நம்ம பாரத தேசத்துடன் ஜம்மு காஷ்மீர் சட்டரீதியா இணைஞ்ச நாள் இன்று 27-10-1947
ரொம்ப காலமா தனி கொடி தனி ராஜாங்கம் என்று அல்ப்பறை செய்து கொண்டிருந்த பகுதிதான் .ஜம்மு காஷ்மீர்..அதுனாலே இந்தியா விடுதலை அடைந்த பிறகு இந்தியா கூடவும் சேர மாட்டேன் பாகிஸ்தான் சேராமல் தனி நாடாக செயல்படுவோம் என ஜம்மு காஷ்மீர் பகுதியை ஆண்டு வந்த ராஜ்புட் ராஜா ஹரிசிங் கூறினார்….!
அப்போது அக்டோபர் 2 ஆம் நாள் இந்தியாவோடு இணைந்தே ஆக வேண்டுமென ஷேக் அப்துல்லா குரலெழுப்பினார்…தனித்திருந்தால் ரஷ்ய..சீன நாடுகளுக்கு அடிமைப்பட நேரிடுமென சந்த் மகாஜன் ராஜாவை எச்சரிச்சார்…!
கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க, பிரிட்டிஷ் இந்தியாவை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று முஸ்லீம் லீக் கோரியது. அதன்படி, பிரிட்டிஷ் இந்தியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருந்த பகுதிகள் பிரிக்கப்பட்டு பாகிஸ்தான் உருவாகியது. சுதந்திரத்திற்கு முன்னால், பிரிட்டிஷ் இந்தியாவில் 570 சுதேச அரசுகள், பிரிட்டிஷ் ராணியின் ஆதிக்கத்தில் இருந்தன.
இந்த சுதேச அரசுகள் அவர்கள் விருப்பப்படி, இந்தியா அல்லது பாகிஸ்தான் நாட்டுடன் இணைந்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டனர். அதன்படி, 15 ஆகஸ்ட், சுதந்திர தினத்திற்கு முன்னால் 560 சுதேச அரசுகள் இந்தியாவுடன் இணைந்தன. ஜூனாகாத், ஜம்மு காஷ்மீர், ஹைதராபாத் ஆகியவை இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணையவில்லை.
ஜம்மு காஷ்மீர் அரசர், மகாராஜா ஹரிசிங் இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஆனால், பெரும்பான்மையான மக்கள் முஸ்லீம் மதத்தை தழுவியவர்கள். இந்தியக் குடியரசுடன் காஷ்மீரை இணைத்தால், மன்னர் பதவியை இழக்க நேரிடும் என்பதால் மகாராஜா, காஷ்மீரை தனி நாடாக வைத்துக் கொள்ள விரும்பினார். வியாபாரம், போக்குவரத்து ஆகியவை தடையில்லாமல் நடக்க மகாராஜா, பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்தியாவுடன், எந்த உடன் படிக்கையும் செய்து கொள்ளவில்லை.
அப்போது கபாய்லி மலைவாழ் பகுதியினரின் போரெடுப்பு துவங்கியது…உடனே காஷ்மீரை காக்க ராஜா ஹரிசிங் ஜவஹர்லால் நேருவை வேண்டிக்கொண்டார்… அப்போது இந்திய படை காஷ்மீர் செல்லும்போது உருவான ஒப்பந்தப்படி ஜம்மு காஷ்மீர் இந்தியாவோடு ஒரு பகுதியாக இணைந்தது… 1947-ம் ஆண்டு இதே நாள் அமர் மாளிகையில், அன்றைய ஆளுனர் மவுண்ட்பேட்டன், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ள, மகாராஜா ஹரி சிங் காலத்தில் எழுத்துப் பூர்வமாக இருவரும் ஒரு மனதாக ஒப்புக்கொண்டனர். அப்போது நேரு பிரதமராக இருந்தார்.
இந்த இணக்கத்திற்கான தினத்தினை (accession day) ஜம்மு காஷ்மீர் மக்கள் கோலாகலமாக கொண்டாடுவார்களாம். இதில் இருந்தே அவர்கள் இந்தியாவுடன் இணைந்திருப்பதை எவ்வளவு விரும்புகின்றனர் என்று தெரிகின்றது.தலைமைச் செயலகத்தில் மட்டுமின்றி, ஒவ்வொரு வீட்டிலும், கடைகளிலும் இந்தியக் கொடியை ஏற்றி மகிழ்வர். வருடம் தவறாமல் இந்த தினத்தை கொண்டாடுவதால் இந்தியாவுடன் பிரிக்க முடியாத உறவை வளர்த்து வருகின்றது ஜம்மு காஷ்மீர்.