ஜப்பான் – விமர்சனம்!

ஜப்பான் – விமர்சனம்!

னித்துவமான படைப்புகள் மூலம் கோலிவுட்டில் கவனிக்கத்தக்க டைரக்டர்களில் ஒருவராகிப் போன ராஜூ முருகன் இம்முறை கமர்ஷியல் ஹீரோவான கார்த்தியுடன் இணைந்து பக்கா அதிரடியான  படமொன்றை வழங்கி அசத்த முயன்றியிருக்கிறார். அதாவது கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபட்டு வாழக்கையை ஓட்டுபவனுக்கும் மனசாட்சி வேலை செய்யும், ஆசாபாசமெல்லாம் உண்டு என்பதை சொல்ல எந்தளவுக்கு மசாலா தேவையோ அந்தளவு மிக்ஸ் பண்ணி கொடுத்து இருக்கிறார் . இந்த ஜப்பானில் பக்கா ஆக்‌ஷன், காமெடி, சென்டிமெண்ட் என ஒரு சினிமாவுக்கு தேவையானவை எல்லாமே அளவாக இருக்கிறது..ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

கதை என்னவென்றால் சில வருஷங்களுக்கு முன்னால் திருச்சி லலிதா ஜூவல்லரி திருட்டு நடந்தது நினைவில் இருக்கிறது இல்லையா? அதே டைப்பில் கோவையில் மிகப்பெரிய நகை கடை ஒன்றின் சுவரில் துளையிட்டு 200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்தக் கொள்ளை சம்பவத்தை நாட்டின் மிகப்பெரிய திருடனான ஜப்பான் என்ற கார்த்திதான் செய்திருப்பார் என போலீசார் சந்தேகப்பட்டு. அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கின்றனர். அப்படி போலீசார் ஒரு பக்கம்  கார்த்தியை வலை வீசித் தேட, இன்னொரு பக்கம் கார்த்தி போலீசாரிடம் இருந்து எஸ்கேப் ஆகி தன் லவ்வர் அனு இமானுவேலுடன் ஒவ்வொரு இடமாக போய் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த திருட்டை கார்த்தி செய்யவில்லை என்று போலீஸூக்கு தெரிந்து விடுகிறது.. ஆனால், போலீஸ் தலைமையின் நெருக்கடியால், கார்த்திதான் திருடன் என்று முத்திரைக் குத்தி அவரை என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறது . கடைசியாக அந்த திருட்டை செய்தது யார்.? எதற்காக கார்த்தி இதில் சிக்கினார்.?? இறுதியில் என்ன நடந்தது என்பதை கூறுவதே ஜப்பான்.

நாயகன் கார்த்தியின் அசால்டான உடல்மொழி, என்னடா பொல்லாத வாழ்க்கை என்ற முணுமுணுப்புடன்  முனைவாயிலிருந்து பேசுவது எல்லாம் ரசிக்கவே வைக்கிறது. .கேரக்டரை உள் வாங்கி நடித்திருக்கிறார். கோமாளி போல் போட்டிருக்கும் துணிமணிகளும், அவர் ஓட்டும் வண்டியும் படு மாஸ். கடைசியில் அம்மா சென்டிமெண்ட் காட்சியில் நம்மையும் கொஞ்சம் கண் கலங்க வைத்தாலும், அவரின் கேரக்டரை இன்னும் அழுத்தமாக வடிவமைத்திருக்கலாம்.

ஹீரோயினாக வரும் அனு இம்மானுவேலுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை என்றாலும் திரைக்கதை ஓட்டத்துக்கு அவரது வேடம் உதவியாக இருந்திருக்கிறது. கார்த்தியுடன் படம் முழுவதும் பயணிக்கும்படியான கேரக்டரில் வரும் வாகை சந்திரசேகர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பைபிள் வசனங்கள் சொல்வது போல ‘பன்ச்’ எல்லாம் சொல்லி கவனம் பெற்றிருக்கிறார்.

கார்த்தியின் நண்பராகவும் மற்றும் வில்லனாகவும் வரும் ஜித்தன் ரமேஷ் அவருக்கான வேலையை செய்திருக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில் போலீசாக வருகிறார். அதிலும் கார்த்தியின் மிரட்டலுக்கு ஜெர்க் கொடுத்துப் பதறும் காட்சிகளில் எல்லாம் சிறப்பாகவே செய்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் கே.எஸ். ரவிக்குமார் மனதில் பதிகிறார். மிரட்டல் போலீசாக வரும் விஜய் மில்டன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாகவே செய்திருக்கின்றனர்.

கேமராமேன் கே.ரவிவர்மன் ஒளிப்பதிவு ஜப்பானை வேறு லெவலில் எக்ஸ்போஸ் செய்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு கைகொடுக்கிறது. அம்மா செண்டிமெண்ட் பாடல் அட்டகாசம்.

சமூக அக்கறை கொண்ட தரமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜுமுருகன் தன்னால் பக்கா கமர்ஷியல் அம்சங்களுடன் ஒரு படத்தைக் கொடுத்து பாஸ் மார்க் வாங்கி விட்டார் என்றே சொல்லலாம். , , இரண்டாம் பாதி வரும்போதுதான் ஜப்பான் ராஜூ முருகன் படம் என்பதை முழுசாக உணர முடிகிறது. வழக்கம் போல் அரசியலை கிண்டல் பண்ணும் வசனங்கள் ரசிக்கவே வைக்கின்றன. “ஓட்டு போடும் போது லாஜிக் பார்க்காம; ஓட்டை போடும் போது லாஜிக் பாக்குறீங்களா?”, “என்ன சொன்னாலும் நம்பற பொது ஜனமா நீ?”, “கால நக்கறதே ஏறி மிதிச்சு மேல போகத்தான்” தனது வசனங்கள் மூலமும், அதிகார வர்க்கங்கள், சமூக உடகங்கள் மூலம் பரவும் வதந்திகள், தற்போதைய ரசிகர்களின் கண்ணோட்டம், கமர்ஷியல் சினிமாவின் பரிதாபங்கள் என சகலத்தையும் தொட்டுக் காட்டி   க்ளைமாக்ஸ் காட்சியில் சொல்லப்படும் கதையும் அதற்காக எழுதப்பட்ட வசனங்களும் நச் என்று வழங்கி இருக்கும் டைரக்டர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் தீபாவளி ட்ரீட் பொறி பறந்திருக்கும்

மொத்தத்தில் இந்த ஜப்பான் -கவரவே செய்கிறான்

மார்க் 3.5/5

error: Content is protected !!