போலீஸ் SSI யை விட அந்த டிஐஜி பேசியது பெரும் தவறு!

”போலீசாரை விளாசிய” “வெளுத்து வாங்கிய” என்றெல்லாம் தலைப்பிட்டு டிஐஜி வாக்கிடாக்கியில் பேசியது செய்தி சானல்களில் வைரல் ஆகி வருகின்றது.டிஐஜி வாக்கிடாக்கியில் பேசுவதெல்லாம் வெளியில் வருவது அல்லது திட்டமிட்டு வெளியிடப்படுவது காவல்துறைக்கு எவ்வளவு பெரிய இழுக்கு என்று புரிந்துதான் இதெல்லாம் நடக்கின்றதா எனத் தெரியவில்லை. யார் மூலமாக வெளியிடப்பட்டிருந்தாலும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவரிடம் ஒரு பெண் SSI பேசியதற்கும், பெண் ஆய்வாளர் மற்றும் பெண் SSI குறித்து டிஐஜி வாக்கிடாக்கியில் பேசுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை.
“என்ன வேலைல இருந்தாலும் தொரத்திவிடுங்க” ”இன்ஸ்பெக்டர்னு சொல்றதுக்கு வெட்கமா இல்லையா” “அயோக்கியத்தனம்” “வர்றேன் ஒருநாள் இன்ஸ்பெக்ஷனுக்கு அப்ப இருக்கு உங்களுக்கு” இதையெல்லாம் வாக்கிடாக்கியில் பயன்படுத்த சட்டம் அனுமதிக்கின்றதா?
அந்த பெண் SSI மீது நிச்சயமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் ஆய்வாளர் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். அந்த நடவடிக்கை ஆணையில் பயன்படுத்தப்படும் சொற்களையே, உரையாடலுக்கும் பயன்படுத்த ஒரு உயர் அதிகாரியால் இயலாதபோது, அதே போன்றதொரு சொற்களைத்தான் காவல்நிலைய அலுவலர்களும் பொதுமக்கள் மீது பயன்படுத்துக்கின்றனர்.
காவல்நிலையத்தில் இருக்கும் ஒரு காவலர் பொது மக்களிடம் காட்டும் ஆணவம், அகந்தை என்பது அவர்களுக்கு வீட்டிலிருந்து, பள்ளியிலிருந்து, கல்லூரியிலிருந்து மட்டுமே கற்றுக்கொடுக்கப்பட்டவையல்ல.
பெரும்பாலும் அதே காவல்துறையில் மேலிருந்து கீழே என காலம் காலமாகக் கற்றுக்கொடுக்கப்பட்டவை மட்டுமே.
முன் குறிப்பு:
அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக சுமதி என்பவர் பணியாற்றி வருகிறார். அவரிடம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளித்துள்ளார். அந்த பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையம் வருவது குறித்து தொலைபேசியில் எஸ்.எஸ்.ஐ சுமதியிடம் பேசுகிறார். அப்போது அந்த பெண்ணை அவமதித்து எஸ்.எஸ்.ஐ.சுமதி பேசுகிறார். இது குறித்து அந்த பெண் டிஜிக்கு புகார் தெரிவிக்க, எஸ்.எஸ்.ஐ.சுமதி பேசிய அந்த ஆடியோவை, திருச்சி சரக டி.ஐ.ஜி வருண்குமார் வெளியிட்டு, அந்த காவல் நிலைய காவலர்களையே வாக்கி டாக்கியில் சென்று நேரடியாக கண்டித்தார்.
அப்போது, அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், எஸ்.எஸ்.ஐ., சுமதிக்கு ஆதரவாக, ஆமாம் சார் கோர்ட் டூட்டி பார்க்கிறார், ஏதோ தெரியாமல் பேசிவிட்டார் என பதிலளித்தார். எஸ்.எஸ்.ஐ., பேசியதை தவறு என்று சொல்லாமல், அவர் தெரியாமல் பேசி விட்டார் என்று இன்ஸ்பெக்டர் கூறியதால், கோபமான டி.ஐ.ஜி., வருண்குமார், ‘இதில் முதல் குற்றவாளி நீங்க தான். அவர் பேசியதை தவறு என்று சொல்லாமல் தெரியாமல் பேசி விட்டார் என்கிறீர்களே.. வெட்கமாக இல்லை உங்களுக்கு இன்ஸ்பெக்டர் என்று சொல்லிக் கொள்ள… தெரியாமல் பேசி விட்டார் என்று சொல்லலாமா?’ என்றார்.
அவர் அமைதியாக இருந்ததால், ‘வாக்கி டாக்கி’யில் பதில் சொல்கிறீர்களா; நேரில் வந்து நிற்க வைக்கவா’ என்று மீண்டும் கடுமையாக டி.ஐ.ஜி., பேசினார். அவர் அவ்வாறு பேசியதும், ‘தப்பு தான் சார்… வார்ன் பண்ணி விடுகிறேன்’ என்று இன்ஸ்பெக்டர் கூறினார். தொடர்ந்து பேசிய டி.ஐ.ஜி., ‘உடனடியாக அந்த அம்மாவை ரேஞ்ச் ஆபீசுக்கு வரச் சொல்லி, புகார்களை வாங்க சொல்லுங்கள்.
எந்த டூட்டியில் இருந்தாலும் அவரை துரத்தி விடுங்கள். அதற்கான உத்தரவை அனுப்பி வைக்கிறேன். அப்புறம் கன்னியாகுமரி, தர்மபுரி போன்ற மாவட்டங்களுக்கு அனுப்புறேன்’ என்றார். அதன்பின், உதவி ஆய்வாளர் சுமதியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி டி.ஐ.ஜி வருண்குமார் உத்தரவிட்டிருக்கிறார்.மேலும், அவருடைய அலுவலகத்தில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, வரக்கூடிய நபர்களிடம் கனிவாகப் பேசிப் புகார் பெறும் வகையில் பணியை உதவி ஆய்வாளர் சுமதிக்கு ஒதுக்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி, இதுபோன்று ஒழுங்கீனமாக புகார்தாரர்களிடம் பேசுவது தொடர்பான ஆடியோ கிடைத்தால், அவற்றையும் ஓபன் மைக்கில் வெளியிடுவேன் என்று திருச்சி சரக காவல்துறை அதிகாரிகளுக்கு ஓபன் மைக்கில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். திருச்சி டி ஐ ஜி வருண் குமாரின் இந்த அதிரடி செயல் காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.