June 7, 2023

முகமூடிக்குக் கூடத் தடை!- ஹாங்காங்கில் வலுக்கும் போராட்டம்!

ஹாங்காங்கில் போராட்டக்காரர்கள் முகமூடி அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையால் அங்கு போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சனிக்கிழமை காலை ஆயிரக்கணக்கானோர் அனுமதி பெறாமல் சாலையில் பேரணியாக சென்றனர். அதன் காரணமாக இன்று ஹாங்காங்கில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. வன்முறையில் பொதுசொத்துக்கள் நாசமானதிற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்தாலும் போராட்டக்காரர்களுக்கு தொடர்ந்து ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.

அக்டோபர் 1ம் தேதி சீனாவில் தேசிய தினம் கொண்டாடப்பட்ட போது ஹாங்காங்கில் கலவரம் வெடித்தது. போராட்டத்தின் போது தன்னை தாக்க வந்த முகமூடி அணிந்திருந்த போராட்டக்காரரை போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். பல வாரங்களாக நடக்கும் ஹாங்காங் போராட்டத்தில் நடந்த முதல் துப்பாக்கி சூடு இது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த போராட்டக்காரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சுடப்பட்ட அந்த நபர் 14 வயதே நிரம்பிய பதின்வயது சிறுவன் என தெரியவந்தது. அதை தொடர்ந்து ஹாங்காங் காவல்துறை மீது சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.

பிரச்சனை தீவிரமடைந்ததால் ஹாங்காங் தலைவர் காரி லாம் கடந்த 52 ஆண்டுகளாக பயன் படுத்தப்படாத அவசரநிலை ஒழுங்குமுறை சட்டத்தை பயன்படுத்தி நேற்று போராட்டக்காரர்கள் முகமுடி அணிய தடை விதித்தார். இந்த அவசரகால ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் ஹாங்காங் நிர்வாக தலைவருக்கு எந்த சட்டத்தையும் இயற்றி அமல்படுத்தும் அதிகாரம் வழங்கப்படுகிறது.

அதேசமயம் ஹாங்காங்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தவில்லை என்றும் காரி லாம் அறிவித்தார். ஆனால் முகமூடி அணிவதற்கான தடை குறித்து காரி லாமின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே இதற்கு போராட்டக்காரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதிய சட்டத்தை எதிர்த்து நேற்று இரவு பல இடங்களில் போராட்டக்காரர்கள் சிலர் வன்முறையில் ஈடுபட்டனர். பல ரயில் நிலையங்களை சேதப்படுத்தினர். சீனாவுடன் தொடர்புடைய கடைகளை சூறையாடி தீ வைத்து கொளுத்தினர். சாலைகளில் தடைகளை எழுப்பி மறியல் போராட்டம் நடத்தினர். அதை தொடர்ந்து இன்று ஆயிரக்கணக்கான மக்கள் முகமூடி தடையை மீறி முகமூடி அணிந்தபடி நகரத்தில் பேரணியாக சென்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு நடந்த கலவரத்துக்கு ஹாங்காங் தலைவர் காரி லாம் வீடியோ செய்தி மூலம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கின் சொத்துக்களை அழிப்பதற்கு கலவரக்கரார்களை அனுமதிக்க முடியது என காரி லாம் தெரிவித்துள்ளார் .