iPhone எனும் காதலி!!

iPhone எனும் காதலி!!

வனாவது ஒரு செல்ஃபோனை, காதலி என்பானா? ஆம்! இருக்கிறார்கள். உலகில் பலகோடி பேர் ஐஃபோனைக் காதலிக்கும் அடிமைகளாக இருக்கிறார்கள். முதன் முதலில் எனக்கு ஐஃபோன் அறிமுகமானபோது, அதன் மாடல் 4. ஒரு எழவும் புரியவில்லை. அதை ஆபரேட் பண்ணவும் தெரியவில்லை. துபாயில், கடையில் திருப்பிக் கொடுக்கச் சென்றபோது, எக்ஸ்சேஞ்சாக ஐபாட் வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் கடைக்காரர். 2007 ஆம் வருடம், நான் எனதை மாற்றிக் கொள்ள, கூட வந்திருந்த பாரதிராஜா ‘எனக்கும் ஒண்ணு வாங்கித் தா!’ என்றார். ‘நீங்க உபயோகிக்கிறீங்களா ?’ என்றதற்கு ‘ஜனனி உன்னை, நல்ல கடையில் வாங்கித் தரச் சொல்லி மெசேஜ் செய்திருக்கிறாள்!’ என்றார்.

முதல் முறை ஐபாடை உபயோகிக்கத் தொடங்கினேன். 80 ஜிபி மெமரி. வர்ஜ்ஜியா வர்ஜ்ஜியமில்லாமல் அனைத்துப் பாடல்களையும் ஐபாட் உள்ளே அடைத்து, அதை ப்ளே லிஸ்ட்டில் போட்டு, ஹெட்ஃபோன் வழியே கேட்பது ஆனந்தமாக இருந்தது.

தொடர்ந்து, 2016 இல் எனது பிறந்த நாள் அன்று லாஸ்ஏஞ்சலஸில் இருந்த போது, மகன் ஐபாட் 9, 60 ஜிபி, சகல வசதிகளுடன், எனக்குப் பரிசளித்தான். பெரிய அளவில் ஐஃபோன்கள் என்னை ஈர்க்கவில்லை என்றாலும், ஐஃபோன் 13 வெளியான 2021 ஆம் ஆண்டு முதல் அது குறித்த விவரங்களை சேகரிக்கத் தொடங்கியதும்தான் ஐஃபோன் எத்தனை பெரிய ராட்சசன் எனத் தெரிந்தது.

ஐஃபோன்களின் விசேஷமே, அது க்ராஷ் ஆவதில்லை, மற்றும் பேட்டரி லைஃப் என்பதுதான். ஆடம்பரமற்ற ஒரு சிறு சாதனம் ஃபோட்டோ, மற்றும் வீடியோ எடுக்கும் உலகின் மிகச் சிறந்த உபகரணம் என்பது புரிந்தது.

ஐஃபோன் கொண்டு ஒரு சினிமா எடுக்கலாம். அதுவும் 4k வில். பலரும் இதில், சிறு படங்களுக்காகச் செய்திருந்தாலும், ‘High Flying Bird’ எனும் முழு நீள அமெரிக்கப் படம் ஐஃபோனில் உருவாகி, ஹாலிவுட்டைத் தெறிக்க வைத்து, ஆஸ்கார் ஜூரிகளை அதிர வைத்தது. ஐஃபோனின் ஆதர்ச நாயகன் கிரிஸ்டோஃபர் நோலன், பல படங்களை லோ பட்ஜெட்டில் எடுத்து அசத்தி உள்ளார்.

போதாக் குறைக்கு, உலகின் முதல் நட்சத்திர இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க், ஒரு பாடலை, அவருடைய மனைவியின் உதவியோடு மட்டும் எந்த லைட்டிங்கும், செட்டும் போடாமல் கறுப்பு வெள்ளையில் ஐஃபோன் 13 ஐக் கொண்டு எடுத்து யூட்யூபில் வெளியிட்டு, ஐஃபோனின் பெயரை ஆகாசத்திற்கு போன மாதம் படம் பிடித்து உயர்த்தி இருக்கிறார்.

ஐஃபோனின் புதிய மாடலான 14 இரண்டு நாட்களுக்கு முன் வெறி பிடித்த ரசிகர்கள் முன்னிலையில் வெளியானது. செப் 17 அன்று வெளியான ஐஃபோன் மாடல், கடந்த நாலு நாட்களில் மொத்தம் 97 லட்சம் ஃபோன்கள் விற்றுத் தீர்ந்துள்ளது.

ஐஃபோன் எப்போதும் நான்கு வேரியேஷன்களை ஒரே சமயத்தில் வெளியிடும். இந்த முறை ஐஃபோன் 14, ஐஃபோன் 14 ப்ளஸ், ஐஃபோன் 14 ப்ரோ மற்றும் ஐஃபோன் 14 ப்ரோ மேக்ஸ் என நாலு மாடல்களை வெளியிட்டுள்ளது. இந்திய விலையில் ஐஃபோன் 14 ₹ 89000/- மற்றும் 512 ஜிபி ஐஃபோன் ப்ரோ மேக்ஸ் 14 ₹1,69,000/-

இந்தியாவில் டாடாவின் க்ரோமாதான் அதன் முதன்மை விற்பனைப் பிரதிநிதி. நேற்று காசுடன் க்ரோமா சென்று, ப்ரோ மேக்ஸ் வாங்கலாம் என்று போன போது, ‘ஸ்டாக் இல்லை’ என்றார்கள். எரிச்சலுடன் ‘அதுக்குள்ளேவா? எத்தனை விற்றீர்கள்?’ என்றேன். ‘தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 7000!’ என்றார்கள். ‘மூணு நாள்ல்லேயேவா?’ ….. ‘ப்ரிபுக்கிங் சார்!’ என்றனர்…

உலகெங்கும் ஐஃபோன் வெளியீட்டு நாளை தீபாவளி, பொங்கல் நாள் போல எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்! விழா எடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஐஃபோனின் அருமை பெருமைகளை யூட்யூபில் யார் பதிந்தாலும் 40k லைக் கேரண்டி. ஏன் வாங்குகிறார்கள்? எதற்காக இரண்டு வருடங்களில் மாற்றிக் கொள்கிறார்கள், கையில் ஐஃபோன் இருப்பதில் என்ன ஆனந்தம் என்று தெரியாமலேயே அதன் அடிமையாகிப் போனோர் பல கோடிப் பேர்…. ஒரு ஐஃபோன் வாங்கி, அதைக் கற்றுக் கொள்வதற்குள் அடுத்த மாடல் வெளியாகி விடுகிறது.

ஆனால் ஒன்று நிச்சயம். ஐஃபோனின் புதிய காமிரா சௌகர்யங்களால் இனி குறைந்த பட்ஜெட் படங்கள் நிறைய வரும். ஒரு ஃபோன் கிம்பல், ஒரு ட்ரைபாட் போதும். ஐஃபோனைக் கொண்டு ஹாலிவுட் தரத்தில் சினிமா எடுத்து விடலாம்…

நானும் முயன்று கொண்டு இருக்கிறேன்.

Related Posts