ஜாக்டோ ஜியோ போராட்டம்: இப்போதைக்கு வாபஸ்! – காரணம் தெரியுமா?

ஜாக்டோ ஜியோ போராட்டம்: இப்போதைக்கு வாபஸ்! – காரணம் தெரியுமா?

கடந்த 9 நாட்களாக தொடர்ந்து வந்த ஜாக்டோ – ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல் அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து இருந்தனர். இந் நிலையில், பள்ளித் தேர்வுகள் தொடங்க இருப்பதை கருத்தில் கொண்டு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக ஜாக்டோ – ஜியோ தெரிவித்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இம்முடிவுக் குறித்து ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறுகையில், முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் பேசவில்லை. வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்த பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்திய போது முதல்வர் சந்தித்து பேசுவார் எனக் கூறினார். அதனை தான் கேட்கிறோம். ஆனால், இது நாள் வரை பேச்சு வார்த்தை நடத்தவில்லை. இத்தனைக்கும் ஆசிரியர், அரசு என இரு தரப்பும் ஒரு மித்த கருத்தில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். ஆனால், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல், நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதே சமயம் பிப்., மாதத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொது மற்றும் செய்முறை தேர்வு துவங்குவதால் மாணவர்களின் நலன், பெற்றோரின் உணர்வு, முதல்வர் அழைப்பு, கட்சியினர் வேண்டுகோள், நீதிபதியின் கருத்துகளை ஏற்று போராட்டத்தை தற் காலிகமாக வாபஸ் பெறுகிறோம். கோரிக்கை அப்படியே உள்ளது. போராடிய நிர்வாகிகள் சிறையில் உள்ளனர்.

ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த பணியிடங்களை காலியாக அறிவித்து மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். நாளை (ஜன.,31) முதல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் வேலைக்கு திரும்புவோம்” என்று தெரிவித்தனர்

error: Content is protected !!