வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5 வரை நீடிப்பு!

வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்றுதான் (ஜூலை-31 )கடைசி நாள் என்று வருமான வரித் துறை அறிவித்த நிலையில் தற்போது வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு நீட்டிக்கப்பட்டது குறித்து வருமான வரித்துறை தரப்பில், “கடைசி நேரத்தில் ஆதார் எண் இணைப்பதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இந்த தொழில் நுட்ப க்ோளாறால் வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்பட்ட சிரமத்தை கவனத்தில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 5 வரை அரசு நீடித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோரின் கவனத்திற்கு
வருமான வரி செலுத்துவதற்காக வருமான வரித்துறை அலுவலகங்களில் சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
வருமான வரி கணக்குகளை ஆன்லைன் மூலமாகவும் தாக்கல் செய்ய முடியும். இருப்பினும் ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருமானம் உள்ளவர்கள், வருமான வரித்துறையிடமிருந்து வரி திரும்பப் பெற வேண்டிய தேவை இல்லாதவர்கள் படிவங்கள் மூலம் வரி தாக்கல் செய்ய முடியும்.இதுவரை ஆன்லைன் முறையில் 2 கோடி தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன என்று வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தனிநபர்கள் மற்றும் இந்து கூட்டுக் குடும்பத்துக்கு ஆண்டின் இறுதியில் ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் அனைத்து சொத்து விவரங்களையும் அளிக்க வேண்டும். ஐடிஆர் படிவம் எண் 2, எண் 3, எண்4 ஆகிய படிவங்களில் ஏஎல் பிரிவில் விவரங்களை தெரிவிக்க வேண்டும். இதில் அசையா மற்றும் அசையா சொத்துக்களின் விவரங்களை அளிக்க வேண்டும். மேலும் இந்தப் பிரிவில் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் மூலம் வரும் வருமானம், வாடகை மூலம் வருமானம் போன்றவற்றையும் தெரிவிக்க வேண்டும்.