கலவர பூமியான காஷ்மீருக்கு இப்போதும்/அப்போதும் என்ன நேர்ந்தது? கம்ப்ளீட் ரிப்போர்ட்!

கலவர பூமியான காஷ்மீருக்கு இப்போதும்/அப்போதும் என்ன நேர்ந்தது? கம்ப்ளீட் ரிப்போர்ட்!

நேற்றைய இன்றைய நாளைய தலைப்பு செய்திகளில் இடம் பெற்ற /பெற இருக்கும் இந்திய வரைப்படத்தின் தலைப்பகுதிதான் முன்னொரு காலத்தில் நம் எம் ஜி ஆரால் பியூட்டிஃபுல் என்று வர்ணிக்கப்பட்ட காஷ்மீர் . சீதோஷ்ன நிலையில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் இப்பகுதி மத்திய அரசுக்கும், அரசு நிர்வாகிகளுக்கு ஹாட்டான மாநிலம் இதுதான் என்றால் மிகையல்ல. அதிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கோரி வந்ததை போலவே காஷ்மீரிகள் தனி நாடு கேட்டு போராடி வந்தார்கள் என்பதெல்லாம் அண்மைகாலத்தில் மறைக்க அல்லது மறுக்கப்பட்டு விட்டது. இப்போது நடு தழுவிய விவாதப் பொருளாகி விட்ட இந்த காஷ்மீர் பின்னணியையும், அங்கு நிலவும் சூழலையும் ஒவ்வொரு இந்தியரும் புரிந்து கொள்ள வேண்டிய நேரமிது.

அதாவது பல ஆண்டுகளாக அந்நியரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்த நம் இந்தியாவின் பகுதி (பிரிட்டிஷ் இந்தியா) 1947 ஆகஸ்ட் 15-இல் மவுண்ட் பேட்டன் திட்டத்தின்படி, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாக பிரிக்கப்பட்டது. அதே சமயம் இந்நாட்டில் உள்ள நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் தொடர்பாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூழ்ச்சிகரமான ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்பதுதான் அந்தத் திட்டம். அந்த வகையில் இந்தியாவுடனும் இணையாமல், பாகிஸ்தானுடனும் இணையாமல் தனித்துவமாகச் செயல்பட விரும்புவதாக அந்தப் பிரதேசத்தை அப்போது ஆட்சி செய்துவந்த மன்னர் ஹரிசிங் அறிவித்தார். இந்து மதத்தை சேர்ந்தவர் இந்த மன்னர்; ஆனால் அங்குள்ள மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். அதையொட்டி இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களும், ஆட்சியாளர்களும் ஆசை காட்டுதல், திரைமறைவுச் சூழ்ச்சிகள், மிரட்டுதல், நேரடியாகப் படையெடுத்தல் போன்ற எல்லா வழிமுறைகளையும் கையாண்டு எப்படியாவது காஷ்மீரைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிட வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தார்கள்.

ஆனால், 1947 அக்டோபர் 22-ம் தேதியே பாகிஸ்தான் படைகள் அதிரடியாயா காஷ்மீருக்குள் நுழைந்து அந்தப் பிரதேச பகுதிகளை ஆக்கிரமித்தன. இதனால், பலவீனமான படைகளை வைத்திருந்த மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாட, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பை முறியடித்தது. அப்போது பாகிஸ்தான் ஆக்கிரமித்த பகுதிகள்தான் இப்போதும் ‘ஆசாத் காஷ்மீர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ளது. மேலும் பாகிஸ்தான் காஷ்மீரைக் கபளீகரம் செய்து விடாமலிருக்க, இந்தியாவுடன் இணைவதற்குச் சம்மதம் தெரிவித்து மன்னர் ஹரிசிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஷேக் அப்துல்லாவும் அந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட பின்னரே, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உடனே பாகிஸ்தான் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி பின்னோக்கி விரட்ட இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. சிறீநகர் முற்றுகையை உடைத்து இந்தியப் படைகள் முன்னேறின.

அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், ‘காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு’ ஆகிய மூன்று விஷயங்களை மட்டும் இந்தியா கவனித்துக்கொள்ளும் என அறிவிக்கப் பட்டது. 1947-ம் ஆண்டு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பிறகு, இந்தத் தன்னாட்சி அதிகாரம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டது. சட்டவிதி 370-ன்படி இந்திய அரசியல் அமைப்பில், ஜம்மு மற்றும் காஷ்மீருக்குத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிதி மாநில அரசாங்கம் தனக்கேற்ற சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் அதிகாரத்தை வழங்குகிறது. மேலும், மாநிலத்தின் தனிப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளலாம்.

அதேபோல், 35ஏ சட்டவிதியும் உருவாக்கப்பட்டது. இதன்படி, காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவர்கள் மட்டுமே அங்கு சொத்துகள் வாங்க முடியும். வெளிநபர்கள் சொத்துகள் வாங்க முடியாத நிலையும் உள்ளது. இந்நிலையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என பி.ஜே.பி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 35 ஏ சட்டத்தை இந்திய அரசியல் பிரிவிலிருந்து நீக்க 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ஒருதரப்பு வழக்கு போட்டது. அந்த வழக்கில், இதுவரை எந்த முடிவும் எட்டப்படாமல் உள்ளது. அதேநேரம், பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையிலும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வரும் ஆக்ஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று இதற்கான அறிவிப்பை பிரதமர் மோடி அறிவிக்க உள்ளார். இந்த நிலையில், நேற்று காஷ்மீரில் தங்கியிருந்த அமர்நாத் யாத்ரிகர்களை உடனடியாக வெளியேறும்படி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. காஷ்மீரில் தற்போது ஆளுநர் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்தியே காஷ்மீர் விவகாரத்துக்கு முடிவுகட்ட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

கடந்த பல வருடங்களாகவே காஷ்மீரை இந்தியாவிடமிருந்து பிரிக்க வேண்டும் என்று தினமும் காஷ்மீர்ப் பிரிவினைவாதிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். இந்நிலையில் சட்டத்தை மட்டும் ரத்து செய்தால், மீண்டும் காஷ்மீர் கலவர பூமியாக மாறிவிடும் என்பதால்தான், ஜம்முவைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாநிலமும், லடாக் மற்றும் காஷ்மீரைத் தனி யூனியன் பிரதேசங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலையில் திடீரென நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவை 307-ஐ நீக்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் 35ஏ மற்றும் 370வது சட்டப்பிரிவுகள் ரத்து செய்ய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு
குடியரசுத் தலைவரும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார் என்று மத்திய அரசு இதற்கான அறிவிப்பாணையை வெளிட்டுள்ளது.

இப்போது நிறைவேற்றப்பட்ட 370வது பிரிவு ரத்தால் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் இனி ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும். பிற மாநில மக்களும் ஜம்மு-காஷ்மீரில் இனி அசையா சொத்துக்களை வாங்கலாம். வெளிமாநில ஆண்களை திருமணம் செய்தாலும் இனிமேல் ஜம்மு- காஷ்மீரில் அம் மாநில பெண்கள் சொத்துக்களை வாங்கலாம்.

மேலும் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு -காஷ்மீர் செயல்படும்; சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக் செயல்படும் என்று அமித்ஷா தெரிவித்தார். இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ச்கரத்தின் கீழ் காஷ்மீர் வந்து விட்டதை சில பல தர்ப்பினர் பாராட்டவும் செய்கிறார்கள். ஆனால் காலப் போக்கில்தான் இதன் எதிர்விளைவுகள் தெரியவரும்!

error: Content is protected !!