நடிகர் சங்கத் தேர்தல் : நாசர் அணி Vs பாக்யராஜ் அணி!
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி வருகிற 23ம் தேதி சென்னை எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலுக்கான வேட்பு மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படுகிறது. வேட்பு மனுதாக்கல் நாளை 8ம் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 10ம் தேதி கடைசி நாள். மனுக்களை 14ம் தேதி வரை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.. இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகிறது.
இந்த தேர்தலில் கடந்த முறை போட்டியிட்ட நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் இந்த ஆண்டும் போட்டியிடுகிறது. நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் கார்த்தி பொருளாளர் பதவிக்கும், துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸும் மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
இவர்களை எதிர்த்து மற்றொரு அணி உருவாகியுள்ளது.
நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார். விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் களமிறங்கி உள்ளார். குட்டி பத்மினி முதலில் விஷால் டீம் சார்பாக போட்டியிடுவதாக அறிவித்திருந்தார். பின்னர் அங்கிருந்து இந்த அணிக்கு வந்து விட்டார்.
செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், ஆர்த்தி, காயத்ரி ரகுராம், நடிகர்கள் ரமேஷ் கண்ணா, பரத், ஸ்ரீகாந்த், விமல் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்கள். ஆக
இம்முறையும் நடிகர் சங்க தேர்தல் மிகுந்த பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.