கேட்கவில்லை. மத்தியில் இருப்போருக்கு கேட்க வேண்டும். குற்றம் நிகழ்ந்துள்ளது. குற்றம் களைதல் அரசின் வேலை. இதனை அரசு செய்யவில்லை என்றால், மக்கள் செய்வார்கள்என்று அவர் பேசினார்.

மேலும் போராட்ட ஸ்பாட்டில் கமல் பேசுகையில், “எனக்கு கட்சி இருந்தாலும் தனி மனிதனாக வந்துள்ளேன். நான் இங்கு வந்துள்ளது தனி மனிதனாக. எனது பெயர் கமல்ஹாசன். நான் நடிகன் என்பதை விட நான் மனிதன். நான் தமிழன். இப்போது உங்களுககு நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த அநீதி வியாபார பேராசையின் ஒரு கோரமுகம். எனக்கு பல்வேறு செய்திகள் வருகின்றன. அவர்களிடம் பேசவில்லை. நேராக இங்கு வந்துவிட்டேன். நீங்கள் காசு கேட்பதாக சிலர் என்னிடம் கூறுகின்றனர். ஆனால், இவர்கள் அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுக்க தயாராக உள்ளனர். இதையும் நான் கேள்விப்பட்டதுதான். பிள்ளைக் கறி சாப்பிட்டால் தான் வியாபாரம் நடக்க வேண்டும் என்றால், அது நடக்கக்கூடாது. ஆலைக்கு எதிராக எனது குரல் எங்கெங்கு கேட்குமா அங்கெல்லாம் சொல்வேன். நான் ஓட்டுக்காக இங்கு வரவில்லை”என்று அவர் பேசினார்.

error: Content is protected !!