பெட்ரோல் குண்டுதானே!…சேதம் அதிகமில்லையே.?-என்பது விஷயமல்ல!
கோவையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதாக செய்திகள் வந்தபோது, இது பாஜகவினரின் சுயவேலைகளாக இருக்கும் என்றுதான் நினைத்தேன்.ஏனென்றால், இதற்கு முன்னால் தன் பைக்குக்கு தானே தீவைத்துக்கொண்டது, பெட்ரோல் குண்டு எறிந்துகொண்டது போன்ற சம்பவங்களை எல்லாம் நடத்திக்காட்டியவர்கள் சுய சேவக்குகள். பெட்ரோல் குண்டு வீசிய வழக்குகள் 5, பேருந்தின் கண்ணாடி உடைத்த வழக்கு 1 – ஆக மொத்தம் 6 வழக்குகள். இரண்டு சம்பவங்களில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இருவரும் எஸ்டிபிஐ கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் என்கிறது காவல் துறை.
யார் செய்திருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பெட்ரோல் குண்டுதானே… சேதம் அதிகமில்லையே… என்பது விஷயமல்ல, அடுத்து இது எவ்வளவு பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதுதான் விஷயம். மூளைசலைவைக்கு ஆளான இரண்டு முட்டாள்களின் செயல்கள், சமூக நல்லிணக்கத்தை குலைப்பது மட்டுமல்ல, முஸ்லிம் சமுதாயத்துக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும். இதுபோன்ற செயல்கள் நடக்காமல் இருப்பது முஸ்லிம்களின் கையில்தான் இருக்கிறது.
ஜமாத் போன்ற அமைப்புகளும், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிந்தைய சொற்பொழிவுகளிலும் வன்முறை வழி தவறு என்ற சேதியைப் பரப்பலாம். ஆனால், அவை மட்டுமே போதாது. “இந்தப் பெரிசுகளே இப்படித்தான்…. என்ன நடந்தாலும் சாந்தி சமாதானம்னு பேசிட்டு கிடக்கும்” என்பதான சிந்தனைகள் துடிப்பான இளசுகள் மத்தியில் வருவது இயல்பு. சம்பந்தப்பட்டவர்கள் மீது பல்வேறு சட்டங்களின்கீழ் வழக்குகள் பாயும். இரண்டு சமூகங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்த முனைந்தது அதில் முக்கியமாக இருக்கும்.
எனவே, பெரும் பொறுப்பு பெற்றோர், குடும்பத்தினர் கையில்தான் இருக்கிறது. தம் பிள்ளைகள் யாருடன் சுற்றுகிறார்கள், என்ன மாதிரியான அரசியல் பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கவனிப்பது முக்கியம். ஆரம்பத்திலேயே கண்டறிந்து அறிவுறுத்தி அடக்கி வைப்பது அவசியம். இல்லையேல் பிள்ளைகள் சிறையிலும் குடும்பம் வெளியிலும் வேதனைப்பட்டுக்கொண்டிருப்பதே மிஞ்சும். யாரோ நான்கு பேர் செய்த குற்றத்துக்காக நாற்பது லட்சம் முஸ்லிம்களும் அவப்பெயரை சுமக்க நேரும்.
இன்னொரு பக்கம் தமிழ்நாடு அரசு பெரும் சிக்கலை சந்திக்க நேரும். பாஜக இதைத்தான் எதிர்பார்க்கிறது. தேர்தலில் வெற்றியே காண முடியாது என்று உறுதியாகத் தெரிந்த பாஜக, தமிழ்நாட்டில் எப்படியாவது குழப்படி செய்ய வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறது. வல்லூறுபோலக் காத்திருக்கிறது. அதற்காக கலவரம் செய்தாலும் பரவாயில்லை, சில உயிர்கள் போனாலும் பரவாயில்லை என்பது அவர்களுடைய டிஎன்ஏவிலேயே இருக்கிறது. அதனால்தான் ஏதேனுமொரு பிரச்சினையை கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள். ஊடகங்களும் அவர்களை கேள்வி கேட்காமல் சொன்னதை அப்படியே வெளியிட்டுப் பிரபலப்படுத்திக் கொண்டுள்ளன.
இந்தச்சூழலில் முஸ்லிம்களுக்கு, குழுக்களாகப் பிரிந்து நின்று அடித்துக்கொள்ளும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு, அரசியல் கட்சிகளுக்கு, மற்ற எவரையும்விட முக்கியப் பொறுப்பு இருக்கிறது.
பி.கு. – எவனோ ரெண்டு முட்டாப்பயலுக செஞ்ச வேலைக்கு நாங்க சிலுவை சுமக்கணுமா என்போர் அப்படிக்கா போகவும்.