பெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்!

பெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்களே- ஜெயமோகன்!

மனுநீதி பற்றிய விவாதத்தில் என் தரப்பைச் சொல்ல விரும்புகிறேன். சென்ற இருபதாண்டு களில் பல இடங்களிலாக நான் சொன்னவைதான் இவை. அனைத்தும் ஒரே தலைப்பின்கீழ் தொகுத்திருக்கிறேன்திருமாவளவன் அவர்கள் சொன்னது என்ன? அதை மூன்று அலகுகளாகப் பிரித்துக்கொள்கிறேன்.

அ. மனுநீதி பெண்களை இயல்பில் விபச்சாரிகள் என்கிறது
ஆ. மனுநீதி இந்துமதத்தின் அடிப்படைநூல்
இ. ஆகவே இந்துமதம் பெண்களை இயல்பில் விபச்சாரிகள் என்கிறது.

இதை அவர் எந்த தருணத்தில் சொல்கிறார்? மனுநீதி தலித் மக்களை இழிசினராக அடையாளப் படுத்தி ஒடுக்கச் சொல்கிறது. அதைப்பற்றிய விவாதத்தில் தலித்துக்களை மட்டுமல்ல, பெண் களையும்கூடத்தான் ஒடுக்கச் சொல்கிறது என்று சுட்டிக்காட்டும் பொருட்டு அதைச் சொல்கிறார்

அவர் சொன்னவற்றுக்குச் செல்வதற்கு முன்பு கேட்கவேண்டிய வினா ஒன்று உண்டு. அவர் ஏன் அதைச் சொல்லவேண்டும்? மனுநீதியை ஏன் இப்போது எதிர்க்கவேண்டும்? மனுநீதிதான் இன்று புழக்கத்தில் இருக்கிறதா? இந்துக்கள் அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறார்களா?

அதற்கான பதில் ஒன்றே. இன்றும் தலித்துக்கள் மேல் பிறப்புசார்ந்த இழிவைக் கற்பிக்கும் அத்தனைபேரும் மனுவையே மேற்கோள் காட்டுகிறார்கள். நீங்கள் இணையத்திலேயே பல பிராமண உபன்யாசகர்கள் பிராமணர்களின் பிறவிமேன்மை, தீண்டாமையின் அவசியம், பெண்களை வீட்டுக்குள் ஒடுக்கிவைக்கவேண்டியதன் தேவை, ஒவ்வொருவரும் பிறப்படிப் படையிலேயே தொழிலைச் செய்யவேண்டும் என்னும் நெறி, விதவை மறுமணம் என்பது பாவம் – என்றெல்லாம் பேசும் காணொளிகளைக் காணலாம். அவர்கள் அனைவரும் மனுவையே மேற்கோள்காட்டுகிறார்கள். மனுநீதியை ஒட்டி மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிற்காலத்தைய நெறிநூல்களை மேற்கோள் காட்டுகிறார்கள்.

“சாஸ்த்ரம்” என்று அவர்கள் சொல்வது மனுவைத்தான். மனுநீதி என்றுமே இந்தியாவெங்கும் பரவலாக புழக்கத்தில் இருந்ததில்லை. இந்தியாவின் மக்களில் தொண்ணூறு சதவீதம்பேர் குலநீதிகளால்தான் ஆட்சிசெய்யப்பட்டார்கள். ஆசாரங்களும் வழக்கங்களுமே நீதியை கட்டமைத்தன. மனுநீதி அரசவைகளில் அறுதியாக மேற்கோள்காட்டப்பட்டது. வைதிகமதம் சார்ந்த களங்களில் நெறியாக முன்வைக்கப்பட்டது.ஆனால் வைதிகர்களின் பேச்சு எடுபடும் இடங்களில் எல்லாம் அது முடிவுகளை தீர்மானித்தது.

அப்படி அவர்கள் மேற்கோள் காட்டும் மனுவை எதிர்ப்பது இங்குள்ள தலித் மக்கள் இயல்பாகச் செய்யக்கூடியதுதானே? மனசாட்சி உள்ளவர்கள் யோசியுங்கள். நீங்கள் அமெரிக்காவிற்குச் சென்று வாழ்கிறீர்கள். அங்கே நியோநாஜி குழுவைச்சேர்ந்த வெள்ளையர் சிலர் ஒர் இனவெறி நூலை மேற்கோள்காட்டி ‘இந்தியர்கள் பிறப்பிலேயே இழிவானவர்கள் .அவர்களை இழி தொழில் செய்யமட்டுமே அனுமதிக்கவேண்டும்’ என்று பேசிக்கொண்டிருப்பதை கண்டால் அந்நூலை விமர்சிக்க மாட்டீர்களா? அதை எதிர்க்க மாட்டீர்களா?

அதை அந்த வெள்ளையர் தங்கள் ஆதாரநூல் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? நீங்களும் அப்படியே எடுத்துக் கொள்வீர்கள் இல்லையா? அந்நிலையில் அந்நூல் வெள்ளையர்களின் ஆதார நூல் அல்ல என்று மறுத்து கண்டிக்க வேண்டியது யார் பொறுப்பு? அந்நூலை ஏற்காத, இனவெறி இல்லாத வெள்ளையர்களின் பொறுப்புதானே? அதைத்தானே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள முற்போக்கினர் செய்கிறார்கள்?

ஒரு வெள்ளையர் அந்நூலையோ, அதை வெள்ளையர்களின் ஆதாரநூல் என்று சொல்பவர் களையோ ஒரு சொல்கூட கண்டிக்காமல் நீங்கள் அந்நூலை எதிர்ப்பதை மட்டும் வெறிகொண்டு கண்டிக்கிறார் என்றால் எப்படி எடுத்துக்கொள்வீர்கள்? அந்நூலை வெவ்வேறு சமாளிப்புகள் வழியாக நியாயப்படுத்துகிறார் என்றால், அதிலுள்ள ‘நல்ல’ அம்சங்களை சுட்டிக்காட்டுகிறார் என்றால் அவர் யார்?

சில மாதங்களுக்கு முன் விஸ்வஹிந்து பரிஷத்தின் ஆர்.பி.வி.எஸ் மணியன் என்பவர் பேசும் ஒரு காணொளி இணையத்தில் உலவியது. அதில் அவர் ஒவ்வொருவரும் அவரவர் பிறப்பின் அடிப்படையில் வகுக்கப்பட்ட கல்வியையே கற்கவேண்டும் என்றும், அவரவர் அவரவர் இடத்தில் இருந்தால் பிரச்சினையில்லை என்றும் வாதிட்டிருந்தார். அதுவே மனுவின் ஆணை, அந்த மனுநீதியையே மோடி அரசின் புதியகல்விக்கொள்கை கொண்டுவருகிறது என்று அவர் சொன்னார்.

ஆர்.பி.வி.எஸ் மணியன் விஸ்வஹிந்து பரிஷத்தின் மூத்த தலைவர்களில் ஒருவர். அதை எத்தனைபேர் கண்டித்தார்கள் என்று பாருங்கள். ஒருசிலர் “அது அவர் ஒரு தனியரங்கிலே பேசினதுங்க” என்று சமாளித்தனர். பொதுமேடையில் அப்படியெல்லாம் பேசமாட்டாரம், கவனமாக இருப்பாராம். இன்றும் தனியரங்குகளில் மனுநீதியின் சாதிமேட்டிமையை பேசிக்கொண்டிருப்பவர்கள் ஏராளம். காணொளிகள் குவிந்துகிடக்கின்றன இணையத்தில்.மெல்லமெல்ல வெளிப்படையாகவே ‘நான் மனுவை ஆதரிக்கிறேன்’ என எழுதவும் தொடங்கிவிட்டனர்.

ஆர்.பி,வி.எஸ் மணியன் உட்பட சாதிவெறியர்கள் மனுநீதியை முன்வைத்துப் பேசும்போது அந்த அப்பட்டமான சாதிமேட்டிமைப் பேச்சை ஐநூறுபேர் அமர்ந்து மகிழ்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் நவீனக்கல்வி அடைந்தவர்கள், நகரமக்கள், சென்ற முந்நூறாண்டுகளில் உலகம் சென்றடைந்த ஜனநாயகம் சமத்துவம் போன்ற விழுமியங்களை அறிந்தவர்கள். அவர்கள் வெளிநாடு சென்றால் வெள்ளையர்களிடம் அவற்றையெல்லாம் எதிர்பார்ப்பவர்கள், அதற்காகப் போராடுபவர்கள். அவர்களுக்கு இந்த இரட்டைநிலை பற்றி வெட்கமே இல்லை எவர் இந்துமதத்தை இழிவு செய்கிறார்கள்?

திருமாவளவன் இந்துமதத்தின் விமர்சகர், எதிர்ப்பாளர். அவருடைய நிலைபாடு அது. விமர்சிக்க, எதிர்க்க அவருக்கு அவருடைய வாழ்க்கைசார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு. அக்காரணம் இருக்கும் வரை அந்த எதிர்ப்பு இருக்கும். அது இங்கே என்றுமிருந்தது. சென்ற இருநூறாண்டு களாக மனிதசமத்துவம் என்னும் கருத்து இங்கே எழுந்து வருந்தோறும் வலுவடைந்துள்ளது. எதிர்க்கக்கூடாது என எவர் சொல்லமுடியும்? எதிர்த்தால் வசைபாடுவோம் என்பதைப்போல ஜனநாயகவிரோதம் வேறு உண்டா?

இந்துமதத்தை இழிவுசெய்பவர்கள் இன்னமும் சாதிவெறியையும் ஆசாரவெறியையும் உமிழ்ந்து கொண்டிருக்கும் மேல்சாதிக் கீழ்மக்கள்தான். அவர்கள் இந்த மரபு அளிக்கும் மெய்ஞானத்தை, தத்துவநோக்குகளை, கலைச்செல்வங்களை , வாழ்க்கைநெறிகளை இழிவுசெய்கிறார்கள். அவை அனைத்துக்கும் மேலாக தங்கள் சீழ்பிடித்த சாதிவெறியை தூக்கி வைக்கிறார்கள்.

அதைவிட தங்களிடமிருக்கும் அந்த இருட்டை நியாயப்படுத்த இந்து மதத்தின் மெய்ஞானத்தை, தத்துவத்தை, கலைச்செல்வங்களை, வாழ்க்கைநெறிகளை திரித்து மேற்கோள்காட்டுகிறார்கள். உலகின் முன், இளைய தலைமுறைமுன் இந்த ஞானமரபும் மதமும் கீழ்மைகொண்டு நிற்கச் செய்கிறார்கள்

ஒரே வரியில் சொல்வதென்றால் ஸ்மிருதியின்பொருட்டு சுருதிகளை திரிக்கிறார்கள். அன்றாட வாழ்வின் ஆசாரங்களின் பொருட்டு ,அதில் கிடைக்கும் அற்ப உலகியல் லாபங்களின் பொருட்டு, கீழ்மைநிறைந்த ஆணவநிறைவின்பொருட்டு, ஞானத்தையும் மெய்மையையும் சிதைக்கிறார்கள். அது தத்துவநோக்கிலும் ஆன்மிகநோக்கிலும் பெரும்பிழை.மீளா இருளில் ஒடுங்கிக்கொண்டு மட்கிநாறச்செய்யும் பாதை.

அந்த காணொளிகள் ஒரு தலித்தின் உள்ளத்தில் என்ன பதிவை ஏற்படுத்தும்? ஆர்.பி.வி.எஸ். மணியன் சொன்னது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றால் அவர் பதவி வகிக்கும் அமைப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டாரா? இங்கே இந்துத்துவம் பேசுபவர்களில் எத்தனைபேர் அவரைக் கண்டித்தனர்? எல்.முருகன் என்ன சொன்னார்? அப்படிக் கண்டிக்காதவர்களுக்கு இங்கே பேச அறம் உண்டா என்ன? அறவுணர்ச்சிகொண்ட இந்துக்கள் முதலில் அவர்களை கண்டிப்போம். அவர்கள் இந்துக்களின் குரல் அல்ல, ஒரு தேங்கிப்போன பகுதியின் முடைநாற்றமன்றி வேறல்ல என்று ஓங்கிச் சொல்வோம்.அதன்பின் மேலே பேசுவோம்.

தலித்துக்கள் இங்கே இன்னமும் மனுநீதியே கோலோச்சுகிறது என்று நம்ப வழிவகுப்பவர்கள் இங்கே மனுநீதியை முன்வைத்து சாதிசார் மேட்டிமைத்தனத்தையும் பழமைவாதவெறியையும் பேசிக்கொண்டிருக்கும் கீழ்மக்கள்தான். அவர்களுக்கு எதிரான நடவடிக்கையாகவே மனு நீதியை திருமாவளவன் எதிர்க்கிறார். அதற்கான உரிமை அவருக்கு உள்ளது. அது அடிப்படை மானுட உரிமைக்கான குரல், தன்னை ஒடுக்கும் குரலை ஒருவர் எதிர்க்கக்கூடாது என்று சொல்வோமென்றால் அதற்கு நிகரான அநீதியும் ஆணவமும் வேறென்ன?

மனுநீதியும் பெண்களும்

இனி திருமாவளவனின் கூற்றுக்கு வருவோம். மனுநீதியில் பெண்கள் பிறப்பியல்பால் பாலியல் பிறழ்வுக்குச் செல்லும் மனம்கொண்டவர்கள், அதாவது விபச்சாரத்தன்மை கொண்டவர்கள், என்று இருக்கிறதா?

ஆம், பெண்களில் பெரும்பாலானவர்கள் பாலியல் மீறலுக்கான இயல்பு கொண்டவர்கள் என்றே மனுநீதி சொல்கிறது. பெண்களை இரண்டாம்நிலைப் பிறப்புகள், கட்டுப்படுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள் என்றே சொல்கிறது. வரிவரியாக மேற்கோள்காட்ட முடியும்.மொழியாக்கச் சிக்கலென்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டிவிட முடியாது. தெளிவாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, விளக்கப்பட்டுள்ளது. அதன் ஆதரவாளர்களால் மேலும் திட்டவட்டமாகவே பொருள் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால் மனுநீதி சொல்வது அதை மட்டும்தானா? இல்லை. மனுநீதி பெண்கள் குலம், குடும்பம், ஆசாரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டவர்கள் என்று சொல்லுமிடத்தில் அவர்கள் இயல்பில் ஒழுக்கநெறியை மீறும்தன்மை கொண்டவர்கள், ஆகவே கட்டுப்படுத்தப்படவேண்டியவர்கள் என்று சொல்கிறது. ஆண்களாலும் குடியாலும் ஆசாரங்களாலும் தெய்வங்களாலும் அவர்கள் காக்கப்படவேண்டும் என்கிறது. தந்தை கணவன் மைந்தனால் அவர்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், சுதந்திரத்திற்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்கிறது.

ஆனால் அதே மனுஸ்மிருதி நன்கு வகுக்கப்பட்ட குலம், குடும்பம், ஆசாரம் ஆகியவற்றின் சிறப்பைப் பற்றி பேசும்போது பெண்களால்தான் அவை நிலைநிற்கும் என்றும், பெண்களே குடும்பத்திற்கும் வருந்தலைமுறைக்கும் காவல் என்றும் சொல்லி அவர்களை தெய்வநிலைக்கும் கொண்டுசெல்கிறது.

[மேலும் ……]

Related Posts

error: Content is protected !!