ஜி.எஸ்.எல்.வி-மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

ஜி.எஸ்.எல்.வி-மார்க்-3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஆகிய இரண்டு வகை ராக்கெட்கள் மூலம் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. எடைகுறைவான செயற்கைக் கோள்களை பிஎஸ்எல்வி ராக்கெட் மூலமாகவும் 2.5 டன் வரை எடை உள்ள செயற்கைக்கோள்களை ஜிஎஸ்எல்வி மார்க்-2 ராக்கெட் மூலமாகவும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது.இருப்பினும் 2.5 டன்னுக்கு மேல் எடை கொண்ட செயற்கைக் கோள்களை ஏவும் திறன் கொண்ட ராக்கெட்கள் இஸ்ரோவிடம் இல்லை. குறிப்பாக தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் பெரும்பாலும் அதிக எடை கொண்டவையாக இருக்கும். அதுபோன்ற செயற்கைக்கோள்கள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து ஏரியன் வகை ராக்கெட்கள் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், 4 டன் வரையிலான அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்வதற் காக ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக்கெட்டை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. 43.43 மீட்டர் உயரம் உடையது. அதிநவீன கிரையோஜெனிக் இன்ஜின் தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது. இந்த ராக்கெட் 4 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை புவிநிலைச் சுற்றுவட்ட பாதையில் (Geosynchronous transit orbit) நிலைநிறுத்தும். 10 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை பூமியின் தாழ்வட்டப் பாதையில் (Low Earth Orbit) நிலைநிறுத்தும். இந்த ராக்கெட் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-1 ராக் கெட்டானது, 3,136 கிலோ எடை கொண்ட ஜிசாட்-19 எனப்படும் தகவல் தொடர்பு செயற்கைக் கோளை சுமந்து கொண்டு தனது முதல் பயணத்தை இன்று தொடங்க உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-வது ஏவுதளத்திலிருந்து இன்று மாலை 5.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த வகை அதிதிறன் ராக்கெட் தன் முதல் பயணத்தை ஜி.சாட்-19 செயற்கைக் கோளுடன் மேற்கொண்டது. இன்று மாலை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

இந்த செயற்கைக்கோள் நவீன வசதிகளுடன் கூடிய டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டது. இது பூமிக்குப் படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்தை சீரமைத்தல், சாலைப் போக்குவரத்தை ஒழுங்கு செய்தல், நிலம், புவி தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.இதன் மூலம் பவர் ராக்கெட்டை விண்ணுக்குச் செலுத்தும் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா, சீனா, ஜப்பான் ஆகியவற்றுடன் இந்தியாவும் இணைந்துள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த வெற்றிகரமான முயற்சிக்காக ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானிகளை பாராட்டியுள்ளனர். இன்றைய தினம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று ஐஎஸ்ஆர்ஓ சேர்மன் ஏ.எஸ். கிரண் குமார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!