லாக் படத்தின் இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

லாக் படத்தின் இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ்,அல் முராட் ,சக்தி வேல் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘லாக்’. இப்படத்தை எழுதி ரத்தன் லிங்கா இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே சில குறும்படங்களை இயக்கியவர், ‘அட்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் வடசென்னை வாழ்வியலைப்பதிவு செய்தவர் என்ற முத்திரை பதித்தவர். ‘லாக்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இயக்குநர்கள் கே. பாக்யராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தை இயக்கியிருக்கும் ரத்தன் லிங்கா பேசும்போது, “இந்தப் படம் பல போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு எங்களது பக்க பலமாக இருந்த சக்திவேல் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் மற்றும் படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் இருவரும் திடீரென காலமானது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர்களுடைய கனவெல்லாம் இந்தப் படத்தின் மீதுதான் இருந்தது .அந்த இருவருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதத்தால் இந்தப் படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அவர்களது விருப்பம் இதுவாகத்தான் இருக்கும்.எங்களுடன் இணைந்து ராஜ்குமார் வேலுச்சாமி அவர்கள் பெரும் பக்கபலமாக இருந்து உதவினார்.

அதுமட்டுமல்லாமல் எங்களது சிரமங்களையெல்லாம் பார்த்துக் கொண்டு இது மாதிரி புதியதாக வருபவர்கள் சிரமப்படக்கூடாது அவர்களுக்கு நாம் ஒரு தளம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.அதன்படி அண்மையில் நாங்கள் ஒரு ஸ்டுடியோ தொடங்கியிருக்கிறோம். அது தான் பாம்பூ ட்ரீஸ் ஸ்டுடியோ .அது முழுக்க முழுக்க வளரும் கலைஞர்களை உயர்த்தி விடுவதற்காகவும், அவர்களுக்கு ஏற்ற தொழில்நுட்பக் கருவி வசதிகள் செய்து கொடுப்பதற்காகவும் என்ற நோக்கத்தில் தொடங்கி இருக்கிறோம்” என்றார்.

படத்தயாரிப்பில் இணைந்துள்ள அல்முரா நிறுவனத்தின் தலைவர் ராஜ்குமார் வேலுச்சாமி பேசும்போது, “நான் ஈராக், துபாய் என்று பரபரப்பாக வியாபாரம் செய்து கொண்டிருக்கிறேன். நான் முதலில் ‘அட்டு’ படத்தைப் பார்த்த போது அது எனக்கு மிகவும் பிடித்தது. யார் இந்தப் படத்தை இயக்கியவர் என்று விவரங்களைத் தேடிய போது ரத்தன்லிங்கா அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு ஒரு படம் கூட செய்யவில்லை என்று அறிந்தேன். பிறகு பேசி நண்பர்கள் ஆனோம். திறமை இருந்தாலும் அங்கீகாரம் இல்லாமல் பலரும் சினிமாவில் சிரமப்படுகிறார்கள் என்று அவரை வைத்து நான் அறிந்து கொண்டேன். இப்படி வருங்காலத்தில் இளைஞர்கள் திறமையோடு சிரமப்படக்கூடாது என்று ஸ்டுடியோ ஒன்று நாங்கள் ஆரம்பித்துள்ளோம் . புதிய திறமைசாலிகளுக்கு வாய்ப்புகள் அளிக்கும் தளமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் இதைத் தொடங்கி உள்ளோம். இவர் அட்டு படத்திற்குப் பிறகு இந்த இரண்டாவது படம் எடுப்பதற்குள் இடையில் ஐந்தாண்டுகள் ஓடி விட்டன. இனி ஆண்டிற்கு ஐந்து படங்கள் இவர் இயக்கும் அளவிற்கு அந்த வசதிகள் இவருக்குப் பக்கபலமாக இருக்கும். பல படங்கள் இந்த ஸ்டுடியோவில் பணியாற்றி வெளிவர வேண்டும் என்று விரும்புகிறோம். எங்கள் ஸ்டுடியோவின் நோக்கமே வளரும் இயக்குநர்கள் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான். அதன்படி ஒரு புது படத்தையும் தொடங்கி இருக்கிறோம். அட்டு படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய பிரதாப் அந்த படத்தின் இயக்குநராக அறிமுகம் ஆகிறார் .இந்த லாக் படத்தில் போலீஸ் காவல்துறையில் பணியாற்றும் இளங்கோவனின் மகன் அர்ஜுன் நடிகராக அறிமுகம் ஆகிறார். எங்களது பயணம் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் விக்ரம் செல்வா பேசும் போது, “கோவிட் காலத்திற்கு முன்பு தொடங்கப்பட்ட இந்தப் படத்திற்கு, கோவிட்டால் சற்று தேக்க நிலை ஏற்பட்டது .அப்போது இந்தப் படத்திற்காகப் பணியாற்றும் போது இரவு பகலாக இயக்குநர் பணியாற்றுவார். பின்னணி இசை சேர்ப்புக்கு ஐந்து மணிக்கு வருவீர்களா என்று கேட்டேன். அவர் மாலை 5 மணியா? என்றார். அதிகாலை ஐந்து மணி என்றேன். ஆனால் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தி தூங்காமல் அப்படியே காலை 5 மணிக்கு வந்து விடுவார். இவருடைய திரைப்படத்தின் உருவாக்கம் அசல் தன்மையோடு இருக்கும், அதுதான் இவரது பாணியாக இருக்கிறது. இந்தப் படத்தில் கடைசியில் 10 -15 நிமிடங்கள் எந்தவித வசனமும் இல்லாமல் காட்சிகள் நகரும். அந்த அளவிற்கு காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பவர் இயக்குநர் ரத்தன் லிங்கா” என்றார்.

கதாநாயகி மது ஸ்ரீ பேசும்போது, “நான் இவர் ஒரு குறும்படம் எடுத்த போது அதில் நான் ஒரு சின்ன பெண்ணாகத் தாவணியுடன் தோன்றியிருப்பேன். மதுபானக்கடையில் நடித்த பிறகு 10 ஆண்டுகளுக்குள் எனது எடை கூடி நான் குண்டாக இருந்தேன்.அட்டு படத்தில் நடிப்பதை நான் தவற விட்டு விட்டேன். அப்போது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். இன்று கூட அதை நினைத்து வருத்தப்படுகிறேன். அதனால்தான் அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. இரண்டாவது படத்தையும் தவற விட்டுவிடக்கூடாது என்பதற்காக இதில் நடித்து இந்தப் படம் வெளிவந்து பார்த்த பிறகு தான் அந்த படத்தைப் பார்ப்பதாக நான் இருக்கிறேன்.என்னைப் பார்த்து விட்டு எடை குறைத்து வருமாறு சொன்னார் .ஒரு மாதம் நான் அவகாசம் கேட்டேன். ஏனென்றால் இது ஒரு ஸ்போர்ட்ஸ் சம்பந்தப்பட்ட படம் ,ஆனால் இயக்குநர் என்னைப் பார்த்து எதுவும் சொல்லாமல் வேறு ஒருவரைத் தேடாமல் கால அவகாசம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். 30 நாட்களில் நான் குறைக்க முடியும் என்று நம்பினேன். அதன்படி எடை குறைந்து அவர்கள் முன் போய் நின்றேன் .என்னைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். இதில் எனது முயற்சியை விட அவர்கள் கொடுத்த நம்பிக்கை பெரிது. நம்பிக்கையால் எதையும் செய்ய முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். எனக்கு மட்டுமல்ல நடித்திருக்கும் அனைவருக்கும் பளிச்சிடக் கூடிய நடிப்பு வாய்ப்புகளை இயக்குநர் வழங்கி உள்ளார் “என்றார்.

காவல்துறை துணை ஆணையாளர் சுரேந்திரநாத் பேசும்போது, ” காவல்துறைக்கும் கலைத்துறைக்கும் ஓர் இணக்கம் உள்ளது. இரண்டு துறையும் இங்கே இணைந்து இந்த விழாவை நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது காக்கிக்குள்ளும் கலை உள்ளம் கொண்டவர் இளங்கோவன். அவர் பன்முகத் திறமை கொண்டவர். அவரது மகன் இந்தப் படத்தில் நடித்திருப்பது புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்று சொல்ல வைக்கிறது. காவல்துறை போல் கலைத்துறையும் பல கஷ்டங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்” என்றார்

காவல்துறை ஆய்வாளர் இளங்கோவன் பேசும்போது, ” நான் இங்கே பாக்யராஜ் அவர்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது ‘டார்லிங் டார்லிங் டார்லிங் ‘ படத்தை 40 தடவை பார்த்தவுடன் அப்போது அவர்களுக்கு ரசிகர் மன்றம் அமைக்க வேண்டும் என்று நான் மும்முரமாக இருந்தேன். என் மகனும் அப்படிப்பட்ட திரைத்துறையில் நுழைகிறான் என்று எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.இயக்குநர் ரத்தன் லிங்கா என் சகோதரர் போன்றவர். அவர் படத்தில் ஒரு நடிகனாக அறிமுகமாகும் என் மகனையும் வாழ்த்துங்கள் “என்றார்.

நடிகர் சுதீர் பேசும்போது, ” அட்டு மூலம் இயக்குநர் ரத்தன்லிங்கா மிகவும் புகழ் பெற்று விட்டார் .படப்பிடிப்பு நடந்தபோது அதை நான் பார்த்து, புரிந்து கொண்டேன். எப்போதும் அவரைச் சுற்றி ஏராளமான ரசிகர்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இவருக்கு உள்ள திறமைக்கு இவர் ராம்கோபால் வர்மா போல் வருவார் “என்றார்.

கதாநாயகியின் அப்பாவாக நடித்த சீனிவாசன் பேசும்போது, ” ஒரு விளம்பரப் படம் மூலம் தான் இயக்குநர் எனக்குப் பழக்கமானார். சின்ன சின்ன ரோல்களில் நான் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் எனக்குப் பெரிய ரோல் கொடுத்துள்ளார். நீங்கள் தான் கதாநாயகியின் அப்பா என்ற போது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் என்னிடம் சரியாக வேலை வாங்கி உள்ளார். அவர் கதையை காட்சிகளை விவரிக்கும் போதே நமக்கு அந்த மனநிலை வந்துவிடும். மற்றபடி நடிப்பு தானாக வந்துவிடும். அப்படிப்பட்ட திறமைசாலி தான் இந்த இயக்குநர் “என்றார் .

வி எப் எக்ஸ் மகேந்திரன் பேசும்போது, “அ ட்டு படத்தில் சிஜி நான் செய்தேன். இதில் சிஜி, டிஐ, போஸ்டர் டிசைன் எல்லாமும் நான்செய்துள்ளேன்” என்றார்.

சண்டை இயக்குநர் நாதன் லீ பேசும்போது, “நாளைய இயக்குநர்கள் காலம் முதல் எனக்கு இவருடன் தொடர்பு உண்டு. வித்தியாசமான அணுகுமுறை கொண்டவர். இந்தப் படத்தில் புதுவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றார் .அப்படியே செய்துள்ளோம் .அது மட்டுமல்ல சண்டைக் காட்சிகள் சரியாக வருவதற்கு எனக்கு உரிய சுதந்திரத்தைக் கொடுத்தார். அதன்படி கிழக்கு கடற்கரை சாலையில் சவுக்குத் தோப்பில் சண்டை காட்சிகளை எடுத்தோம்.” என்றார்.

இந்திய பொதுவுடைமைக் கட்சித் தலைவர் முத்தரசன் பேசும்போது, “இந்த விழாவில் காவல்துறையினர், நீதி அரசர்கள் ,படத் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என்று பலரும் பங்கெடுத்துள்ளனர். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் ரத்தன் லிங்கா சாதாரணமாக வந்துவிடவில்லை. குறும்படங்கள் எடுத்துள்ளார். திரைப்படம் இயக்கியுள்ளார். திரைப்படம் தயாரித்துள்ளார். இப்போது ஸ்டுடியோ தொடங்கி உள்ளார். இப்படிப் படிப்படியாக முயற்சிகள் மூலம் வளர்ந்து அவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். திரைப்படம் என்பது மக்களிடம் சரியான புரிதலை ஏற்படுத்துவது மட்டுமல்ல விழிப்புணர்வும் ஏற்படுத்தக் கூடியது. விடுதலைப் போராட்ட காலத்திலும் சரி விடுதலைக்குப் பின்பும் சரி மாற்றங்களை மக்களிடம் ஏற்படுத்தியதில் அதன் பங்கு உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன் வந்த பிறகுதான் அந்த வரலாறே நம் மக்களுக்குத் தெரிந்தது.காவல் துறை பற்றி திரைப்படங்களில் இரண்டு விதமாகக் காட்டுவார்கள்.அவர்களை மிகவும் கொடூரமானவர்களாகக் காட்டுவார்கள் அதே நேரம் நல்லவர்கள் சிலரையும் காட்டுவார்கள்.

இங்கு வந்திருக்கும் பாக்யராஜ் அவர்களுக்கு நானும் ரசிகன் தான். ஒரு முறை எங்கள் வீட்டில் இரவு மனைவி சாப்பாடு பரிமாறினார். அப்போது அருகில் இருந்த கொழுந்தியாள் எனக்கு மனைவி முருங்கைக்காய் துண்டுகளைப் போட்ட போது “போடு போடு நல்லா போடு” என்று கூறினார். எனக்கு அப்போது புரியவில்லை. பிறகு ‘முந்தானை முடிச்சு ‘படம் பார்த்த பிறகுதான் அன்று நிறைய போடு என்று சொன்னதன் அர்த்தம் புரிந்தது .முருங்கைக்காய்க்குள் ரகசியம் அப்படி இருக்கிறது என்று எனக்கு அப்போது தெரியாது. இந்தப் பட முயற்சி வெற்றி பெறவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசும் போது , “இங்கே தயாரிப்பாளர் ராஜ்குமார் வேலுச்சாமி ஈராக், துபாய் என்று பரபரப்பாக ஓடிக் கொண்டு இருக்கிறார். அங்கேயும் தனியாக இருப்பதாகச் சொல்கிறார். தனியாக என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று நான் கேட்டேன். படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்கா பேசும் போது பல்வேறு சிரமங்கள் இடைஞ்சல்களைக் சந்தித்துதான் இந்தப் படம் உருவானது என்றார். நல்லது நடக்கும் போது இது மாதிரி இடையூறுகள் வந்து கொண்டுதான் இருக்கும். அதையும் தாண்டித் தான் வர வேண்டும். எவ்வளவு முயன்றாலும் வரவேண்டிய இடையூறுகள் வந்தே தீரும்.

இத்தனைக் காலம் கடந்தும் எனது முருங்கைக்காய் கதையை எங்கு பார்த்தாலும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன பெரிய ரகசியம்? என்று கேட்டால் . எந்த ஒரு விசேஷ காரணமுமில்லை. எனது பாட்டி எங்களுக்கு உணவு பரிமாறும் போது எனக்கு முருங்கக்காய் துண்டுகளை குறைவாகத்தான் போடுவார். உடன் சாப்பிடும் மாமாவுக்கு நிறைய போடுவார். இன்னும் ரெண்டு பீஸ் போடச் சொல்லி நான் கேட்பேன். இது உனக்குப் போதும். இரண்டுக்குமேல் வேண்டாம் இது போதும் என்பார் பாட்டி. எப்போதும் வேண்டாம் என்பதில் தான் மனம் சுற்றிச் சுற்றி வரும். எங்கள் ஊரில் ஒரு பெரியவர் சின்னப் பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருப்பார். அவரிடம் இந்தச் சந்தேகத்தைக் கேட்டபோதுதான் அதன் அர்த்தம் புரிந்தது. அதுவரை விளையாட்டாகத் தான் என் படத்தில் வைத்தேன். அப்போது அதைப்பற்றி பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் இவ்வளவு காலம் கடந்தும் முருங்கைக்காய் கதை பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது அது ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சி தருகிறது .

படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மதுஸ்ரீ இங்கே எடைக் குறைப்பு பற்றிப் பேசினார் .இப்படி சிரமப்பட்டு வெற்றி பெறுவதில்தான் மகிழ்ச்சி இருக்கிறது. நான் சின்ன வீடு படத்தில் கல்பனாவுக்கு தினசரி அல்வா கொடுத்தேன். ஏனென்றால் அவர் உடல் எடை கூட வேண்டும் என்பதற்காக. சிரமப்பட்டு உழைத்தால் தான் அதன் மதிப்பு நமக்குத் தெரியும். வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். நான் ‘தூறல் நின்னு போச்சு’ படத்தில் கம்பைச் சுற்றி பயிற்சி எடுத்துக் கொண்டேன். அப்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த கோபியில் 30 நாட்கள் பயிற்சி எடுத்துக் கொண்ட பிறகு தான் அப்படி நடித்தேன் .அப்போது நான் ஒரு கையால் சுற்றி விளையாடுவது போல் இருக்கும் .இரண்டு கையாலும் சுற்றிப் பிடிப்பது போல் பயிற்சி பெற வேண்டும் என்று அழகிரிசாமி மாஸ்டரிடம் கேட்டேன்.அது முடியாது கஷ்டம் என்றார். அதன் நுட்பத்தைச் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டேன்.அவருக்கு நம்பிக்கை இல்லை ஆனாலும் நான் கற்றுக் கொண்டதைப் படத்தில் வைத்தேன். மிகவும் சிரமப்பட்டு கற்றுக்கொண்டு படத்தில் சுற்றி இருப்பேன். படத்தை பார்த்து எம்ஜிஆர் எத்தனை வருடமாக இதற்குப் பயிற்சி எடுத்தாய் என்று கேட்டார். நான் விசயத்தை சொன்னபோது அவர் நம்பவே இல்லை .பொய் சொல்லாதே என்றார்.அப்போது நான் சொன்னேன் மனது வைத்தால் எதுவும் முடியும் என்றேன் .

இங்கே தொழில்நுட்பக் கலைஞர்கள் பேசியபோது மன நிறைவோடு பேசினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. இங்கே காவல்துறையைச் சேர்ந்த இளங்கோவன் தன் மகனை நடிக்க வைத்துள்ளார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் எங்கள் காலத்தில் நான் நாடகம் பார்க்கப் போகிறேன் என்றாலே வீட்டில் பெல்ட் அடி விழும். சத்யராஜ் மகன் சிபிராஜும் சரி என் மகன் சாந்தனுவும் சரி சினிமா கனவுடன் இருந்ததால் படிப்பில் பெரிதாக வர முடியவில்லை. அதனால் மாலை நேரக் கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். அவர்கள் மனதில் உள்ள கனவை நிறைவேற்றவே பெரிதும் விரும்பினார்கள். எனவே மனம் வைத்தால் எதுவும் நடக்கும். படக் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் “என்று கூறினார்.

‘லாக்’ படக் குழுவினர் சார்பில் இந்த விழாவில் கேக் வெட்டி இயக்குநர் பாக்யராஜுக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் நடிகர் விஜய் சூரிய பாலாஜி, மதன் ,படத்தொகுப்பாளர் மகேந்திரன் கணேசன், காவல்துறை உயர் அதிகாரியான ராஜகோபால், தொழிலதிபர்கள் ரஜினிகாந்த் சண்முகம் ,ரஞ்சித் கருணாகரன், ஜூலியஸ் கிறிஸ்டோபர்,உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரஜினிகாந்த் சண்முகம், சுண்டாட்டம் பட இயக்குநர் பிரம்மா மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

Related Posts

error: Content is protected !!