பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்!

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள்!

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு பன்னாட்டு நாளாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக கருதப்படும் “மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்” என்று அழைக்கப்பட்ட மிராபெல் சகோதரிகள் டொமினிக்கன் குடியரசில் 1960 நவம்பர் 25 கொல்லப்பட்டதை நினைவு கூரும் வகையில் இது கடைப்பிடிக்கப்படுகிறது.

சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் பெண் என்கிற ஒரே காரணத்துக்காக ஒடுக்கப்படுகிறவர்கள் இங்கே ஏராளம். அதிலும் வன்முறைக்கு எளிதில் இலக்காகும் வகையில் பலவீனமான நிலையில் இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள், மாற்றுப் பாலினத்தவர், அகதிகள், புலம்பெயர்ந்தோர், சிறுபான்மையினர், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோர் அதிக அளவில் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். பெண்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற வன்முறையைப் பாலின பேதத்தின் வெளிப்பாடு என்று குறுக்கிவிட முடியாது. அது பெண்களைப் பாதிப்பது மட்டு மல்லாமல், பாலினச் சமத்துவத்தை அடையும் உலகளாவிய நோக்கத்துக்குப் பெரும் தடையை ஏற்படுத்துவதுடன் ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியையும் சேர்த்தே பாதிக்கிறது.

பெண்கள் மீதான வன்முறை இன்றைய சமூகத்தில் பற்பல வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொழிற்சாலைகளில், அலுவலகங்களில், மருத்துவமனைகளில், பாடசாலைகளில்… இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம். இங்கெல்லாம் உள்ள முதலாளிகள், நிர்வாகிகள், கண்காணிப்பாளர்கள், ஒப்பந்தகாரர்கள், சில ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் அரசியல் அதிகாரமுள்ள நபர்கள், நிறுவனத் தலைவர்கள் போன்றவர்களாலும்; சட்ட ஒழுங்கு, பாதுகாவலர்கள் என குறிப்பிடப்படும் காவல்துறை, நீதித்துறை மற்றும் செய்தி ஊடகங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன.மறுபுறமான குடும்ப உறுப்பினர்களாலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வன்முறைகளுக்கு உட்படுகின்றனர்.

அந்த வகையில் எவ்வளவோ இழப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு பெண்களையும் குழந்தைகளை யும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தண்டனைகளும் கடுமையாக்கப் பட்டுள்ளன. இருந்தாலும் 2015ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியா முழுவதும் 3,27,394 வழக்குகள் பெண்களுக்கு எதிரான வன்முறையின்கீழ் பதிவுசெய்யப் பட்டுள்ளதாக தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் குறிப்பிடப்பட்டுள்ளது. வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்ணைப் பற்றி மட்டுமே பேசும் நம் சமூகம், அந்தப் பெண்ணின் மீது வன்முறையை நிகழ்த்திய ஆணைக் கண்டுகொள்வதில்லை.

அதிலும் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்தாலும், ஒருசில துறைகளுக்குள் நுழைவதும், அவற்றில் முன்னேறிச் செல்வதும் பெண்களுக்கு கூடுதல் சவாலாக இருக்கிறது. ஊடகத் துறையைப் பொறுத்த அளவில், ஆண் பத்திரிகையாளர்களைக்காட்டிலும் பெண் பத்திரிகையாளர்கள் சந்தித்துவரும் பிரச்னைகளும் சவால்களும் அதிகம். ஐ.நா., நவம்பர் 2-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2021-ம் ஆண்டு உலகில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களில் 11 சதவிகிதம் பேர் பெண்கள். ஐ.நா-வின் சர்வதேசப் பத்திரிகையாளர் அரங்கம் நடத்திய ஆய்வில், சுமார் 73 சதவிகிதப் பெண்கள் ஆன்லைன் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்பது தெரியவந்திருக்கிறது.

மேலும் பெண்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படுகிற எல்லாக் குற்றங்களுக்கும் ஆணிவேராக இருப்பது ஆணாதிக்கச் சிந்தனைதான். சில நேரம் அது பெண்களின் வழியாகவும் செயல்படுத்தப்படலாம். ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் தாழ்ந்தவள் அல்ல என்பதை இருபாலினரும் உணர வேண்டும். அதற்கான பொறுப்பைக் குடும்பங்கள் ஏற்க வேண்டும். குடும்பங்களுக்கு அப்படிப்பட்ட படிப்பினையை வழங்க வேண்டிய பொறுப்பு பண்பட்ட சமூகத்துக்கு உண்டு.

மக்களுக்கு நல்வழி காட்டுவதற்கு என்கிற பெயரில் எழுதப்பட்ட நூல்களில் தொடங்கி, அனைத்துவிதமான ஊடகங்கள்வரை பெண்கள் ஆணுக்கு அடங்கி நடக்கிற அடிமைகளாகவும் காட்சிப் பண்டங்களாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றன. அதுதான் ஸ்மார்ட் போன் காலத்திலும் கணவனைத் தொழுது எழுவதுதான் பெண்ணின் இயல்பு எனப் பலரையும் பேச வைக்கிறது. நாகரிகம் என்பது நம் ஆடைகளிலும் நாம் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கருவிகளிலும் இல்லை. சக மனுஷியான பெண்ணைத் தனக்கு நிகராக நடத்துவதுதான்.அந்தப் புரிதல் இல்லததால்தான் பெண்கள் குடும்ப வன்முறைக்கு இரையாகிறார்கள், பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள், கல்வியும் பணி வாய்ப்பும் இன்றி ஒடுக்கப்படுகிறார்கள், பொதுவெளியில் தரக்குறைவாக விமர்சிக்கப்படுகிறார்கள், கற்பென்னும் பெயரால் தாழ்த்தப்படுகிறார்கள். இனியாவது பெண்ணுக்கு நீதி போதிப்பதை விட்டுவிட்டு ஆணாதிக்கச் சிந்தனை நிறைந்திருப்போருக்குச் சமத்துவத்தைப் பயிற்றுவிப்போம். அதுவே நலம்

தமிழ் செல்வி

error: Content is protected !!