சர்வதேச தீயணைப்பு படையினர் தினம்!

சர்வதேச தீயணைப்பு படையினர் தினம்!

டந்த 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று ஆஸ்திரேலியாவில் நடந்த பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவு கூறும் நாள்!

தலை போகிற அவசரத்தில் நாம் சென்றுகொண்டிருந்தாலும் சைரன் ஒலித்தபடி விரையும் இரண்டு வண்டிகளின் மீது அனிச்சையாக நம் கண்களும் மனமும் குவியும். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வண்டி இரண்டுமே உயிர்காக்கும் வண்டிகள் என்றாலும் தீயணைப்பு வண்டியின் சேவை எல்லைகள் விஸ்தாரமானவை. தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பிற உயிர்களையும் உடைமைகளையும் காப்பாற்றுகிற வீரமும் ஈரமும் நிறைந்தது தீயணைப்பு வீரர்களின் பணி.

மளமளவென பற்றிப் பரவும் நெருப்போ, சடசடவென சரிந்துவிழும் கட்டடமோ, உயிர் குடிக்கும் விஷ வாயுயோ, ஊரையே குடிக்கும் சுனாமியோ, மலையைக்கூட விழுங்கிச் செரிக்கும் பூகம்பமோ… எதுவாக இருந்தாலும் அங்கே உதவிக்குத் தீயணைப்புத் துறையின் கரங்கள் நீளும்.

1908ஆம் ஆண்டு, சென்னையில் 16 இடங்களில் செயல்பட்டுவந்த தீயணைப்புப் பிரிவு ஒருங்கிணைக்கப்பட்டு மதராஸ் தீயணைப்புப் படை (Madras Fire Brigade) உருவாக்கப்பட்டது. பெருகிவரும் தீ விபத்துக்களாலும், இயற்கை சீற்றங்களாலும் தீயணைப்புத் துறையின் முக்கியத்துவம் உணரப்பட்டு, 1967ஆம் ஆண்டில் தனித்துறையாக பரினாமம் பெற்றது. மாநிலத்தின் வளர்ச்சிக்கேற்ப பொதுமக்களுக்கு திறம்பட சேவையாற்றும் வகையில் தமிழக அரசு பல்வேறு கால கட்டங்களில் தீயணைப்பு நிலையங்களின் எண்ணிக்கையையும், நிர்வாக செயல்பாட்டு அமைப்பினையும், தேவைக்கேற்ப தீயணைப்பு மற்றும் மீட்பு ஊர்திகளின் எண்ணிக்கையையும் படிப்படியாக மேம்படுத்தியது.

தீயினால் உண்டாகும் உயிர், பொருட்சேதங்கள் அபாயமானவை என்பதால் தீ விபத்தைத் தடுக்க பாதுகாப்பு விதிகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிகள் உருவாக 1666ஆம் ஆண்டு லண்டனில் நடந்த மூன்று நாள் தீ விபத்துதான் காரணம் என்றே சொல்லலாம். தீ விபத்து குறித்த தகவல் வந்த 20 வினாடிகளுக்குள் தீயணைப்புப் படையினர் அதற்குத் தகுந்த கருவிகள் பொருத்திய வண்டியுடன் புறப்படுவார்கள். சம்பவம் நடந்த இடத்தை அடைந்ததும் மின்னல் வேகத்தில் செயலாற்றுவார்கள். கட்டுப்பாட்டு அறையில் நிறிஷி உதவியோடு வண்டியின் நிலையை அறிந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.

தங்கள் உயிரைத் திரணமாக மதித்து மீட்புப்பணியில் களமிறங்கும் தீயணைப்பு வீரர்களுக்காக உதவும் வகையில் மிகுந்த சக்தி வாய்ந்த சில அதி நவீன உபகரணங்கள் உள்ளன. இவற்றைத் தவிர, மிக உயரமான கட்டிடத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கவும் அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கித் தவிப்போரை மீட்கவும் Hazamat Vehicles, Sky Lifts ஆகிய நவீன ரக உபகரணங்களும் பயன்படுகின்றன.

கொடிய ஆபத்துகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ளும் உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. உயிருக்குப் போராடுகிறவர்களையும், இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களையும் மீட்கும் கடினமான பணிக்காக இவர்களுக்குத் தமிழக அரசால் பிரத்யேக பயிற்சி கொடுக்கப்படுகிறது. அரசால் தேர்வு செய்பவர் மட்டுமல்லாது, சமுதாய அக்கறையுடன் ஆர்வமுள்ளவர்களும் இந்தப் பயிற்சியை மேற்கொள்ளலாம். ஆம் தீயணைப்புப் பற்றி அடிப்படைப் பயிற்சி பெற விரும்புபவர்களுக்கு தீயணைப்புத்துறையில் பத்து நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. ரூபாய் ஆயிரம் கட்டணம். பயிற்சி பெற்றமைக்கு சான்றும் வழங்கப்படுகிறது. தீயணைப்புப் பற்றிய அடிப்படை அறிவை பெற விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட எவரும் சேர்ந்து கொள்ளலாம்.

மனிதர்களால் ஏற்படும் விபத்து ஒருபுறம் இருக்க மறுபுறம் இயற்கை சீற்றமும் சமுதாயத்தை நிலைகுலைய வைத்துவிடுகிறது. இயற்கை சீற்றங்களான வெள்ளம், புயல், நில நடுக்கம், வறட்சி, மண் சரிவு போன்றவற்றால் ஏற்படும் அழிவு சமூகச் சூழலையே புரட்டி எடுத்துவிடும் அளவுக்கு அபாயமானவை. அதாவது நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐம்பூதங்களும் அளவாய் இருக்கும் போது நன்மையும், அதிகமாகும் போது அழிவையும் தருகின்றன. இதில் அதிக நன்மை, அதிக அழிவைத் தருவது நெருப்பு. நன்மையை தருவதும் தீமையைத் தருவதும் அதனிடம் நாம் நடந்துக்கொள்ளும் விதத்தைப் பொறுத்தது.தீ விபத்தின் போது நமது உயிரையும், உடமைகளையும் காத்து, நமக்கு அபயம் அளிப்பவர்கள் தீயணைப்புப் படை வீரர்கள். மக்களை காப்பதில் ‘நான்காவது ராணுவம்’ என்று போற்றப்படும் தீயணைப்புத் துறை.

அதுபோன்ற ஆபத்தான நேரத்தில் உதவத்தான் தீயணைப்பு வீரர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அவர்கள் வருவதற்குள் சூழ்நிலையை எதிர்கொள்ளவும் நிலைமையைக் கையாளவும் கற்றுக்கொண்டால், பாதிப்புகளை ஓரளவுக்குக் குறைக்கலாம். இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்க முடியாவிட்டாலும், சீரிய திட்டமிடல் மூலம் விளைவுகளைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

தீ பரவுகிறது என்றால் சூழ்நிலையை அனுமானிக்க வேண்டும். பதற்றம், தேவையில்லாத சிக்கலை உருவாக்கும். இதுபோன்ற நேரத்தில், ‘நில், படு, உருண்டோடு’ என்பதைக் கடைபிடிக்கச் சொல்கின்றனர் தீயணைப்புத் துறையினர். இந்தச் செயல்களால் தீப்புகையிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

ஒரு விபத்து ஏற்பட்டதும், நமக்கேன் வம்பு என ஒதுங்கிக்கொள்ளாமல் 101 என்ற எண்ணைச் சுழற்றி சம்பவம் நடந்த இடத்தை தெளிவாக ஏதேனும் ஒரு அடையாளத்துடன் தெரிவிக்க வேண்டும். அந்த அழைப்பு எழும்பூரில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, சம்பவம் நடக்கும் தீயணைப்பு நிலையத்துக்குத் தெரிவிக்கப்படும்.

ஒரு தீயணைப்பு வீரரின் பணி மிக கடினமான, துணிச்சலான அதே சமயம் சவால் நிறைந்த பணியாகும். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளின்போது தெரிந்தும் தெரியாததுமான ஆபத்துகளைத் தாங்கிப் பணிபுரியும் பணியாளரின் உடல்நிலை மற்றும் மன நிலை பாதிக்கக்கூடும்.

தீ, வெள்ளம், புயல், பூகம்பம், நிலச்சரிவு, ரசாயன வாயுகசிவு, கட்டிட இடுபாடுகளில் மீட்பு பணி போன்ற நிகழ்வுகளில் பணிபுரியும்போது சிறியதும் பெரியதுமான காயங்கள், உடல் உறுப்புகளின் தற்காலிக மற்றும் நிரந்தரச் செயலிழப்பு, உடல் உறுப்புகளைப் பறிகொடுத்தல் போன்ற பாதிப்புகள் மட்டுமின்றி சில விபத்துகளில் பணிபுரியும்போது மரணமும்கூட ஏற்படும்.

இத்தனை ஆபத்துக்களையும் தாண்டி சக உயிர்களைக் காப்பதொன்றே கடமையாகக் கொண்டிருக்கிறார்கள் தீயணைப்பு வீரர்கள். போர்க்களத்தில் எதிரிகளோடு போரிடும் வீரர்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல, பேரிடர் காலங்களில் கைகொடுக்கும் தீயணைப்பு வீரர்களது மீட்புப் பணி.

error: Content is protected !!