சென்னையில் நவம்பர் 27இல் வி.பி.சிங் சிலை திறப்பு விழா: இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு

சென்னையில் நவம்பர் 27இல் வி.பி.சிங் சிலை திறப்பு விழா: இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு

விஸ்வநாத் பிரதாப் சிங் என்கிற விபி.சிங் மத்தியில் வெறும் 11 மாதங்களே ஆட்சியில் இருந்தாலும் மக்களாட்சி என்ற வார்த்தைக்கு இந்திய அரசியல் அகராதியில் அர்த்தத்தைத் தந்தவர். நம் நாட்டில் மாபெரும் அரசியல் சக்தியாகத் தி‌கழ்ந்தவர்…. சுதந்திர இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பதவி வகித்தவர்… தனது பிரதமர் பதவியையே விலையாக கொடுத்து பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியவர்… அதற்காக இட ஒதுக்கீட்டுப் போராளி என கொண்டாடப் பட்டவர்…. காங்கிரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டவர் என பல சிறப்புகளையும், பெருமைகளும் கொண்டவர்தான் வி.பி.சிங்.. அதிலும் 1989ஆம் ஆண்டு கூட்டணி ஆட்சியில் விபி சிங் பிரதமராக இருந்த போது பிற்படுத்த பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டை அளித்திடும் வகையில் கொண்டுவரப்பட்ட மண்டல் கமிஷனை அமல்படுத்தினார். இதன் மூலம் தான் தற்போது வ்ரையில் சாதிவாரி இடஒதுக்கீடு என்பது அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்டல் கமிஷன் மூலம் சாதிவாரி இடஒதுக்கீட்டை வெற்றிகரமாக இந்தியாவில் அமல்படுத்திய மறைந்த முன்னாள் பிரதமர் விபி சிங்கிற்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ சிலையை தமிழக அரசு நிறுவியுள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்த சிலை திறப்பு விழாவானது வருகிற நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அழைப்புகளை முக்கிய அரசியல் தலைவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. நேற்று உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும், INDIA கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை சந்தித்து தமிழக அரசு சார்பில் திமுக எம்பி டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்தது இருந்தார். இதனை அடுத்து வரும் நவம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ள சிலை திறப்பு விழாவுக்கு அகிலேஷ் யாதவ் வரவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது .

வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, உள்ளிட்ட 24 கட்சிகள் உள்ள இந்தியா கூட்டணியில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் முக்கிய பங்காற்றி வருகிறது. இதில், ராகுல்காந்தி முன்னெடுத்த சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சாரத்தில் அகிலேஷ் யாதவ் உடன் படாமல் கருத்து தெரிவித்து வந்தார். இத்தனை ஆண்டுகள் காங்கிரஸ் இதனை ஏன் செய்யவில்லை என கருத்து தெரிவித்து இருந்தார். மேலும், உத்திர பிரதேச தொகுதி பங்கீடு குறிதும் காங்கிரஸ் – சமாஜ்வாடி இடையே சிறு கருத்துவேறுபாடு நிலவியது. இதனால் இந்தியா கூட்டணிக்குள் ஏதேனும் குளறுபடி ஏற்பட்டு விடுமோ என சிறு பதட்டத்தில் இந்தியா கூட்டணி தலைவர்கள் இருக்கிறார்கள்.

ஆரம்பம் முதலே இந்தியா கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைய, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய பங்காற்றி வருகிறார். பெரும்பாலான இந்தியா கூட்டணி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் நட்பு பாராட்டும் வகையில் செயல்பட்டு வருகிறார். அதனால், வரும் நவம்பர் 27இல் சென்னை வரும் அகிலேஷ் யாதவிடம் இந்தியா கூட்டணி தொடர்பாகவும் , காங்கிரஸ் உடன் உடன்பாடு ஏற்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.

வரும் டிசம்பர் 3ஆம் தேதிக்கு பின்னர் இந்தியா கூட்டணி மட்டுமல்லாது, 2024 தேர்தல் களமே வேறு மாதிரி இருக்க கூடும் என்கிறது இந்திய அரசியல் வட்டாரம். டிசம்பர் 3ஆம் தேதியில் மத்திய பிரதேசம் , ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. இதில் பெரும்பாலும் பாஜகவும் காங்கிரசும் நேரடி போட்டியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!