ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களை அனுப்பி இஸ்ரோ புதிய சாதனை !

ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களை அனுப்பி இஸ்ரோ புதிய சாதனை !

ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 20 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. 20 செயற்கைகோள்களை அனுப்பி இந்தியா சாதனை படைத்து உள்ளது. பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் செலுத்தியதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

isro

பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் இந்தோனேசியா, ஜெர்மனி, கனடா, அமெரிக்கா உள்பட 17 வெளிநாட்டு செயற்கைக் கோள்களையும், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த 1.5 கிலோ எடை கொண்ட ‘சத்தியபாமா சாட்’, புனே என்ஜினீயரிங் கல்லூரியின் ‘ஸ்லயம்’ மற்றும் ‘கார்டோ சாட்-2’ செயற்கைகோள்கையும் சுமந்து சென்றது.

முதன்மை செயற்கைகோளான ‘கார்டோ சாட்-2’ பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சாலை போக்குவரத்தை கண்காணித்தல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இந்த செயற்கைகோளின் எடை 727.5 கிலோ. இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 505 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள். பி.எஸ்.எல்.வி. சி-34 நவீன மோட்டார் கருவிகள் பொருத்தப்பட்ட எக்ஸ்.எல். வகையை சார்ந்த 14-வது ராக்கெட் ஆகும். இதன் எடை 320 டன். உயரம் 44.4 மீட்டர். இந்திய வரலாற்றில் முதன் முறையாக 20 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-34 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “
மக்களுக்கு பயன்படும் வகையிலான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டத்தை மீண்டும் ஒரு முறை நமது விஞ்ஞானிகள் சாதனை படுத்தி உள்ளனர். விண்வெளி ஆய்வில் பிற நாடுகளுக்கும் உதவும் வகையிலான திறன் கொண்ட ராக்கெட்டை பல ஆண்டுகளாக நமது விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றன.இது தான் நமது விஞ்ஞானிகளின் தனித்திறன் ஆகும்.

ஒரே நேரத்தில் 20 செயற்கைகோள்களை அனுப்பி இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. அதற்காக நமது விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். சென்னை மற்றும் புனே மாணவர்கள் வடிவமைத்த செயற்கைகோள்களும் இன்று ஏவப்பட்டுள்ளதை பார்க்கும் போது உற்சாகம் அளிக்கிறது. இது என்னை மிகவும் கவர்ந்து விட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

error: Content is protected !!