சிலைக்கடத்தல் விசாரணை : ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் Vs இந்து அற நிலையத்துறை!

சிலைக்கடத்தல் விசாரணை : ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் Vs இந்து அற நிலையத்துறை!

“இந்தியாவிலேயே எந்த ஐஜியும் நேரடியாக சென்று விசாரணை செய்து சிலையை மீட்டது கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் நான் மட்டும் சிலை கடத்தப்பட்ட விவகாரத்தில் நேரடியாக விசாரணை செய்து ஒவ்வொரு சிலைகளாக மீட்டு வருகிறேன். சிலை திருடு போனால் அற நிலையத் துறைதான் புகார் தர வேண்டும். ஆனால், அவர்கள் புகார் தரவில்லை. புகார் தர மறுக்கின்றனர். ஒரு கட்டத்தில், எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் உள்ள சிலை இல்லை என்று கூறி வருகின்றனர்.” என்றெல்லாம் போலீஸ் ஐ. ஜி. பொன் மாணிக்கவேல் சொல்லியிருந்த நிலையில் ’காவல்துறை அதிகாரியாக முறையான விசாரணை நடத்தாமல் தனிப்பட்ட விளம்பரத் திற்காக வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி ஐஜி பொன் மாணிக்கவேல் அத்துமீறி நடக்கிறார்’ என்று அறநிலையத்துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக உயர் நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்டார். சிலை கடத்தல் பிரிவில் ஐஜி பொன் மாணிக்கவேலின் செயல்கள் காவல்துறை அதிகாரிகளே விமர்சிக்கும் வண்ணம் தனி நபர் விளம்பர வேலைகளாக அமைகிறது என்ற பிரச்சாரம் எழுந்தது. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் உண்மைகளைவிட கூடுதல் தகவல் என்ற பெயரில் பல தகவல்கள் பரப்பப்பட்டன. சமீபத்தில் தமிழக அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா திடீரென கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்தது எந்த அடிப்படையில், அவருக்கு முறையாக சம்மன் அனுப்பினீர்களா? விசாரணைக்கு அழைத்தீர்களா என்று உயர் நீதீமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.

அதே சமயம் இது குறித்து பொன். மாணிக்க வேல், “தமிழகத்தில் சாமி சிலைகள் காணாமல் போனது தொடர்பாக எங்களுக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரில் முகாந்திரம் இருந்ததால்தான் 21 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலை காணாமல் போன புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட எல்லா காவல் நிலையங்களிலும் வழக்கு போட வைத்துள்ளோம். கடந்த 8 மாதத்தில் 20 சிலைகள் கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஐஜி என்ற முறையில் நான் நேரடியாக களத்தில் இறங்கி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது; எனினும், நான் விசாரித்த வகையில் பல தகவல்கள் கிடைத்தபின்னர் அதிர்ந்தேன்; எங்களது பிரிவில் 200 போலீசார் பணிபுரிந்து வருகின்றனர். இருப்பினும் நான் எந்த அதிகாரிகளின் உதவியும் இல்லாமல் நானே தனிப்பட்ட முறையில் நேரடியாக களத்தில் இறங்கி நடவடிக்கை எடுத்து வருகிறேன். என்னுடன் 4 போலீசாரை மட்டும் வைத்துக்கொண்டு நானே நேரடியாக விசாரணை செய்து சிலைகளை மீட்டுள்ளேன்.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் இருந்து இதுவரை 1 லட்சம் சிலைகள் காணாமல் போனதாக ஊடகங்கள் யூகத்தின் பேரில் செய்தி வெளியிட்டு இருக்கலாம். அதே நேரத்தில், ஏராளமான சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தற்போது 3.80 லட்சம் சிலைகள் உள்ளன. அந்த சிலைகளை காப்பாற்ற வேண்டும். இதற்கு சிலைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட வேண்டும். மேலும், காணாமல் போன சிலைகளை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர் நடவடிக்கை எடுக்கும்.

மேலும் எனது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் விசேஷ அக்கறை எடுத்துக்கொண்டு மனுதாரர் ஆகி நம் பொருள், நம்ம நாடு என்கிற அடிப்படையில், வழக்குகள் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறேன். நான் ரிட்டையர்டு ஆனால் கூட இந்த வழக்குகளில் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளிப்பேன். சாட்சியமாக நின்று பதில் அளிப்பேன். சிலை காணாமல் போனது, சிலை செய்ததில் முறைகேடு தொடர்பாக பல வழக்குகள் பதிந்து விசாரணை செய்து உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ேளாம். பல சிலைகளை மீட்டுள்ளோம். காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வர் கோயில் வழக்கில் விசாரணை நடத்தி, மோசடி நடந்தது ஊர்ஜிதமாக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றியது தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு உள்ளது. அதனால், இதுகுறித்து நான் பேசுவது நன்றாக இருக்காது. இன்னும் ஒரு வாரத்தில் எல்லாம் முடிவுக்கு வந்து விடும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்ட விதம் குறித்த விமர்சனம் வைத்த அறநிலையத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஸ்ரீதரன் செய்தியாளர்களிடம் பேசிய போது, “சிலை கடத்தல் குறித்த வழக்குகளின் விசாரணையில் குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது என்பதும், அதே சமயத்தில் தவறேதும் செய்யாத நிரபராதிகள் யாரும் கைதுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதும் கூட்டமைப்பின் கோரிக்கையாகும்.

இத்துறையில் நேர்மையாக தன் கடமையைச் சட்ட விதிகளின்படி நிறைவேற்றும்பொழுது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் பல்வேறு நிலைகளில் துறை அலுவலர்கள் மீது தாக்குதலைத் தொடுக்கிறார்கள். கோயிலுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்கள் அடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளிப்பேன் என்று மிரட்டுகிறார்கள். இதனால் அதிகாரிகளுக்கு வேலை செய்வதில் சுணக்கம் ஏற்படுகிறது.

அறநிலையத்துறையில் நேர்மையாக செயல்பட்ட கூடுதல் ஆணையர் கவிதா மீது எந்த விசாரணையும் மேற்கொள்ளாமல், எந்தவித முகாந்திரமுமின்றி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைப்பற்றியும், அறநிலையத் துறைப்பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்கள் ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே இத்துறை மற்றும் துறை அலுவலர்கள் மீது சிலை கடத்தலுக்கு உடந்தை என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது.

ஐஜி பொன் மாணிக்கவேல் கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி வருகிறார். அவர் கோயில்களுக்கு சொந்தமான சிலைகள் குறித்த விவரங்களை புகைப்படத்துடன் அளிக்கும்படி கோரியிருந்தார். ஆனால் பாதுகாப்பு கருதி அத்தகைய விளம்பரங்களை வழங்க இயலாது எனவும், சிலை களவு குறித்து குறிப்பான விவரங்கள் கோரப்பட்டால் அந்தச் சிலைகள் குறித்து மட்டும் விவரங்கள் வழங்கப்படும் என்று முன்னாள் ஆளுநர் தனபால் தெரிவித்தார்.

அதன் பின்னர் வெளிநாடுகளில் உள்ள மியூசியங்களில் கோயில்களிலிருந்து திருடப்பட்ட சிலைகள் தவறான தகவல் அடிப்படையில் தங்களுக்கு விற்கப்பட்டதை அறிந்து அந்த நிறுவனங் கள் தாங்களாகவே சிலைகளை ஒப்படைக்க முன் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் தானே கண்டுபிடித்ததாக பொன் மாணிக்கவேல் தவறான தகவல்களை ஊடகங்களில் பரப்பினார். இது குறித்து பொன் மாணிக்கவேல் மீது அப்போதைய ஆணையர் தனபால் புகார் அளித்தார்.

இதனால் பொன் மாணிக்கவேலுக்கு தனபால் மீது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி உருவானது. இதை யடுத்து பழனி தண்டாயுதபாணி கோயில் சிலை செய்ததில் முறைகேடு செய்ததாக தனபால் மீது வழக்குப் பதிவு செய்தார். மேற்கண்ட வழக்குக்காக விசாரணைக்கு அழைக்கப்பட்ட அனைத்து அலுவலர்களிடமும் தனபால் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்க பொன் மாணிக்கவேல் முனைந்தார்.

இதே போன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை விவகாரத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முத்தையா ஸ்தபதியிடம் கூடுதல் ஆணையர் கவிதா கூறியதன் அடிப்படையில் தங்கம் வசூலிக்கப்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும்படி கட்டாயப் படுத்தியுள்ளார். அப்படி அளிக்காவிட்டால், ஸ்தபதியின் மகனை விசாரணை அழைக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியுள்ளனர்.

காஞ்சிபுரம் கோயில் திருப்பணி வழக்கில் தடையாணை பெற்றதால் அவர் மீது கோபமாக இருந்த பொன் மாணிக்கவேல், உள் நோக்கத்துடம் சோமஸ்கந்தர் சிலை வழக்கில் செயல் அலுவலர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் கைது செய்துள்ளார். ஆனால் குற்றத்தை ஒப்புக்கொண்ட செயல் அலுவலரைக் கைது செய்யவில்லை.

சிலைகள் செய்யப்பட்டதற்காக பொதுமக்களிடம் தங்கம் வாங்கியதாக யூகத்தின் அடிப்படை யிலேயே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பொதுமக்களிடம் இருந்து தங்கம் வழங்கியதாக இதுவரை ஒரு புகார்கூட வரவில்லை. சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி காதர்பாட்சா கைப்பற்றப்பட்ட சிலைகளை விற்பனை செய்து கைதானபோது சிலைத் திருட்டில் நேரடியாக ஈடுபட்ட அவரது ஜாமீன் மனுவில் ஆட்சேபனை செய்யவில்லை. ஆனால் சிலை கடத்தலுக்கு தொடர்பில்லாத அறநிலையத்துறை அதிகாரிகளை உள்நோக்கத்துடன் கைது செய்து மனு விசாரணையின்போது சர்வதேசக் கடத்தல் குமபலுடன் தொடர்பிருப்பதாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து ஜாமீன் வழங்க கடுமையாக ஆட்சேபிக்கின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை அலுவலக ஆவணங்களின்படி 1920 முதல் 2017 வரை 803 கோயில்களில் 2145 விக்ரகங்கள் மற்றும் 478 சிலைகள் களவு போயுள்ளன. இதில் 56 மட்டும் கண்டுபிடிக்கப்பட்டு, 18 சிலைகள் மட்டும் கோயில்களுக்கு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. கோயில்களில் நடைபெற்ற திருட்டுகளில் 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க இயலவில்லை என காவல்துறையால் முடித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் உயர் நீதிமன்ற உத்தரவின்படி அவற்றைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. மாறாக பொய்யாக புனையப்பட்ட விவகாரம் மூலம் கைது செய்வது நடக்கிறது.

பழனி, காஞ்சிபுரம் கோயில் வழக்குகளில் சிலைகள் எதுவும் காணாமல் போகவில்லை. துறை அலுவலர்களை தேவையற்ற முறையில் விசாரணை என்ற பெயரில் அழைத்து மிரட்டுவதால் தங்களை வேறு துறைக்கு மாற்றுங்கள் அல்லது குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்வோம் என மாநிலம் முழுவதுமிருந்து கடிதம் வருகிறது.

விசாரணை குறித்து எவ்விதமான அச்சமும் துறை அலுவலர்களுக்கு இல்லை. நியாயமான பாரபட்சமற்ற விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார். மேற்கண்ட வழக்குகளில் காவல்துறை தரப்பில் கோரப்பட்ட ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் துறை அலுவலர்கள் தவறு செய்திருந்தால் சட்டத்தின் முன் நிறுத்த கூட்டமைப்பு தயாராக உள்ளது. குற்றம் இழைத்தவர்கள் தப்பிவிடக்கூடாது, அதே நேரம் தவறேதும் செய்யாத நிரபராதிகள் கைதுக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாகக் கூடாது என்பதே எங்கள் கோரிக்கையாகும்.” என்று ஸ்ரீதரன் தெரிவித்தார்.

மேலும் இந்த “இந்த ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறார். சிலை கடத்தல் மாஃபியா சுபாஷ் கபூர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை. தீனதயாளன் வீட்டில் நூற்றுக்கணக்கான சிலைகள் கைப்பற்றப்பட்டாலும் எப்.ஐ.ஆர் மட்டுமே போட்டுள்ளனர். சார்ஜ் ஷீட் போடவில்லை. ஜாமீனில் விடுவதிலும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் எங்கள் அற நிலையத் துறை அக்கறை இல்லாமல் உள்ளது என்கிறார்கள். ஒரு உண்மைய புரிந்து கொள்ள வேண்டும்.. செக்‌ஷன் 29 –ன்படி சொத்துப்பதிவேடு பராமரிக்கவேண்டும். தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளன. ஆனால் 400 அலுவலர்கள் மட்டுமே உள்ளனர். இதுதான் எங்கள் நிலை. இதற்கெல்லாம் காரணம் இந்த இந்து அற நிலையத் துறை அரசின் கைகளிலிருந்து சில தனியார் அமைப்புகளின் கைகளுக்கு மாற்றும் முயற்சிகள் நடக்கின்றன. அதற்கு பொன் மாணிக்கவேல் போன்ற அதிகாரிகள் மூலம் அதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்” என்றும் ஸ்ரீதரன் சொன்னார்

error: Content is protected !!