இந்திய பேட்மிண்டன் அணி தாமஸ் கோப்பையை வென்று வரலாற்று சாதனை!

இந்திய பேட்மிண்டன் அணி தாமஸ் கோப்பையை வென்று வரலாற்று சாதனை!

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டியில், 73 வருடங்களில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தாமஸ் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற போட்டியில், உபெர் கோப்பையில் தாய்லாந்திடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து பெண்கள் அணி. ஆனால், இந்திய ஆண்கள் பேட்மிண்டன் அணி பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தாமஸ் கோப்பையின் அரையிறுதிக்குள் நுழைவதற்கு மலேசியாவை 3-2 என்ற கணக்கில் வெற்றியைப் பெற்றது. இதனால், தாமஸ் கோப்பையில் இந்தியாவுக்கு ஒரு வெண்கலம் உறுதியாகியுள்ளது என பெரிய அளவில் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், தாய்லாந்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஶ்ரீகாந்த் தலைமையிலான இந்திய அணி, இந்தோனேசியாவை வீழ்த்தி வெற்றிபெற்றுள்ளது. இந்திய அணி ஒற்றையர் பிரிவில் லக்ஷய சென் மற்றும் ஶ்ரீகாந்த் கிடாம்பியும், இரட்டையர் பிரிவில் சீரக் செட்டி, ரங்கி ரெட்டி இணையும் வெற்றி பெற்றுள்ளது. முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என வெற்றியை பதிவு செய்தது இந்திய பேட்மின்டன் அணி. 73 வருடங்களில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை பாராட்டும் வகையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “தாமஸ் கோப்பையை இந்தியா வென்றதால் ஒட்டுமொத்த தேசமும் மகிழ்ச்சியில் உள்ளது. இந்த வெற்றி எதிர்காலத்தில் பல விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

இதேபோல, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “தாமஸ்கோப்பை சாம்பியன்ஷிப்பை முதன்முறையாக வென்று சாதனைபடைத்த இந்திய அணி வீரர்களுக்கு வாழ்த்துகள் என தெரிவித்துள்ள அவர், இந்த வெற்றிக்கு துணை நின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், “தாய்லாந்தில் நடந்த தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை புரிந்திருக்கும் இந்திய அணியின் வீரர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.. சுதந்திர இந்தியாவின் 73 ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இச்சாதனையின் மூலம் இந்திய விளையாட்டுத் துறையின் மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்கம் சேர்ந்திருக்கிறது. பேட்மிண்டன் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை விதைத்திருக்கும் இந்திய பேட்மிண்டன் அணியின் வெற்றிப்பயணம் தொடரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதை எல்லாம் தாண்டி பாங்காக்கில் நடைபெற்ற   பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் 14  முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தோனேஷியாவை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி,  முதன்முறையாக பெருமைமிக்க தாமஸ் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய ஆண்கள் அணிக்கு ரூ. 1 கோடி பரிசை, முன்னெப்போதும் இல்லாத வகையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், அறிவித்துள்ளார்.

அனுராக் சிங் தாக்கூர் இந்த  முடிவுடன் வெற்றியைக் கொண்டாடியுள்ளார்.  “ப்ளே-ஆஃப் சுற்றில் மலேசியா, டென்மார்க் மற்றும் இந்தோனேசியாவுக்கு எதிரான தொடர்ச்சியான வெற்றிகளுடன் தாமஸ் கோப்பையை வென்ற இந்தியாவின் அசாதாரண சாதனை விதிகளை தளர்த்துவதற்கு வகை செய்தது. இந்த வார இறுதியில் இந்தியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்த அணிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்துள்ளார்..

Related Posts

error: Content is protected !!