சாலை பராமரிப்பில்லையா? சுங்க கட்டணம் பாதிதான்! – ஐகோர்ட் அதிரடி

சாலை பராமரிப்பில்லையா? சுங்க கட்டணம் பாதிதான்! –  ஐகோர்ட் அதிரடி

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டு, சுங்கசாவடி அமைத்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் செல்பவர்கள் இந்த சுங்கசாவடிகளில் கட்டணம் செலுத்தாமல் மோதலில் ஈடுபடுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. ஒரு நெடுஞ்சாலையில் பல நூறு கி.மீ., தூரத்திற்கு சாலை மேம்படுத்தப்பட்டால் அந்த சாலை முழுவதற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த சாலையில் குறைந்த தூரம் சென்றாலும் முழு கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், ‘ ஒரு சாலையை எந்த அளவுக்கு பயன்படுத்துகிறீர்களோ அதற்கு ஏற்றவாறு கட்டணம் செலுத்தினால் போதும் என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டு வர உள்ளது. சுங்கசாவடிகளில் வாகனத்தை நிறுத்துவதால் ஏற்படும் காலதாமதத்தை நீக்க, முன்கூட்டியே சுங்க சாவடி கட்டணத்தை செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது’ என்றார்.

இதனிடையே மதுரை – விருதுநகர் இடையிலான நெடுஞ்சாலை சரியாக பராமரிக்கப் படாததை தொடர்ந்து சுங்க கட்டணத்தை பாதியாக குறைக்குமாறு என்எச்ஏஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதிலும் உள்ள சுங்க வரிச் சாலைகள் அனைத்தும் சரிவர பராமரிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு என்எச்ஏஐ தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. சாலையை சரிவர பராமரிக்காவிட்டால் சுங்க கட்டணம் பாதியாக குறைக்கப்படும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை செயலாளர் யூத்விர் சிங் மாலிக் கூறும்போது, “நீதிமன்ற உத்தரவை நாங்கள் மதிக்கிறோம். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று என்எச்ஏஐ-யிடம் நான் கேட்டுக்கொண்டுள்ளேன். சாலைகள் ஒவ்வொரு ஆண்டும் பராமரிக்கப்படுவதை மதிப்பிடுவதற்கான திட்டம் வகுக்குமாறு பரிந்துரை செய்துள்ளேன். இது தொடர்பாக என்எச்ஏஐ நிர்வாக உத்தரவு பிறப்பித்துள்ளது” என்றார்.

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை என்எச்ஏஐ அதிகாரிகள் உறுதி செய்தனர். “சுங்கக் கட்டணம் குறைக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் சாலை பராமரிப்பை உறுதி செய்யுமாறு எங்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக என்எச்ஏஐ மேல்முறையீடு செய்யாதது மிகவும் அரிதான நிகழ்வு என கூறப்படுகிறது. “ஒப்பந்ததாரர் நலனை விட சாலையை பயன்படுத்துவோரி்ன் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

error: Content is protected !!