June 3, 2023

இலங்கை வானொலி வர்த்தக சேவையின் அறிவிப்பாளர் K.S. ராஜா!

ன்றைக்கு செவிட்டு மெசின் மாதிரி ஹெட் போனை மாட்டிக் கொண்டு பலர் கேட்கும் எஃப்.எம். ரேடியோக்களில் படபடவென மின்னல் வேகத்தில், மூச்சுவிடாமல் பேசுகிறார்கள். அவர் களுக்கெல்லாம் முன்னோடி கே.எஸ்.ராஜா. இலங்கை வானொலியின் சூப்பர் ஸ்டார் அறிவிப்பாளர் இவர்தான்.

“வீட்டுக்கு வீடு
வானொலிப் பெட்டிக்கருகே
ஆவலுடன் குழுமியிருக்கும் பெருமக்கள் அனைவருக்கும் உங்கள் அறிவிப்பாளன் K.S.ராஜாவின் அன்பு வணக்கம்!”

1970, 80களில் காற்றின் அலைகளில் தவழ்ந்து வந்த இலங்கை வானொலி வர்த்தக சேவைகளில் இந்த வாசகத்திற்கு இருந்த மதிப்பே தனி!

இவர் பேசுவதில் சொக்கிப்போன ரசிகர்கள், இவரின் குரலுக்காகவும் சொல்லுக்காகவும் ரேடியோவுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பார்கள்.

இலங்கை வானொலியின் கூட்டு ஸ்தாபனம் என்கிற அறிவிப்பே அத்தனை அழகு.அன்றைக்கு மக்களின் மனம் கவர்ந்த பாடல்களைக் கேட்க பேருதவி செய்தது, இலங்கை வானொலி நிலையம்தான்.

‘உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அவர் அறிவிப்பதற்கு ரேடியோ பக்கத்திலிருந்து கைத்தட்டுவார்கள் ரசிகர்கள். ‘நீ வரவேண்டும் என்று எதிர்பார்த்தேன்’ என்கிற சிவாஜி நடித்த ‘ராஜா’ படத்தில் இருந்து பாடல் ஒலிபரப்பாகும். அந்தப் பாட்டில் ‘ராஜா’ என்று பெண் குரல் ஒலிக்கும். ‘ஆம்… உங்கள் நண்பன் கே.எஸ்.ராஜா’ என்று அறிவிப்பு வர, பித்துப்பிடித்துப் போனார்கள் வானொலி ரசிகர்கள். மதுரக்குரல் மன்னன் என்று அழைத்தார்கள் இவரை. அறிவிப்பாளர்களின் அரசன் என்று புகழ்ந்தார்கள். அறிவிப்பு ஒருபக்கம் அள்ளும். அத்துடன் மக்களின் மனசுக்கு நெருக்கமான பாடல்களை ஒலிபரப்பப்படும். அந்தப் பாடல்களை ஒலிக்கும் நேரம்தான், மக்களின் மிகப்பெரிய ரிலாக்ஸ் நேரம்.

1983 இலங்கை, ஜூலை கலவரம்….. இந்தியா வந்த K.S.ராஜா, அப்போது இங்கு இயங்கி வந்த ஈழ இயக்கங்களுள் ஒன்றான ‘ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி’யில் இணைந்து செயற்பட்டார்.

1987 ஆம் ஆண்டில் ‘இலங்கை – இந்திய ஒப்பந்த’த்தைத் தொடர்ந்து இலங்கை திரும்பிய இவர் இலங்கை வானொலியில் தமது வழக்கமான பணிகளுக்கு திரும்பினார்!

இந்நிலையில், 1989ஆம் ஆண்டு கொழும்பில் இவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவரது உடல் கொழும்பு கடற்கரையில் இதே செப்டம்பர் 3ல் கண்டெடுக்கப்பட்டது. இவரது ‘நினைவு சமாதி’ கொழும்பு பொரல்லை மயானத்தில் உள்ளது.

தினமலர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இவரை நேரில் மீட் செய்த போது பேச்சுக் கொடுத்த போது கிடைத்த தகவல்கள் இதோ:

இயற்பெயர் ஸ்ரீஸ்கந்த ராஜா. அப்பா டாக்டர். அம்மா ஆசிரியை, சிறு வயதில் இருந்தே உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்று அம்மா தான் பழக்கப்படுத்தினாராம். அக்காக்கள் நால்வரும் டாக்டர் கள். முக்கியமாக, பிளாஸ்டிக் சர்ஜரியில். படிப்பு இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் லண்டன் பல்கலைக்கழகத்திலும். கணிதம் மற்றும் ரசாயனப் பட்டதாரி.

”1966-ல் கொழும்பு ராயல் காலேஜில் படிக்கும்போது, மாணவர் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னை எதிர்த்து நின்றவர் ஒரு சிங்களர். அந்த செயின்ட் தாமஸ், செயின்ட் பீட்டர்ஸ் பகுதிகளில் சிங்களர் கள்தான் அதிகம் என்றாலும், அவர்களும் தமிழரான என்னையே தெரிவு செய்தார்கள். (நடுநடுவே பயங்கரமான தும்மல். தமிழ்நாட்டு க்ளைமேட் ஏற்றுக்கொள்ளவில்லையாம்!)

”சிலோன் யுனிவர்சிட்டியில் கொஞ்ச நாட்கள் புரொஃபஸராகப் பணியாற்றினேன். எக்ஸாம் கவுன்சிலிலும் நியமித்தார்கள். அப்போதெல்லாம் பி.ஹெச்டி. வாங்க வேண்டும் என்றுதான் எண்ணியிருந்தேன். ‘ரேடியோவில் அறிவிப்பாளர் கேட்டு விளம்பரம் வந்திருக்கு. நீங்கதான் நன்றாகப் பேசறீங்களே. அப்ளை பண்ணுங்க’னு ஸ்டூடன்ட்ஸ் சொன்னாங்க.

அப்போதெல்லாம் பொதுவாக நாடகத்தில் பேசினவங்களைத்தான் தெரிவு செய்தார்கள். ஆனால், அறிவிப்பாளர் மயில்வாகனம் அவர்கள், எனது உச்சரிப்பினையும் குரல் வளத்தையும் கண்டுகொண்டு, என்னையே அந்தப் பணிக்கு நியமித்தார். எனது முன்னேற்றத்துக்கு அவருடைய உற்சாகமும் உறுதுணையும்தான் முக்கியக் காரணம்” என்றார் ராஜா.

நிலவளம் ரெங்கராஜன்