“புத்தகங்கள் நம் அறிவுக்கண்ணைத் திறக்கும் திறவுகோல்கள்” என்றார் ஓர் அறிஞர். அந்தத் திறவுகோல்களைச் சிலரிடமிருந்து பறித்து, உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக்கிய மாமேதை ஜோகன்னஸ் கூட்டன்பர்க் (Johannes Gutenberg). இன்று பிப்ரவரி 3, உலக வரலாற்றின் திசையையே மாற்றிய அந்த வரலாற்று நாயகரின் நினைவு தினம். ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை அறிவு என்பது ஒரு பூட்டிய அறைக்குள் சிறைப்பட்டிருந்தது; அந்தச் சிறையை உடைத்து அறிவைச் சனநாயகப்படுத்திய கூட்டன்பர்க்கின் வாழ்வும் போராட்டத்தையும் நினைவு கூர்வதே அவருக்கான நினைவஞ்சலி. ஆம்.. பல்வேறு புத்தகங்களை வாசிக்க வாசிக்கத்தான் மனுக்குலத்தின் அறிவு வளர்கிறது; ஆற்றல் பெருகுகிறது. ஆனால், புத்தகங்கள் என்பதே ஓர் அறியப் பொருளாக இருந்த காலத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்படித்தான் இருந்தது. ஒரு புத்தகத்தில் ஒரே ஒரு பிரதி மட்டும்தான் இருக்கும். அதுவும் கைகளால் எழுதப்பட்டு, செல்வந்தர்கள் மட்டுமே வைத்துக்கொள்ளக் கூடிய பொக்கிஷமாக இருந்தது. அப்போதுதான் அந்த வரலாற்று நாயகர் சிந்திக்கத் தொடங்கினார்: “செல்வந்தர்கள் மட்டும்தான் புத்தகங்களை வைத்திருக்க வேண்டுமா? ஒரு புத்தகத்தைப் பிரதி எடுத்து பல பிரதிகளாக உருவாக்கினால் எல்லோராலும் வாசிக்க முடியுமே!” அந்தச் சிந்தனைதான் இன்று நாம் காணும் நவீன உலகிற்கு வித்திட்டது. அவர்தான் ஜோகன்னஸ் கூட்டன்பர்க் (Johannes Gutenberg).

Manuscripts: கைகளால் எழுதப்பட்ட காலம்
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர் என்பதால் கூட்டன்பர்க்கைப் பற்றிய துல்லியமான குறிப்புகள் இல்லை. அநேகமாக அவர் 1398 அல்லது 1399-இல் ஜெர்மனியின் மெயின்ஸ் (Mainz) நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்தார். ஆரம்பம் முதலே அவருக்கு வாசிக்கக் கற்றுத்தரப்பட்டது. ஆனால், அப்போதிருந்த புத்தகங்கள் இப்போது இருப்பவை போன்றவை அல்ல. அவை கைகளால் எழுதப்பட்ட ‘எழுத்துப் படிவங்கள்’ (Manuscripts).
அவர் வளர்ந்து வந்த காலத்தில் ‘அச்சுப்பால அச்சுமுறை’ (Block Printing) அறிமுகமானது. ஒரு மரப்பலகையில் ஒவ்வொரு எழுத்தாகச் செதுக்கி, பின்னர் அதில் மை தடவித் தாளில் அழுத்தினால் ஒரு பக்கம் அச்சாகும். இது கைகளால் எழுதுவதை விட வேகமானது என்றாலும், ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு பலகையைச் செதுக்க வேண்டும்; அதை அடுத்த பக்கத்திற்குப் பயன்படுத்த முடியாது. இந்தச் சவாலைத்தான் கூட்டன்பர்க் முறியடிக்க நினைத்தார்.
ரகசிய ஆராய்ச்சியும் விடாமுயற்சியும்
எல்லோரும் வைத்துப் படிக்கும்படி புத்தகங்களை உருவாக்க வேண்டும் என்ற கனவுடன், ஒரு பாழடைந்த கட்டடத்தின் ஓர் அறையைச் சுத்தம் செய்துவிட்டு ரகசியப் பரிசோதனைகளைத் தொடங்கினார். அதிகாலையிலேயே வீட்டை விட்டு வெளியேறுபவர் இரவுதான் திரும்புவார். பல தோல்விகளைச் சந்தித்து, கைவசம் இருந்த பணமும் தீர்ந்து ஊக்கமிழந்த நிலையில் இருந்தபோது, செல்வந்தரான ‘ஜோகன் ஃபஸ்ட்’ (Johann Fust) என்பவரின் நட்பு கிடைத்தது.
ஃபஸ்ட் கொடுத்த பணத்தைக் கொண்டு, ‘Movable type’ எனப்படும் இயங்கக்கூடிய எழுத்துருவை உருவாக்கினார். ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தனி அச்சு என்று உருவாக்கினால், அவற்றை வேண்டியபடி மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதையும், பலகைக்குப் பதில் உலோகத்தாலான அச்சே சிறந்தது என்பதையும் கண்டறிந்தார்.
குட்டன்பெர்க் விவிலியம் (Gutenberg Bible)
1455-ஆம் ஆண்டு பிப்ரவரி 23-ஆம் நாள், நவீன அச்சு முறையில் உருவான உலகின் முதல் புத்தகம் வெளியானது. லத்தீன் மொழியில் இரண்டு தொகுதிகளில் பைபிள் வெளியானது. 300 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தில், ஒவ்வொரு பக்கத்திலும் 42 வரிகள் இருந்தன. சுமார் 200 பிரதிகள் அச்சிடப்பட்ட நிலையில், இன்று 22 பிரதிகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பைபிளின் ஒரு பக்கம் விற்பனைக்கு வந்தால்கூட அது நூறாயிரம் டாலர் வரை விலை போகும் எனக் கணக்கிடப்படுகிறது.

வெற்றியும், துரோகமும், சோகமும்
பாம்பெர்க் (Bamberg) புத்தகச் சந்தையில் தான் அச்சிட்ட பைபிள் பிரதிகளை 300 ஃபுளோரின்ஸ்க்கு (Florins) விற்றார். அது ஒரு குமாஸ்தாவின் 3 ஆண்டு சம்பளத்திற்குச் சமம். என்றாலும், கைகளால் எழுதப்பட்ட பைபிளின் விலையை விட இது குறைவு. ஏனெனில் அக்காலத்தில் ஒரு பைபிளைக் கையால் எழுத ஒருவருக்கு 20 ஆண்டுகள் தேவைப்படுமாம்!
புத்தகச் சந்தையில் கிடைத்த பணம் கடன் வாங்கிய பணத்தைத் திருப்பிக்கொடுக்கப் போதுமானதாக இல்லை. இதனால் பொறுமையிழந்த ஃபஸ்ட், நீதிமன்றத்தின் துணையுடன் கூட்டன்பர்க்கின் அச்சு இயந்திரத்தை அப்படியே அபகரித்துக் கொண்டார். உலகின் உன்னதக் கண்டுபிடிப்பைச் செய்தும், அதிலிருந்து எந்தப் பயனும் பெறாமல் ஏழ்மையிலேயே 1468-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் நாள் கூட்டன்பர்க் இயற்கை எய்தினார். அவர் ஒரு Franciscan தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார். அந்தத் தேவாலயம் இருமுறை இடிக்கப்பட்டதால், இன்று அவர் புதைக்கப்பட்ட இடம் எது என்பது கூட எவருக்கும் தெரியாது.
சீனா vs ஐரோப்பா: வரலாற்றின் பாடம்
கூட்டன்பர்க்கின் அச்சு இயந்திரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு ஐரோப்பாவும், சீனாவும் தொழில்நுட்பத்தில் சமமாகவே இருந்தன. ஆனால், அச்சு இயந்திரத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பா எல்லாத் துறைகளிலும் அபரிமித வளர்ச்சியை அடைந்தது. பழைய அச்சுப் பாலமுறையையே பின்பற்றிய சீனா பல துறைகளில் பின்தங்கிவிட்டது.
அதே சமயம் கூட்டன்பர்க் கண்டுபிடித்த பிறகுதான் நூலகங்கள் பெருமளவில் தோன்றின; அறிவைச் சுமந்து செல்லும் பணி எளிதானது. கிறிஸ்தவ மதத்தில் ‘Frattances’ கிளைகள் உருவானதற்கும் ஒரு வகையில் இவரே காரணம். சமயத் தலைவர்களிடம் மட்டுமே இருந்த பைபிள் சாமானியர்கள் கைகளிலும் தவழ்ந்தபோது, மக்கள் வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ள முற்பட்டனர்.
தோல்விகளைக் கண்டு கூட்டன்பர்க் துவண்டு போயிருந்தால் கடந்த ஐந்து நூற்றாண்டுகளின் உலக வரலாறே மாறிப்போயிருக்கும். இன்று நம் கைகளில் தவழும் ஒவ்வொரு புத்தகத்திற்கும் நாம் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
நிலவளம் ரெங்கராஜன்

