கிக் ஸ்டார்ட்டர் போன்ற முன்னோடி கூட்ட நிதி சேவை பற்றி அறிய விருப்பமா?

கிக் ஸ்டார்ட்டர் போன்ற முன்னோடி கூட்ட நிதி சேவை பற்றி அறிய விருப்பமா?

ணைய உலகில் கூட்ட நிதி (crowdfunding) திரட்ட உதவும் கிக்ஸ்டார்ட்டர் இணையதளம் பிரபலமானது. கிக்ஸ்டார்ட்டர் போலவே மேலும் பல இணையதளங்கள் இருக்கின்றன. கிக்ஸ்டார்ட்டர் புதிய பெரிய திட்டங்களுக்கானது என்றால், படைப்பூக்கம் சார்ந்தவர்கள் அபிமானிகளிடம் இருந்து நிதி திரட்ட உதவும் பை மீ ஏ காபி (https://www.buymeacoffee.com/ ) போன்ற இணையதளங்கள் இருக்கின்றன. ரசிகர்கள், தங்கள் ஆதரிக்க விரும்பும் படைப்பாளிகளுக்கு சிறிய அளவில் நிதி அளிக்க இந்த தளங்கள் உதவுகின்றன.

ஒரு நண்பருக்கு காபி வாங்கித்தருவது போல படைப்பாளிகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், தங்களால் இயன்ற தொகையை அளிக்கலாம். இந்த வரிசையில் இப்போது, பை மீ ஜூஸ் (https://buymejuice.co/) எனும் தளம் அறிமுகம் ஆகியுள்ளது. படைப்பாளிகளுக்கு பழச்சாறு வாங்கு கொடுத்து ஊக்குவிக்க இந்த தளம் உதவுகிறது.

இந்த கிக்ஸ்டார்ட்டர் போன்ற முன்னோடி கூட்ட நிதி சேவை பற்றி அறிய விருப்பமா?

“இல்லை என்று சொல்வதில் ஆர்வம் கொண்ட உலகில் நாம் வசிக்கிறோம். ஆனால் உலகம் இல்லை என்று சொல்வதை விரும்பினாலும், உங்கள் வேலை ‘ஆம்’ என்று சொல்லிக்கொண்டிருப்பது தான்” என்கிறார் டானே ரிங்கில்மன் (Danae Ringelmann). இவரைப்பற்றியே இந்த அத்தியாய ஸ்டாட்ர் அப் இளவரசியில் நாம் பார்க்க போகிறோம்!

தொழில்முனைவோர்களுக்காக டானே இந்த அறிவுரையை கூறினாலும், இது எல்லோருக்கும் பொருத்தமானதே. அது மட்டும் அல்ல, இந்த அறிவுரையை கூற டானாவுக்கு முழு தகுதியும் இருக்கிறது. ஏனெனில், ஆரம்ப கால தொழில்முனைவு பயணத்தில் தொடர்ந்து நிராகரிப்புகளை எதிர்கொண்டும் சோர்ந்து போகாமல் விடாமல் முயற்சித்து வெற்றி பெற்ற தொழில்முனைவோர்களில் ஒருவராக அவரும் இருக்கிறார். 90 முறைக்கு மேல் இல்லை எனும் நிராகரிப்பை எதிர்கொண்ட பிறகே அவர் தனது துறையில் வெற்றி பெற்றிருக்கிறார் டானே ரிங்கில்மன்.

ஆனால், டானே சோதனைகளை கடந்து வெற்றி பெற்ற தொழில்முனைவோர் மட்டும் அல்ல, அவர் ஒரு மாறுபட்ட முன்னோடி தொழில்முனைவோரும் தான். தனக்கு ஏற்பட்ட நிராகரிப்பு அனுபவம் மற்றவர்களுக்கும் ஏற்பட்டு அவர்களை முடக்கிவிடக்கூடாது என்பதற்காக எல்லோருக்கும் நிதி அளிக்கும் இணைய மேடையை வெற்றிகரமாக உருவாக்கிவராக திகழ்கிறார். இந்த காரணத்தினாலே டானேவை அறிந்து கொள்ள வேண்டும்.

கூட்ட நிதி கருத்தாக்கம் – ஆம், டானே `கிரவுட்பண்டிங்’ (CrowdFunding) என சொல்லப்படும் கூட்ட நிதி திரட்ட வழி செய்யும் வெற்றிகரமான இணையதளங்களில் ஒன்றான இண்டிகோகோ (Indiegogo) நிறுவனத்தை துவக்கி நடத்தி வரும் இணை நிறுவனர்களில் ஒருவர். இந்த தளத்தை துவக்கியதற்காக, டானே நிதி திரட்டுவதை ஜனநாயகமயமாக்கியவராக பாராட்டப்படுகிறார். இதற்காகவே நிதி திரட்டுபவர்களால் தேவதையாகவும் போற்றப்படுகிறார்.

சொந்தமாக ஒரு திட்டத்தை துவக்க விரும்புகிறவர்கள், அதற்கு தேவையான நிதியை முதலீட்டாளர்களிடம் கேட்டு அலைவதைவிட, (நிராகரிப்பால் துவண்டு போவதைவிட), பயனாளிகளிடம் இருந்தே நிதி திரட்டிக்கொள்வதற்கான வசதியை இண்டிகோகோ இணைய மேடை அளிக்கிறது. பயனாளிகளால் அள்ளித்தர முடியவிட்டாலும் பரவாயில்லை, அவரவர் தங்களால் முடிந்ததை கிள்ளிக்கொடுத்தால் கூட போதும், மொத்தமாக சேர்த்து பார்க்கும் போது தேவையான நிதி கிடைத்துவிடும் என்பதே இந்த மேடையை அடிப்படை கருத்தாக்கமாக இருக்கிறது. இப்படி, பொதுமக்கள் ஒன்று திரண்டு சிறிய அளவில் நிதி அளிக்கும் முறை கூட்ட நிதி என அழைக்கப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம்.

இந்த இடத்தில் கிக்ஸ்டார்ட்டர் (Kickstarter) போலவா என்று கேட்கத் தோன்றலாம். இணைய பின்னல் ஆம், இணையம் மூலம் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி புதிய திட்டங்களை செயல்படுத்த உதவும், கிக்ஸ்டார்ட்டர் போன்ற தளமே இண்டிகோகோ என்றாலும், இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பிரிவில் கிக்ஸ்டார்ட்டருக்கும் முன்பாக இண்ட்கோகோ துவங்கப்பட்டது என்பது தான். கூட்ட நிதி கருத்தாக்கத்திற்காக பரவலாக அறியப்பட்ட வெற்றிகரமான தளமாக கிக்ஸ்டார்ட்டர் விளங்குகிறது என்றாலும், இந்த பிரிவில் கிக்ஸ்டார்ட்டர் ஒரு இயக்கமாகவே வளர்ந்திருக்கிறது என்றாலும், கூட்ட நிதி எனும் வார்த்தை பிரபலமாவதற்கு முன்பாகவே உருவான முன்னோடி சேவையாக இண்டிகோகோ விளங்குகிறது.

கூட்ட நிதி எனும் கருத்தாக்கம் ஏதேனும் ஒரு வடிவில் வரலாற்றில் இருந்து வருவது தான் என்றாலும், இணையத்தின் தொடர்பு கொள்ளும் ஆற்றலே, இந்த கருத்தாக்கத்தை முன்னணிக்கு கொண்டு வந்தது. இதற்கு முன், அங்கொன்றும் இங்கொன்றுமாக கூட்ட நிதி முயற்சிகள் நடைபெற்று வந்த நிலையில், இதை ஒரு நம்பகமான வழியாக பின்பற்றலாம் என்பது இணையத்தின் மூலமே சாத்தியமானது. இதை உலகிற்கு உணர்த்திய முதல் இணையதளங்களில் ஒன்றாக இண்டிகோகோ அமைகிறது என்பதே முக்கியமானது.

சொந்த அனுபவம்

சொந்த திட்டத்திற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த போது சந்தித்த ஏமாற்றமே டானே ரிங்கில்மேனை, நிதி திரட்டும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான இணைய சேவையை துவக்க வைத்தது. தான் மட்டும் அல்ல, பெற்றோர்களும் தங்கள் வர்த்தகத்திற்கு நிதி திரட்ட முடியாமல் திண்டாடுவதை பார்த்து வளர்ந்த அனுபவமும், இந்த சேவைக்கான உந்துதலாக அமைந்தது. டானேவின் பெற்றோர் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் எண்ணற்றவர்களுக்கு இந்த அனுபவத்தை எதிர்கொள்கின்றனர். சுய தொழில் துவங்கும் ஆர்வம் இருந்தும் அதற்கு தேவையான நிதி கிடைக்காமல் அல்லாடும் இளைஞர்கள் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கில் இருக்கலாம். அதே போல, விரிவாக்கத்திற்கு நிதி கிடைக்காமல் தவிக்கும் சிறு தொழில்முனைவோருக்கும் குறைவில்லை.

தொழில் துவங்க என்றில்லை, படைப்பூக்கம் மிக்க ஒரு திட்டத்தில் ஈடுபட வேண்டும் என்றாலும் சரி, ஒரு திரைப்படம் எடுக்க அல்லது ஆவணப்படும் எடுக்க விரும்பினாலும் சரி, ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு அதற்காக நிதி கிடைப்பது என்பது அத்தனை எளிதல்ல. புதிய எண்ணம் கொண்டவர்கள் அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றால், முதலீட்டாளர்களின் ஆதரவை பெற்றாக வேண்டும். ஆனால், வங்கி கடன் பெறுவதோ அல்லது முதலீட்டாளர்களின் ஆதரவை பெறுவதோ, ஒருவரின் நம்பிக்கையையும், விடா முயற்சியையும் சோதித்துவிடக்கூடியது. இதை தான், இல்லை என்று மறுக்க விரும்பும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று இண்டிகோகோ வெற்றி அனுபவம் தொடர்பான பேட்டி ஒன்றில் டானே கூறியிருக்கிறார்.

ஆனால், இல்லை என சொல்லும் உலகின் இயல்பை அப்படியே நாம் எற்றுக்கொள்ள வேண்டியதில்லை என நினைக்கும் துணிச்சல் அவருக்கு இருந்தது. இதுவே பாரம்பரிய நிதி செயல்முறைக்கான மாற்று வழியாக கூட்ட நிதியை திரட்டுவதற்கான இண்டிகோகோ சேவையை உருவாக்க வைத்தது.

பெற்றோர் கதை

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த டானேவின் பெற்றோர்கள் சின்னதாக கடை ஒன்றை நடத்திக்கொண்டிருந்தனர். அந்த கடைக்காக வங்கி கடன் வாங்க முடியாமல் பெற்றோர் அவதிப்படுவதை பார்த்தபடியே டோனா வளர்ந்தார். பெற்றோர்கள் தங்கள் சொத்தை அடமானம் வைத்தால் மட்டுமே கடனுதவி பெற முடியும் என்பதையும் உணர்ந்திருந்தார். இதனால் நிதி வசதி செயல்படும் விதத்தில் ஆர்வம் கொண்டவர், கல்லூரி முடித்ததும் நிதித்துறையில் பணியாற்றச்சென்றார்.

நிதி உலகில் பணியாற்றியபடி, வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார். டானேவுக்கு கலையிலும் ஆர்வம் இருந்தது. அதன் பயனாக ஆர்த்தர் மில்லர் எழுதிய நாடகம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டார். இந்த நாடகத்தை காண ஆர்வம் கொண்ட பார்வையாளர்களையும் திரட்டியிருந்தார். இதற்கான முதலீட்டாளர்கள் நிதி ஆதரவையும் பெற்றிருந்தார். ஆனால், சோதனையாக கடைசி நேரத்தில் முதலீட்டாளர்கள் ஒப்புக்கொண்ட படி நிதி அளிக்காமல் பின் வாங்கிவிட்டனர். இதனால் நாடகத்தை காண வந்த பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். டோனா கூடுதலாக ஏமாற்றம் அடைந்தார்.

நாடக ஏமாற்றம்

நாடகத்தை பார்க்க மக்கள் ஆர்வமாக இருந்தும், நிகழ்த்திக்காட்ட தானும் நடிகர்களும் தயாராக இருந்தும், இதை சாத்தியமாக்கும் செயல்முறை நிதி வசதியின்மையால் ரத்தானது அவருக்கு வேதனையை அளித்தது. நாடகத்தை நடத்துவது என்பது மூன்றாம் தரப்பான முதலீட்டாளரின் கையில் இருந்தது, நிதி வசதி செயல்படும் விதம் பற்றி அவரை யோசிக்க வைத்தது. இதற்கு தீர்வு காண விரும்பினார்.

எப்போதும், நிதி வசதிக்காக யாரோ ஒரு முதலீட்டாளரை ஏன் நாட வேண்டும் என யோசித்தவர், திட்டங்களை உருவாக்க விரும்புகிறவர்கள் அதன் பயனாளிகளிடமே ஆதரவு கோரும் வகையில் ஒரு வழியை உருவாக்க விரும்பினார். இந்த எண்ணத்தை தனது நிதித்துறை சகாக்கள் ஸ்லேவா ரூபின் மற்றும் எரிக் ஷெல் (Slava Rubin, Eric Schell) ஆகியோரிடம் பகிர்ந்து கொண்ட போது, அவர்கள் இணையம் மூலம் இதை செயல்படுத்தலாம் என யோசனை தெரிவித்தனர். இப்படி தான் கூட்ட நிதி திரட்டும் சேவையாக 2008 ம் ஆண்டு இண்டிகோகோ தளத்தை துவக்கினார்.

நமக்கு நாமே உதவி, நிதி வசதியை ஜனநாயகமயமாக்குவதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தளம், இதற்கான திறந்த தன்மை கொண்ட மேடையாக அமைந்திருந்தது. அதாவது உலகில் எங்கும் உள்ள எவரும் தாங்கள் செயல்படுத்த விரும்பும் திட்டம் தொடர்பான எண்ணத்தை இந்த தளத்தில் பகிர்ந்து கொண்டு அதற்கு நிதி ஆதரவு கோரலாம். அந்த எண்ணத்தை ஆதரிக்க விரும்புகிறவர்கள் தங்களால் முயன்ற நிதியை அளிக்கலாம். இப்படி நூற்றுக்கணக்கானவர்கள் சில டாலர்களை அளிக்க முன்வந்தாலும், தேவையான நிதி கிடைத்துவிடும்.

ஆக, முதலீட்டாளர்களை சம்மதிக்க வைக்கும் வழியை நாடாமல், பயனாளிகளிடம் நேரடியாக திட்டத்தை கொண்டு சென்று அவர்களிடம் இருந்து நிதி திரட்ட வழி செய்யும் வகையில் இண்டிகோகோ அமைந்திருந்தது. யாரும், எதற்கும் நிதி திரட்ட இந்த மேடையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றே டானே விரும்பினார். ஆனால் இதில் சட்ட சிக்கல் வரலாம் என உணர்ந்தவர், சட்ட விரோதமாக இல்லாத எந்த முயற்சி அல்லது திட்டத்திற்கும் நிதி திரட்டலாம் எனும் வகையில் சேவையை அமைத்தார்.

அதே போல நிதி கோருபவர்கள், சமபங்கு உரிமையை அளிக்கும் வசதியையும் அளிக்கவில்லை. மாறாக, நிதி கோருபவர்கள் தாங்கள் விரும்பிய வகையில் நிதி அளிப்பவர்களுக்கு நன்றி தெரிவிக்க பரிசளிக்க வழி செய்யும் வகையில் சேவை அமைந்திருந்தது. திட்டத்தின் பெயர் பொறித்த ஒரு டி-ஷர்ட்டாக அல்லது திட்டத்தின் மூலம் உருவாகும் சேவையின் ஒரு அம்சமாக இருக்கலாம். மேலும், நிதி கோருபவர்கள் தங்கள் திட்டம் பற்றி விவரிக்கவும் வழி செய்யப்பட்டிருந்தது.

இந்த அம்சங்கள் எல்லாம் சேர்ந்து இண்டிகோகோ தளத்தை வெற்றி பெற வைத்து கூட்ட நிதி கருத்தாக்கத்தையும் பிரபலமாக்கியது. ஆனால், இந்த வெற்றி இண்டிகோகோ குழுவுக்கு எளிதாக சாத்தியமாகிவிடல்லை. டோனா இந்த தளத்தை துவக்கிய காலத்தில் அமெரிக்காவில் வெடித்த வீட்டுக்கடன் நெருக்கடி பிரச்சனை காரணமாக மாபெரும் பொருளாதார தேக்க நிலை உண்டாகியிருந்தது.

பொருளாதார சோதனை

அமெரிக்க தேக்க நிலை உலக பொருளாதாரத்தையும் பாதித்திருந்தது. இந்த சூழலில் புதிய நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவது மிகவும் கடினமாக இருந்தது. இந்த பின்னணியில் பயனாளிகளே நிதி திரட்ட வழி செய்யும் இணையதளத்தை நடத்த நிதி உதவி கேட்டு டானே முதலீட்டாளர்களை அணுகிய போது, இல்லை எனும் பதிலை பெற்றார். இப்படி 90 க்கும் மேற்பட்ட முறை நிராகரிப்பை எதிர்கொண்டாலும் அவர் மனம் தளராமல் முயற்சி செய்தார்.

இண்டிகோகோ தளத்திற்கு நிதி மறுக்கப்பட்ட ஒவ்வொரு முறையும், இத்தகைய சேவைக்கான தேவையை உறுதி செய்வதாக உணர்ந்து தொடர்ந்து முயற்சித்தார். இதனிடையே இண்டிகோகோ தளத்தை தொடர்ந்து நடத்தி வந்தார். அதன் மூலம் நிதி திரட்டும் திட்டங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். முதலீட்டாளர்களை சம்மதிக்க வைப்பதற்கு பதில் சக மனிதர்களிடமே நிதி கேட்கலாம் எனும் கருத்தாக்கத்தால் ஈர்க்கப்பட்ட பலரும் இண்டிகோகோ தளத்திற்கு வந்தனர். இந்த கருத்தாக்கத்தின் புதுமையை நம்பிய பலரும் இத்திட்டங்களுக்கு ஆதரவு அளித்தனர்.

இதனிடையே காங்கோவைச்சேர்ந்த மனித உரிமை போராளியின் மருத்துவ சிகிச்சைக்காக இண்டிகோகோ தளத்தில் நிதி கோரப்பட்டதும், அவரது கதையால் நெகிந்து போனவர்கள் உலகம் முழுவதிலும் இருந்து நிதி அளித்ததும், இந்த மேடைக்கான வெற்றிக்கதையாக அமைந்து ஊக்கம் அளித்தது. தொடர்ந்து இது போன்ற வெற்றிக்கதைகள் இண்டிகோகோ தளத்தை வெற்றி பெற வைத்தது, இதனிடையே கிக்ஸார்ட்டர் தளமும் துவங்கி வெற்றி பெற்றது கூட்ட நிதி கருத்தாக்கத்தை பிரபலமாக்கியது. கிக்ஸ்டார்ட்டர். இண்டிகோகோ ஆகிய தளங்களின் அடிப்படை நோக்கம் ஒன்றாக அமைந்தாலும், இண்டிகோகோ தனது செயல்பாட்டில் மாறுபட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. கிக்ஸ்டார்ட்டர் தளத்தில் திட்டங்களுக்கு நிதி திரட்ட இலக்கு உண்டு. இந்த நிதி இலக்கு வெற்றிகரமாக நிறைவேறினால், முழுத்தொகை கிடைக்கும். பல நேரங்களில் கோரியதற்கும் அதிக தொகை கிடைக்கலாம். ஆனால், கேட்ட தொகை கிடைக்கவில்லை எனில், அது வரை சேர்ந்த நிதி திரும்பி அளிக்கப்பட்டுவிடும்.

வெற்றி தேவதை

இண்டிகோகோ தளம், இலக்கு சார்ந்த நிதி திரட்டும் வசதியோடு, கேட்ட நிதி கிடைக்காவிட்டாலும், சேர்ந்த நிதியை வைத்துக்கொள்ளும் வகையிலான வசதியையும் அளித்து வருகிறது. பயனாளிகள் தாங்கள் விரும்பிய வழியை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த வகையில், இண்டிகோகோ மேடை மேலும் ஜனநாயகமயமானதாக இருக்கிறது. அதே போல நிதி கோரும் திட்டத்தை முன் வைப்பதிலும் இண்ட்கோகோ ஜனநாயகத்தன்மை கொண்டிருக்கிறது. எல்லா திட்டங்களையும் சமமாக நடத்துவதோடு, எந்த ஒரு திட்டத்தையும் முன்னிறுத்தி வெற்றி பெற முயற்சிப்பதில்லை. ஆயிரக்கணக்கான திட்டங்களில் எந்த திட்டம் முன்னிறுத்தப்படும் என்பதற்கான பாரபட்சம் இல்லாத அல்கோரிதமை உருவாக்கியிருக்கிறது.

`ஒரு நல்ல ஐடியா உங்களிடம் இருக்கிறதா? எங்களிடம் வாருங்கள்’ என ஆர்வம் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்து நம்பிக்கை அளிக்கும் நிதி திரட்டும் மேடையாக இண்டிகோகோ உருவாகியிருக்கிறது. இண்டிகோகோ தளத்தை உருவாக்குவதற்காக ஒரு இண்டிகோகோ இருந்திருந்தால் இந்த தளத்தை இன்னும் முன்னதாக உருவாக்கி இருப்போம் என்று டானோ ஒரு முறை கூறியிருக்கிறார். இண்டிகோகோ சேவையின் தேவையையும், அருமையையும் உணர்த்துவதோடு அதன் வெற்றியையும் இந்த வாசகம் உணர்த்துகிறது.

தகவல் உதவி : சைபர் சிம்மன்

error: Content is protected !!