June 2, 2023

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில் அரசியல் – ஐகோர்ட் கிளை நீதிபதிகள் அப்செட்!

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது. கிரிக்கெட்டிலும் இந்நிலையே உள்ளது. அதிர்ஷ்டவசமாக தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகியுள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டுகள் சார்ந்து அறிந்த, ஆர்வமுடைய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஏனெனில் இது பல ஏழை விளையாட்டு வீரர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் கொண்டது என்று ஐகோர்ட் மதுரை கிளை வருத்தமுடன் தெரிவித்துள்ளது.

மதுரை புதூர் கண்ணேனந்தல் பகுதியைச் சேர்ந்த பரசுராமன் ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் 23 வருடங்களாக மாற்றுத் திறன் விளையாட்டு வீரர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறேன். அதன்மூலம் வெளிநாடுகளில் நடந்த பாரா ஒலிம்பிக் காமன்வெல்த் போட்டிகளில் கலந்து கொண்டு பல வீரர்களை வெற்றிபெற வைத்துள்ளேன். இதில் குருநாதன் என்ற விளையாட்டு வீரர் வெளிநாடுகளில் நடந்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான பல போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 26 பதக்கங்களை வென்றுள்ளார்.

மேலும் மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் குருநாதன் வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு நமது நாட்டிற்கு சிறப்பு செய்துள்ளார். மேலும் இந்திய அளவிலும் மலேசியா, லண்டன், துனீசியா, தாய்லாந்து, போன்ற நாடுகளிலும் நடை பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். சர்வதேசப் போட்டிகளிலும் தேசிய, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று நமது நாட்டிற்கு சிறப்பு செய்துள்ளார். இவர் தற்போது தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகளில் சாதனை படைத்த பல வீரர்கள் அரசுப் பணியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் அரசு நிரந்தர பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் “மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. ஆனால் அவற்றைப் பெறுவதற்கு அவர்கள் பதிவு செய்திருக்க வேண்டும்” என தெரிவித்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், “தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் என்ன செய்கிறது? என தெரியவில்லை. செயலற்ற நிலையில் இருப்பது போலவே தெரிகிறது. புதிய விளையாட்டு வீரர்களை உருவாக்கவில்லை எனினும் உருவாகும் விளையாட்டு வீரர் களுக்கான வாய்ப்பு குறித்த விவரங்களையாவது முழுமையாக தெரிவிக்க வேண்டும். ஆனால் அது போல தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்படுவதாகத் தெரியவில்லை. செயலற்ற நிலையிலேயே உள்ளது.

விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதிலும் அரசியலே உள்ளது. கிரிக்கெட்டிலும் இந் நிலையே உள்ளது. அதிர்ஷ்டவசமாக தற்போது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்வாகி உள்ளார். தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாட்டுகள் சார்ந்து அறிந்த, ஆர்வமுடைய அதிகாரிகளை நியமிக்க வேண்டும். ஏனெனில் இது பல ஏழை விளையாட்டு வீரர்களின் கனவுகளையும் எதிர்காலத்தையும் கொண்டது” என தெரிவித்து இதுகுறித்து தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.