ஏர்டெல், வோடபோன் & ஜியோ உள்ளிட்ட எல்லா மொபைல் சேவைக்கான கட்டணங்களும் எகிறப் போகுதுங்கோ!

ஏர்டெல்,  வோடபோன் & ஜியோ உள்ளிட்ட எல்லா மொபைல் சேவைக்கான கட்டணங்களும் எகிறப் போகுதுங்கோ!

நம் நாட்டில் மொபைல் வணிகம் என்பது மாபெரும் சந்தையாக இருந்தாலும், தொலைத் தொடர்புத் துறை சற்று வலுவிழந்து இருக்கிறது. அதிக செலவுகள், அதிக வரி விதிப்புகள், மற்றும் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்குவதை இவர்களால் சமாளிக்க முடிய வில்லை. இந்திய அரசும் இத்துறைக்கு போதுமான ஆதரவைத் தரவில்லை. அலைக் கற்றை விற்பனை, வருவாய்ப் பங்கீடு, வரி விதிப்புகள் ஆகியற்றின் மூலம், வருவாய் ஈட்ட வேண்டும் என்று அரசாங்கம் நினைக்கிறது.

இதை சமாளிக்க முடியாத பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் மொபைல் சேவை கட்டணத்தை உயர்த்த போவதாக நவம்பர் 18ம் தேதி அறிவித்தன. அதை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் (Reliance Jio Infocomm) நிறுவனமும் தன் மொபைல் சேவை கட்டணங்களை சில வாரங்களில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘மற்ற மொபைல் ஆப்பரேட் டர் களை போல் இந்திய நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் தொழில்துறையை வலுப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம். மேலும் தரவு நுகர்வு அல்லது வளர்ச்சியை மோசமாக பாதிக்காத வகையில் அடுத்த சில வாரங்களில் கட்டணங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்போம்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டெலிகாம் வரிகளை மறு ஆய்வு செய்வது தொடர்பான ஆலோசனைகளை விரைவில் டிராய் மேற்கொள்ளும் என நம்புவதாகவும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் பல ஆண்டுகளாக வழங்கி வந்த இலவச அழைப்பு சேவையை ரத்து செய்து கடந்த அக்டோபர் மாதம் முதல் வாய்ஸ் கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் விதித்து வருகிறது. அதேசமயம் லாண்ட் லைன்களுக்கான அவுட்கோயிங் அழைப்புகள், ஜியோ நம்பர்கள் இடையேயான அழைப்புகள் தொடர்ந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தான் அரசுக்கு செலுத்த வேண்டிய சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (Adjusted Gross Revenue) குறித்து சுய மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோ நிறுவனத்திற்கு இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.990 கோடி லாபம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டை விட 45.4 சதவீதம் அதிகம். மேலும் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.9,240 கோடியில் இருந்து 33.8 சதவீதம் அதிகரித்து ரூ.12,354 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆனால் பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்கள் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டில் ரூ.73,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளன. அதன் காரணமாகவே வரும் டிசம்பர் மாதம் முதல் மொபைல் சேவை கட்டணத்தை உயர்த்த முடிவெடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்க்து.

Related Posts