வெப்ப அலை தாக்கமும், மக்கள் தற்காத்துக் கொள்ளும் வழிமுறையும்!

வெப்ப அலை தாக்கமும், மக்கள் தற்காத்துக் கொள்ளும் வழிமுறையும்!

டந்த சில தினங்களாக 104, 105, 106 டிகிரி ஃபாரன்ஹீட் என வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருப்பதால் கூலித் தொழிலாளர்கள், விவசாயிகள் தங்களது பணிகளை மேற்கொள்வதில் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்ட வடமாநில கட்டுமான தொழிலாளி சச்சின் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இன்றைய உலக மக்கள் அனைவரையும் பாதிக்கும் தலையாய சிக்கல் காலநிலை மாற்றமே ஆகும். மனிதர்களால் வளிமண்டலத்தில் கலக்கவிடப்படும் கரியமிலவாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்கள் (Greenhouse Gases – GHGs) சூரிய வெப்பத்தை பிடித்துவைப்பதால், புவியின் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துசெல்கிறது. கடந்த 150 ஆண்டுகளில், பூமியின் சராசரி வெப்பநிலையில் 1.2 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரித்து 1.5 டிகிரி செல்சியஸ் அளவை  கடந்து கொண்டே போகிறது.

ஒவ்வொரு 0.1 டிகிரி செல்சியஸ் அதிகரிப்பும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை அதிகரிக்கக் கூடியதாகும். வழக்கத்தைவிட அதிகமாக தாக்கும் புயல், வெள்ளம், காட்டுத்தீ, பனிப்பாறைகள் உருகுதல், கடல்மட்டம் உயர்தல், அதிகரிக்கும் தொற்றுநோய்கள், உணவு உற்பத்தி பாதிப்பு, பொருளாதார பாதிப்புகள், வன்முறை போன்றவை காலநிலை மாற்றத்தின் கேடான விளைவுகள் ஆகும். இத்தகையக் கேடுகள் இனி வரும் ஆண்டுகளில் மென்மேலும் அதிகமாகிக் கொண்டே செல்லும். அவற்றில் ஒரு அங்கமாக அதிதீவிர வெப்பம் மற்றும் வெப்ப அலை இடர்கள் இனிவரும் ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

புவிவெப்பமடைவதால் அதிகம் பாதிக்கப்படும் ஒரு பகுதியாக தமிழ்நாடு உள்ளது. அதிலும் குறிப்பாக, வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படும் 23 இந்திய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு வகைப்படுத்தப் பட்டுள்ளது. புவிவெப்பம் தொடர்ந்து அதிகரித்துச் செல்கிறது. கடந்த 1,25,000 ஆண்டுகளில் இல்லாத மிக அதிக வெப்பமான ஆண்டாக 2023ஆம் ஆண்டு கணக்கிடப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மார்ச் மாதமாக 2024 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் மாதத்தில் புவிமேற்பரப்பு சராசரி வெப்பநிலை 14.14 டிகிரி செல்சியசாக இருந்தது. இது 1991 & 2020ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட மார்ச் மாத சராசரி வெப்பநிலையை விட 0.73 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இதற்கு முந்தைய மார்ச் மாத உச்ச வெப்பநிலை நிலவிய 2016ஆம் ஆண்டினை விட, 2024 மார்ச் மாத வெப்பநிலை 0.10 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஜூன் முதல் 2024 மார்ச் வரை, கடந்த பத்து மாதங்களாக, எல்லா மாதங்களுமே உலக வரலாற்றில் அதிக வெப்பமான மாதமாக இருந்துள்ளது. கடந்த 12 மாதங்களின் சராசரி வெப்பநிலை அதற்கு முந்தைய அனைத்து 12 மாதங்களின் வெப்பத்தை விட அதிகம். இது 1991 & 2020 ஆண்டு சராசரியை விட 0.70 டிகிரி செல்சியஸ் அதிகம். 1850 &1900 சராசரியை விட 1.58 டிகிரி செல்சியஸ் அதிகம்.

இப்படி காட்டுத்தனமாக வீசும் வெப்ப அலை தாக்கத்திலிருந்து மக்கள் தங்களை எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று பல்வேறு டாக்டர்களிடம் கேட்டு தொகுத்தளித்த ரிப்போர்ட் இதோ:

🔥அதிவெப்பம் என்பது ஒரு பொதுச் சுகாதார சிக்கல் ஆகும். மக்களையும் விலங்குகளையும் மெல்ல மெல்ல பாதிப்பதால் இதனை ‘சத்தமில்லா பேரிடர்’ (Silent disaster) என்றும் அழைப்பர். இதனால் பலவிதமான உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுகின்றன.

🔥சுற்றுப்புறத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது உடலின் வெப்பமும் அதிகமாகிறது. அதனை சமாளிக்க உடல் வியர்வையை வெளியேற்றுகிறது. ஆனாலும், மனித உடலால் ஓரளவுக்குத்தான் வெப்பத்தை குறைக்க முடியும். மிக அதிக வெப்பத்தால் வெப்பச் சொறி, வேனல் கட்டி, வெப்பப் பிடிப்பு, வெப்பத் தசைவலிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. தலைவலி, வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் வெப்பத் தளர்ச்சி (Heat Exhaustion) ஏற்படுகிறது. அதிக வெப்பத்தால் ஏற்படும் வெப்ப மயக்க நோய் (Heat Stroke) மிக ஆபத்தானதும் உயிரிழப்பை ஏற்படுத்துவதுமாகும்.

🔥தற்போது தமிழகத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் செல்வது தவிர்க்க வேண்டும் என்றும், குறிப்பாக குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், பெரியவர்கள், கர்ப்பிணி பெண்கள் வெளியே செல்வதை தவிர்ப்பது மிக முக்கியமானது.

🔥வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாடி துடிப்பு அதிகரித்தல், அடிக்கடி வியர்த்து கொட்டுவது, முகம் வெளுத்து போகுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். இப்படி இருந்தால் உடனடியாக அருகில் நிழலாக இருக்கக்கூடிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் தேரணி ராஜன் தெரிவித்தார்.

🔥வெப்பநிலையானது 104°F மேல் சென்றால், ஹீட் எக்ஸாஸ்ட் ஆகிவிடும். உடலுக்குள் சென்ற வெப்பமானது உடலில் பல்வேறு வகையான வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் கல்லீரல், இதயம் மூளை போன்ற உறுப்புகளை பாதிக்க வாய்ப்பு உள்ளது. நம் உடலில் உள்ள செல்கள் இறக்கும் பட்சத்தில் நாம் மயங்கி விழுந்து உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது.

🔥வெப்ப மயக்கத்தை தவிர்க்க வேண்டும் என்றால் அதிக வெயில் நேரத்தில் வெளியே ஊர் சுற்றக்கூடாது உடனடியாக நிழலாக இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.
ஐஸ் பேக்குகளை உடலில் கை அக்குள் போன்ற பகுதிகளில் வைத்து உடலின் உஷ்ணத்தை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

🔥இயற்கை பழ ரசங்கள், நீர் மோர் என நீர் ஆகாரங்களை உடனே பருக வேண்டும் .

🔥வெயில் காலங்களில் மொட்டை அடிப்பதை தவிர்க்க வேண்டும் ,

🔥சாலையில் சுகாதாரமற்ற நிலையில் இருக்கும் பழச்சாறு கடைகளில் பழச்சாறு பருவதை தவிர்க்க வேண்டும்.

🔥குழந்தைகளை மிக பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் . அவர்கள் வீட்டிற்கு வெளியே விளையாடுவதாக இருந்தால் பெற்றோர்கள் அல்லது பெரியவர்களின் மேற்பார்வையில் இருக்க வேண்டும் ,

🔥இது போன்ற வெப்ப நேரங்களில் தீ விபத்துக்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அதனை கண்காணிக்க வேண்டும் .

டாக்டர். செந்தில் வசந்த்

 

error: Content is protected !!