June 4, 2023

தடுப்பூசி கண்டுப்பிடிப்பின் மீது நமக்கு சில கவலைகள்!

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை ஆகஸ்டு பதினைந்து சுதந்திர தினத்தில் வெளியிடுவோம் என்று மோடி அரசின் கீழ் வரும் நிறுவனம் அறிவித்திருககிறது. அதன் பின்னணியில் இருக்கும் குழப்பங்கள் கேள்விகளை இந்த கட்டுரை அலசுகிறது. கீழே தி வயர் கட்டுரைக்கான லிங்க்கை கொடுத்திருக்கிறேன்.. இங்கே அதன் தமிழாக்கத்தையும் கொடுத்திருக்கிறேன்..

பாரத் பயோடெக்கின் கோரோவாக்ஸ் என்னும் தடுப்பூசி எந்தளவுக்கு முற்றுமுழுதான இந்தியத் தயாரிப்பு..? இந்த வாரத்தின் துவக்கத்தில் ஹைதராபாத்திலிருந்து செயல்படும் பாரத் பயோடெக் என்னும் இந்திய நிறுவனம் ஒன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR – Indian Council of Medical Research) மற்றும் பூனாவிலுள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துடனும் (NIV – National Institute of Virology) இணைந்து கொரோனா வைரசுக்கு எதிரான ஒரு தடுப்பூசியை கண்டு பிடித்து விட்டதாகவும் அதன் பெயர் கோவாக்சின் என்றும் அறிவித்திருந்தது. . கூடவே DCGI – Drug Controller General of India எனப்படும் இந்திய மருந்துகள் ஒழுங்குபடுத்துதல் ஆணையத்திடம் இருந்தும் மனிதர்கள் மீது இந்த தடுப்பூசியை ஆகஸ்டு மாதத்திலிருந்து பயன்படுத்தி பரிசோதிப்பதற்கான அனுமதியையும் பெற்றுவிட்டது.

கடந்த வியாழனன்று ICMR ன் பல்ராம் பார்கவா, பாரத் பயோடெக்குக்கு எழுதியிருந்த ஒரு கடிதத்தில் “அனைத்து மனித பரிசோதனைகளையும் மருத்துவ பரிசோதனைகளையும் முடித்துவிட்டு அதிகபட்சம் 2020 ஆகஸ்டு 15 ம் தேதிக்குள் பொது மக்களின் பயன்பாட்டுக்கு இந்த தடுப்பூசியை கொண்டு வந்துவிடலாம் என்று கணிக்கிறோம்” என்று எழுதி இருக்கிறார்.

பாரத் பயோடெக் என்பது சாதாரண நிறுவனமல்ல.. மிகவும் புகழ்பெற்ற ஒரு தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம். ரோட்டா வைரஸ், ஹெப்பாட்டிடிஸ், ஜிக்கா, ஜப்பானிய என்சிஃபாலிட்டிஸ் உள்ளிட்ட எண்ணற்ற தொற்றுகளுக்கு எதிராக கிட்டத்தட்ட நானூறு கோடி தடுப்பூசிகளை உலகம் முழுக்க உள்ள நாடுகளுக்கு தயாரித்து அனுப்பும் நிறுவனம்தான் அது. எது எப்படியாக இருந்தாலும் இவர்கள் சொல்லும் இந்த தடுப்பூசியான கோவாக்சின் முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பு என்றும் மிக மிக முன்னேறிய தடுப்பூசி என்றும் சொல்கிறது. இதை அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கிருஷ்ணா எல்லாவே சொல்கிறார்.. இதுதான் பல சந்தேகங்களைக் கிளப்புகிறது.

பாரத் பயோடெக்கின் கூற்றுப்படியே பார்த்தால் இந்த புதிய தடுப்பூசி ‘கோவாக்சின்’ என்பது தற்போது இந்தியாவில் பரவியிருக்கும் கொரோனாவைரஸ் கிருமியின் செயலற்ற வைரசை NIV யிடம் இருந்து பெற்று உருவாக்கப் பட்டிருக்கிறது. இதைத் தவிர வேறு எந்த தகவலும் அவர்களால் வெளியிடப்படவில்லை. முக்கியமாக இந்த தடுப்பூசியின் இயல்பு மற்றும் இது எப்படி உருவாக்கப்பட்டது என்ற இரு கேள்விகளுக்கும் விடையே இல்லை.. தடுப்பூசி தயாரிப்பில் இந்த இரு கேள்விகளும் மிக மிக முக்கியமானவை. அதே போல இதற்கு முன்பு இந்த தடுப்பூசி தயாரிப்பு எப்படி எப்போது தவங்கியது என்ற முக்கியமான தகவலும் இது வரை வெளியிடப் படவில்லை.

NIV பிரித்தெடுத்த செயலற்ற வைரசை ICMR தான் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு கொடுத்திருக்கிறது. கொடுத்த நாள் மே 19. பாரத் பயோடெக் தனது பத்திரிக்கை அறிவிப்பை ஜூன் 29 ல் வெளியிடுகிறது. ஆக வைரசைப் பெற்றதிலிருந்து பாரத் பயோடெக் அறிவித்தது வரைக்கும் இடையில் வெறும் ஐம்பது நாட்கள்தான் இருந்திருக்கின்றன. அந்த காலக் கட்டத்தில்தான் பாரத் பயோடெக் இந்த செயலற்ற வைரசைக் கொண்ட தடுப்பூசியை கண்டுபிடித்திருக்க வேண்டும். இதே ஐம்பது நாட்களில்தான் preclinical trials எனப்படும் மனிதர்களுக்கு சோதிப்பதற்கு முன்பாக செய்யப்படும் சோதனைகளை இந்நிறுவனம் செய்திருக்க வேண்டும். அதாவது அந்த கம்பெனியின் கூற்றுப்படியே எலிகள் மீதும் ஹாம்ஸ்டர்ஸ் எனப்படும் வெள்ளை எலிகள் மீதும் இவர்கள் இந்த காலகட்டத்தில்தான் பரிசோதனை செய்து பார்த்திருக்க வேண்டும். அப்படி செய்த பரிசோதனைகளின் முடிவுகளை DCGI க்கும் இந்த காலகட்டத்தில்தான் மதிப்பீட்டுக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

இந்த நடைமுறைகளை விரைவு படுத்துவதாக ICMR தெரிவித்திருந்தபோதிலும் பொதுவாக விலங்குகளின் மீது தடுப்பூசிகளைப் பரிசோதனை செய்வது குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் தேவைப்படும் ஆய்வு என்பது மருத்துவஉலகம் வைத்திருக்கும் முக்கியமான விதி. சொல்லப் போனால் ஏப்ரல் 7 ஆம்தேதி அளித்த ஒரு பேட்டியில் கிருஷ்ணா எல்லாவே “இந்த தடுப்பூசியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நடத்தப்படும் பரிசோதனைகளை முறைப்படி செய்து முடிக்க குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் ஆகும்” என்று தெரிவித்திருககிறார்.

இதில் மற்றொரு பிரச்சினையும் உள்ளது.. என்னவென்றால் நம் நாட்டில் உள்ள சாதாரண எலிகளின் மீது இந்த கொரோனாவைரசை செலுத்தி பரிசோதிக்க முடியாது.. ஏனென்றால் நம்நாட்டின் சாதாரண எலிகளின் மீது கொரோனா தொற்றுவதில்லை.. இதற்கென்று ஸ்பெஷலான hACE2 Transgenic Mice எனப்படும் ஒரு வகையான எலிகள்தான் வேண்டும். அவற்றின் மீது மட்டுமே கொரேனா தொற்றும். ஆனால் இந்த சிறப்பு எலிகளாவன அமெரிக்கா, ஐரோப்பா அல்லது சீனாவில் இருந்துதான் இங்கே கொண்டு வரப்பட வேண்டும். இதை கிருஷ்ணா எல்லாவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இந்த பிரச்சினைகள் எல்லாம் சேர்ந்துதான் இந்த தடுப்பூசி கண்டுபிடிப்பின் மீது நமக்கு சில கவலைகளைத் தருகின்றன. விலங்குகளின் மீது பரிசோதிப்பதற்கான நேரத்தையே கூட கடைப்பிடிக்காத இந்த கம்பெனி மனிதர்களின் மீது முறைப்படி பரிசோதனை செய்திருக்குமா.? அப்படி பரிசோரதனை செய்திருந்தால்தானே நம் உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.. இவர்கள் இந்த ஐம்பதே நாட்களுக்குள் எலிகளின் மீதும் மனிதர்கள் மீதும் பரிசோதனைகளை செய்து முடித்திருக்க முடியுமா என்பதே நமது கேள்வி.

இதற்கு ஒரே ஒரு மாற்று சாத்தியக்கூறு இருக்கிறது.

இந்த விளக்கம் என்பது இந்த தடுப்பூசியின் மூலம் என்பது இப்படியாக இருக்கலாம் என்ற ஒரு கணிப்பு மட்டுமே.  பாரத் பயோடெக்கானது தற்போது வேறு இரண்டு முக்கியமான தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறது. அதில் முதலாவது கோராஃப்ளூ (coraflu) என்ற தடுப்பூசி.. இதை ஃப்ளூஜென் (FluGen Inc) என்ற நிறுவனத்துடனும் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக் கழகத்துடனும் சேர்ந்து ஒப்பந்தமிட்டு தயாரித்து வருகிறது. இரண்டாவது தடுப்பூசி கொரோனாவைரஸ் நோயாளர்களுக்காக ரேபிஸ் வைரசின் செயலிழக்கப்பட்ட கிருமியை வைத்து தயாரிக்கும் தடுப்பூசி.. இதை ஜெஃபர்சன் வேக்சின் சென்டர் (JVC) என்ற நிறுவனத்தின் இயக்குனரான மேத்திஸ் ஷ்னெல் என்பரோடு இணைந்து தயாரிக்கிறது. இந்த ஷ்னெல் தானாகவே தேடி வந்து பாரத் பயோடெக்கோடு இணைந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

மே மாதம் இருபதாம் தேதியே இந்த JVC யுடன் தனது ஒப்பந்தத்தைப் பற்றி பாரத் பயோடெக் அறிவித்துவிட்டது. அதே போல தடுப்பூசிகளுக்கான பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான லைசென்சையும் அது பெற்றுவிட்டதாக அறிவித்திருந்தது. இது தவிர தடுப்பூசிகளை தயாரிக்கவும் அமெரிக்கா ஐரோப்பா ஜப்பான் தவிர்த்த எண்பது நாடுகளுக்கு அதை ஏற்றுமதி செய்யவும் லைசென்ஸ் பெற்றுள்ளதாக அறிவித்திருந்தது. ஏப்ரல் ஏழாம் தேதி JVC கொரோனாவுக்கு எதிரான சிறப்பான ஒரு தடுப்பூசியான கொரோவாக்ஸ் (Coravax) என்ற மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்திருந்தது. இதுவும் மிகவும் குறிப்பிடத் தகுந்தது.

நோவல் கொரோனா வைரஸ் எனப்படும் இந்த கோரோனா வைரசின் புரோட்டீனை பிரதி செய்வதற்காக செயலிழந்த ரேபிஸ் வைரசை வைத்து தயாரிக்கப்பட்டதுதான் இந்த கோராவாக்ஸ் தடுப்பூசி. இந்த செயலிழந்த வைரசின் புரோட்டீன் சென்று நல்ல நிலையில் உள்ள நம் மனித உடலின் செல்லோடு பொருந்திக் கொண்டு ஒரு தொற்றை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் இந்த வைரசுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி நம் உடலின் பாகங்களில் உருவாகி விடும் என்பதே நிபுணர்களின் நம்பிக்கை. விலங்குகளின்மீது செய்யப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளை வைத்து ஷ்னெல் இந்த முடிவை உறுதிப்படுத்தி இருக்கிறார். இதனுடைய ஃபாலோ அப் முடிவுகளை செய்து முடிக்க இன்னும் ஒரு மாதம் மட்டும் போதும் என்று அப்போது ஷ்னெல் சொல்லி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

கொரோனா வைரசிற்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தியை ட்ரிக்கர் செய்ய செயலற்ற ரேபிஸ் வைரஸ்களைப் பயன்படுத்தும் இந்த தொழில்நுட்பம் ஏற்கெனவே MERS மற்றும் SARS வைரசுகளுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்காக ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டதுதான். ஒரு வேளை இதே தொழில்நுட்பத்தை பாரத் பயோடெக் தனது கோவாக்ஸின் தயாரிப்பிலும் பயன்படுத்த சாத்தியமுள்ளது.

2019 ன் துவக்கத்தில் இந்த பாரத் பயோடெக் நிறுவனம் சிரோன் பேரிங் வாக்சின்ஸ் லிமிட்டட் (Chiron Behring Vaccines limited) என்ற நிறுவனத்தை க்ளாக்ஸோ ஸ்மித் க்ளைன் நிறுவனத்திடம் இருந்து வாங்கியது. இதன் மூலம் அந்த கம்பெனியின் வழியாக ரேபிசிஸ்கு எதிரான தடுப்பூசியான சிரோ ராப் (Chirorab) என்ற மருந்தை வருடத்துக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சம் யூனிட்டுகள் தயாரிக்கத் துவங்கியது. ஆக இந்த தடுப்பூசியை பெரிய அளவில் தயாரிப்பதற்கான தகுதி இந்த கம்பெனிக்கு நிச்சயமாக உள்ளது.

இது இப்படி இருக்க இது வரை பாரத் பயோடெக் கோவாசின் பற்றிய எந்த தொழிநுட்ப விபரத்தையும் இது வரை வெளியிடவில்லை. இது வரை நமக்குக் கிடைத்துள்ள தரவுகளின் படி இந்த கோவாக்சின் என்பது அநேகமாக கரோவாக்ஸின் மறு வடிவமாக இருக்கவே வாய்ப்பு இருககிறது. ஒரு வேளை இந்த தடுப்பூசி முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பாகவே இருந்தாலும் மனிதர்களை விடுங்கள்.. விலங்குகளின் மீது பரிசோதிப்பதற்கான கால அவகாசம் நிச்சயம் சாத்தியமாகவே இல்லை..

தி வயரில் வந்த கட்டுரையின் தமிழாக்கம் செய்தவர் நந்தன் ஸ்ரீதரன்