பன்னாட்டு வண்ண நாள்!

பன்னாட்டு வண்ண நாள்!

ம்மை வாழ வைத்துக் கொண்டிருக்கும் இயற்கையே பல்வேறு வண்ணங்களை உடையது. இயற்கையின் வண்ணங்களில் மனிதன் சுவை, அழகு, பயன் ஆகியவற்றை கண்டான். எனவே அவன் படைத்த செயற்கை பொருள்கள் பல வண்ணங்களில் அமைந்தன. ‘இக்காலத்தில் நிறத்தையும் குறிக்கும் ‘வண்ணம்’ என்ற சொல் அக்காலத்தில் அழகு, இசை, ஒழுங்கு ஆகிய பொருள்களை மட்டுமே தந்தது.’ என்று குறிப்பிடுவார் பண்பாட்டு ஆய்வாளர் தொ.ப.

எல்லா இயற்கைப் பொருள்களிலும் நிற வேறுபாடு இருப்பது போல மனித உடலிலும், அதாவது தோலிலும் இயற்கையின் தட்பவெப்பநிலைக்கேற்ப வண்ண வேறுபாடுகள் உண்டு. மனித இனத்தையே கூட மானுடவியலாளர்கள் வண்ணங்களின் அடிப்படையில் தான் நான்கு மரபினங்களாக பிரிக்கிறார்கள். அவை காக்கேசியர்கள், ஆப்பிரிக்கர்கள், மங்கோலியர்கள் மற்றும் அமெரிக்க-இந்தியர்கள். (ஆஸ்திரேலாய்டுகள் பின்பு வந்தவர்கள் என்று கூறப்படுகிறது). இவை அனைத்தும் வேறுபாடுகளே தவிர ஏற்றத்தாழ்வுகள் இல்லை. ஆனால் அந்த வேறுபாடுகள் இன்றைய உலகில் வறுமைக்கு அல்லது வளமைக்கு, உயர்வுக்கு அல்லது தாழ்வுக்கு, அதிகாரத்திற்கு அல்லது அடிமைத்தனத்திற்கு, ஒடுக்குமுறைக்கு அல்லது அதற்கு எதிரான போராட்டத்திற்குரிய குறியீடுகளாக மாற்றப்பட்டுவிட்டன.

இந்த வண்ணங்களின் அடிப்படையிலான குறியீடுகள் தான் உலக அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் நிர்ணயித்து வந்துள்ளது. இரண்டு வண்ணங்களுக்கு இடையில் நிகழும் மோதல் தான் தொடர்ந்து அரசியல் வரலாறாக இருந்து வந்திருக்கிறது என்பதை ‘ஒற்றை மைய உலகம்’ என்ற நூலில் ஈழத்து வரலாற்றாசிரியர் மு.திருநாவுக்கரசு பதிவு செய்கிறார். கறுப்புக்கும் வெள்ளைக்கும், பழுப்புக்கும் வெள்ளைக்கும், வெள்ளைக்கும் பச்சைக்கும், வெள்ளைக்கும் சிவப்புக்கும் என அந்தப் பட்டியல் நீளும். தமிழ்நாட்டு அரசியல் கூட கருப்பையும் காவியையும் மையப்படுத்தியதாக தான் இருந்து வந்துள்ளது.எனவே மனித சமுதாயத்தில் வண்ணங்கள் என்பது வெறும் வண்ணங்கள் அல்ல. அந்த வண்ணங்களுக்குள் ஏராளமான எண்ணங்கள் பொதிந்துக் கிடக்கின்றன.

இச்சூழலில்தான் பன்னாட்டு வண்ண நாள் (International Colour Day (ICD) 🌈எனும் இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாளில், கருத்து காட்சி, மக்கள் வாழ்வியல் கோட்பாடுகள், மற்றும் உண்மையியல் உணர்தல் போன்ற மிகவும் பெரியதாக உதவகூடியதாகவும், உலகம் சுற்றியுள்ள மறக்கமுடியாத வண்ண நடவடிக்கைகள் பெருகிய முறையில் அனைத்துலக வண்ணம் நாள் உருவாக்கி கொண்டாடப்பட்டு வருகின்றன..

பெரும்பாலானோர் வீட்டுச்சுவர்களில் வெள்ளை சாக்பீசால் படம் வரைவது, கரிதுண்டால் கிறுக்குவது, நக பாலீஷால் கோடு கிழிப்பது, ஈர கையை சுவரில் பதிப்பது முதல், புத்தகங்களின் வெள்ளைத்தாளில் வண்ணம் தீட்டுவது இவையெல்லாம் சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு செயல். அதே சிறுவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் அதில் ஆர்வம் காட்டுவதில்லை, என்பதோடு ஏன் இப்படி சுவரை அழுக்குபடுத்துகிறீர்கள் என்று கத்துவதும் உண்டு.

ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் சுவரில், வெள்ளைத்தாளில் வண்ணம் தீட்டினாலும், கிறுக்கினாலும் அவர்களைத் தடுப்பதில்லை. அவன் எண்ணத்தில் தோன்றுவதை கிறுக்குகிறார்கள். அவன் இஷ்டம் போல கிறுக்கட்டும். குழந்தைகள் உள்ள வீடு என்றால் அப்படித்தான் இருக்கும் என்பார். பல மனவியல் மருத்துவர்கள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு சிறந்த மருந்தாக வண்ணம் தீட்டுவதைக் குறிப்பிடுகின்றனர். அதனால் தற்போது இது மிகவும் நல்ல விஷயமாக, ஆரோக்கியமான செயலாக பார்க்கப்படுகிறது. அதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற பொது நல நோக்கில் வருடம்தோறும் ஆகஸ்டு மாதம் 2-ந் தேதியை தேசிய வண்ணப் புத்தகங்கள் தினமாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் தங்கள் குழந்தைகளுக்கு வண்ணப் புத்தகங்கள் வாங்கி பரிசளித்து அவர்களை மகிழ்விக்க வேண்டியது பெற்றோரின் கடமை. இன்று வெளிவரும் நாள், வார, மாத இதழ்கள் சிறுவர் பகுதியில் வண்ணம் தீட்டும் பகுதி இடம் பெறுகிறது. அதில் குழந்தைகள் வண்ணம் தீட்டி மகிழ்வார்கள். குழந்தைகளைப்போல பெரியோர்களும் வண்ணம் தீட்டுவதை பொழுது போக்காக கொண்டால் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கலாம்.

வண்ணம் தீட்டும் பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்கும் சிறந்த மருந்து என்று உளவியல் மருத்துவர்கள் சொல்கிறார்கள். சொற்களால் வெளிப்படுத்த முடியாதவற்றை வண்ணம் தீட்டுவதால் வெளிப்படுத்தலாம். நம்முள் உள்ள கலை உணர்வை வெளிக்கொண்டு வரும் முயற்சி இது. பெரியவர்களும் புத்தகத்தில் வண்ணம் தீட்டுவதை பொழுதுபோக்காக கொள்ள வேண்டும். ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு குண அம்சம் கொண்டது. ஆரம்பத்தில் சொன்னது போல் வண்ணங்களானது இயற்கை. எண்ணங்களானது வாழ்க்கை.

நமது தேசியக் கொடியில் இருக்கிற வண்ணங்களைப் பாருங்கள் காவிநிறம் தியாகத்தையும், வெள்ளை நிறம் தூய்மையையும், பச்சை நிறம் செழுமையையும் குறிக்கின்றன. நடுவில் கருநீல வண்ண அசோகச் சக்கரம் தருமத்தையும் குறிக்கிறது. இத்தனை சிறப்புகள் கொண்ட வண்ணங்கள் நமது தாயின் மணிக்கொடியில் உள்ளன. வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர். பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறமாகும். சாம்பல் நிறமொரு குட்டி கருசாந்து நிறமொரு குட்டி. பாம்பு நிறமொரு குட்டி வெள்ளைப் பாலினிற மொரு குட்டி. எந்தநிறமிருந்தாலும் அவை யாவும் ஒரேதர மன்றோ? வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானுடர் வேற்றுமை யில்லை” என்கிறார் மகாகவி பாரதி. சாதி, மதம் என்னும் நிற பேதத்தால் விலகி நிற்காமல் நாம் அனைவரும் இந்தியர்களாய் கைகோர்த்து நிற்போம் என்றார் பாரதி. நீல வண்ணம் குளுமையையும், சிவப்பு உஷ்ணத்தையும் கொடுக்கும். கோபமாக இருப்பவர் முன்பு சிவப்பு சட்டை அணிந்து போய் நின்றால்? கோபம் மீட்டர் ஏறும். அவர் முன்பு நீல சட்டை அணிந்து போய் நின்றால் கோபத்தின் வேகம் இறங்கும். உலகம் வண்ணங்களால் சூழ்ந்தது. நீலகடல், நீல வானம், ஏழு வண்ண வானவில் இயற்கை பச்சை வண்ணத்தில் இருக்கிறது. அதன்மடியில் நீலம், சிவப்பு, மஞ்சள், வெள்ளை என்று பல வண்ண மலர்கள், காய் கனிகள், ஒருவர் விரும்பும் நிறத்தை கொண்டே அவரின் குணத்தை கணிக்க முடியும் என்பது உளவியலாளர் கருத்து.

பச்சை வண்ணத்தைப் பார்க்கும்போது நமது மனம் புத்துணர்வு பெறுகிறது. நீல வண்ணம் குளிர்ச்சி தருகிறது. சிவப்பு வண்ணம் துணிச்சல் தரும். மஞ்சள் வண்ணம் தன்னம்பிக்கை தரும் குறியீடாக கருதப்படுகிறது. ஊதா வண்ணம் தியானத்திற்கு உகந்த வண்ணம். ஆரஞ்சு வண்ணம் செயல்திறனை தூண்டும். வெள்ளை வண்ணம் தூய்மையான தன்மைக் கொண்டது. சாம்பல் வண்ணம் சோம்பல் தரும். சமையல் அறைக்கும், குளியலறைக்கும் சிவப்பு நல்லது. வரவேற்பு அறைக்கு மஞ்சள், உணவு உண்ணும் இடத்திற்கு நீலம், உடல் பயிற்சி செய்யும் இடத்திற்கு ஆரஞ்சு வண்ணமும், படுக்கை அறையில் இளம் சிவப்பு வண்ணம் ஏற்றது. ஆக வண்ணங்களால் ஆனது வாழ்க்கை. நல்ல எண்ணங்களையும், நல்ல வண்ணங்களையும் ஏற்று நல்வாழ்வு வாழ்வோம்.

Related Posts

error: Content is protected !!