பன்னாட்டு பெண் குழந்தைகள் தினம்!
சர்வதேச அளவில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலின சமத்துவமின்மை குறித்த விழிப்புணர்வூட்டும் வகையில், அக்டோபர் 11ஆம் தேதி உலக பெண் குழந்தை தினம்(International Day of the Girl Child) கொண்டாடப்படுகிறது. முன்னதாக, 1995ஆம் ஆண்டு பெய்ஜிங் மாநாட்டில், முதல் முறையாக சர்வதேச அளவில் பெண்கள் மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்து ஒரு செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதனை நிறைவேற்றும் வகையில், 2011ஆம் ஆண்டு, ஐக்கிய நாடு பொது சபை சார்பில், அக்டோபர் 11ஆம் தேதி பெண் குழந்தைகள் தினமாக அனுசரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்து இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு மனிதன் தான் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லுபவள், வாழ்கின்ற வாழ்க்கையையே அர்த்தமாக்குபவள், வசந்தத்தை நமக்குள்ளே வரவழைப்பவள் பெண் குழந்தை. பிறக்கும் குழந்தை முதல் குழந்தையாக இருந்தால், அவ்வீடு இறை ஆற்றலால் நிறைந்து இருக்கும் என்பர் மூத்தோர். பெண் குழந்தை இல்லாத வீடு ஓர் பொட்டல் காடு. பருவத்தில் மழை பொழிந்தால் சிறு இலை தலைகளை காணலாம். ஆனால் பெண் குழந்தை இருக்கும் வீடோ, பசுமை நிறைந்த நந்தவனம். இப்படியாக பெண்குழந்தைகளின் சிறப்பு பற்றி நாம் அதிகமாக சொல்லிக்கொண்டே போகலாம்.

பூக்கள் சிரிக்கும் பூங்காவனமாக, சோம்பேறியான மனிதனைக்கூட உழைக்கவைக்கும் எந்திரமாக, சோர்வடைந்து மனம் தளர்ந்தால் புத்துணர்வு தருபவர்களாக பெண்குழந்தைகள் இருக்கின்றனர். தாய்க்கும் தந்தைக்கும் அன்பின் இணைப்பாக, தாயோடும் தந்தையோடும் மிகுந்த அன்பினை வெளிப்படுத்துபவர்களாக பெண்குழந்தைகள் சிறந்துவிளங்குகின்றனர். முரட்டுத்தனமான மனிதைக்கூட மென்மையாக மாற்றி, முள்ளையும் மலர வைக்கின்றனர் பெண் குழந்தைகள். அவர்கள் இருக்கும் வீடு ஓர் சிறு கோவில் போல காட்சியளிக்கும்.
ஆனால் இதை எல்லாம் உணராமல் பெண் குழந்தைக்கு எதிரான பாகுபாடுகள் இந்தியாவில் மிகவும் அதிகம். கருவுற்ற தாய்மார்களுக்கு கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து அதன்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.பெண் கருக்கள் இரக்கமின்றி அழிக்கப்பட்டன. குடும்பத்தினரால் சுமையாகக் கருதப்படும் பெண் குழந்தைகளுக்கு மிகவும் சிறிய வயதில் திருமணம் செய்துவைக்கப்படுகிறது. இவ்வாறு பெண் குழந்தைக்கு அளிக்கப்படும் மனிதாபிமானமற்ற செயல்களுக்கு முடிவே இல்லை. இதை எல்லாம் சுட்டிக் காட்டி களையெடுத்து உலகமெங்கும், பாலினச் சமத்துவம், அனைத்துத் துறைகளிலும் சமத்துவமான வாய்ப்பு, கல்வி உரிமை, பாதுகாப்பு, அங்கீகாரம், வளர்ச்சியை அதிகரித்தல், வன்முறைகளைக் களைதல் போன்றவற்றிற்கு சமூகம் ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும் என்பதை இந்நாள் வலியுறுத்துகின்றது. பெண் குழந்தைகள் நினைத்ததைச் சாதிக்க உறுதுணையாக நின்று, அவர்கள் பின்னாளில் சாதனைப் பெண்களாக மிளிர வைக்கும் அவசியத்தை நினைவு கூரும் நாளாகவும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உலகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வுப் பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
பெண் குழந்தைகள் பிறப்பு என்பது பெற்றோருக்கு ஏற்படும் பொருளாதார சுமை என்கின்ற கருத்தியலை மாற்றியமைக்கவும், இவ்வுலகில் உயிர்கள் ஒவ்வொன்றும் தோன்றவும், சுதந்திரமாய் வாழவும் இயற்கையான உரிமைகள் உள்ளன என்பதை உணர்த்தவும், இந்நாளில் பல நடவடிக்கைகளைத் தன்னார்வ அமைப்புகள் மற்றும் மக்கள் நல அரசுகள் வழியாக உலகம் முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது.
பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாள் கொண்டாடப்படுவதற்கு முன்பாகவே, இந்தியாவில் 2009-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொஓர் ஆண்டும் ஜனவரி 24 ஆம் நாளில் இந்தியாவில், தேசியப் பெண் குழந்தை நாளானது (National Girl Child Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் இந்நாளைக் கொண்டாடுவதன் வழியாக, பாலினச் சமத்துவம், சம வேலைக்கு சம ஊதியம், பெண் குழந்தைகளுக்கு அவர்கள் உரிமை கிடைப்பதை உறுதி செய்வது போன்ற கருத்துக்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. மேலும், பெண்கள் மேம்பாட்டிற்கான திட்டங்கள் பற்றியும் பொதுமக்களுக்கு ஊடகம், செய்தித்தாள், வானொலி மற்றும் தொலைக்காட்சி வழியாக தகவல்கள் அரசாங்கத்தால் அளிக்கப்படுகிறது.

நான் ஒரு பெண், மாற்றத்தை நாம் வழிநடத்துகின்றேன்
பெண் நல அமைப்புகள், ஐ.நா. கூட்டாளிகள் மற்றும் மிக முக்கியமாக, பெண்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட 2025 பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளின் கருப்பொருளாக, நான் ஒரு பெண், மாற்றத்தை நாம் வழிநடத்துகின்றேன் : நெருக்கடியின் முன்னணியில் உள்ள பெண்கள்’ என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும், பெண்கள் இன்றைய மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் சமூகங்களில் காலநிலை நீதிக்காகப் போராடுகிறார்கள், வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரக் கோருகிறார்கள் மற்றும் அவர்களின் எதிர்காலத்தை மறுபரிசீலனை செய்கிறார்கள். பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்காக மட்டுமல்லாமல், அவர்கள் யார், அவர்கள் கொண்டு வரும் தீர்வுகளுக்காகவும் தங்களைக் யார் என்று அடையாளம் காணக் கேட்கிறார்கள். இருப்பினும், பெரும்பாலும், அவர்களின் குரல்கள் கேட்கப்படுவதில்லை, அவர்களின் செயல்கள் புறக்கணிக்கப்படுகின்றன, அவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகள் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன.
பாலின சமத்துவத்திற்கான உலகின் வரைபடமான 30ஆவது ஆண்டு பெய்ஜிங் பிரகடனத்திலிருந்து, பெண்கள் உண்மையில் யார் என்பதைக் காணவும், அவர்களின் குரல்களைக் கேட்கவும், அவர்களின் வரம்பற்ற திறனை அங்கீகரிக்கவும் பன்னாட்டுப் பெண்குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்படுகின்றது. பெண்கள் ஒரு சிறந்த உலகத்திற்காக காத்திருக்கவில்லை, அவர்கள் அதை உருவாக்குகிறார்கள். உலகளவில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கும், அவர்களின் உரிமைகள் மற்றும் அதிகாரங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
நிலவளம் ரெங்கராஜன்


