June 7, 2023

என்-95 மாஸ்க் அணிவதால் எந்த ஒரு பலனும் இல்லை! – மத்திய அரசு!

கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என்-95 முகக்கவசங்களால் பயனில்லை’’ என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. சுவாச வகை முகமூடிகளுக்கான வடிகட்டி (Filter) தரங்களில் (42CFR84) N95 ஒன்றாகும். 1995 ஆம் ஆண்டில், N95 முகமூடியை அமெரிக்க தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான தேசிய நிறுவனம் (NIOSH) பரிந்துரைத்துள்ளது. காசநோய், SARS மற்றும் காய்ச்சல் போன்ற கடுமையான தொற்று நோய்களுக்கு N95 மாஸ்க் பரிந்துரைக்கப்படுகிறது. “N” என்பது ““Not resistant to oil,” என்பதைக் குறிக்கிறது. N95 முகமூடிகளுக்கான தேவைகள் அறுவைசிகிச்சை முகமூடிகளை விட கடுமையானது. மற்றும் அவை அதிக வடிகட்டுதல் திறனையும் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 5 மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு பரவிக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகை அதிகம் கொண்ட நாட்டில் வைரஸை கட்டுப்படுத்துவது சிரமம் என்று தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் தெரியவந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளின் தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நடப்பது ஒன்றே வழி என்ற நிலையில் இருக்கிறோம். அதாவது கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, முகக் கவசங்கள் அணிவது, போதிய சரீர இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முகக் கவசங்களைப் பொறுத்தவரை பல்வேறு டிசைன்கள் மற்றும் வடிவங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில் என்-95 முகக்கவசங்கள் அதிக திறன் வாய்ந்தவை என்று பலரும் வாங்கி அணிந்து கொள்கின்றனர். இதன்மூலம் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் துளையிடப்பட்ட சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட என்-95 முகக்கவசங்களால் எந்தப் பயனும் இல்லை என்று அதிர்ச்சியூட்டும் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், அங்கீகரிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்களை தவிர்த்து ஏராளமான பொதுமக்கள் துளையிடப்பட்ட சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்ட என்-95 முகக்கவசங்கள் பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. இதன்மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியாது. எனவே துளையிடப்பட்ட சுவாசக் கருவிகள் பொருந்திய என்-95 முகக் கவசங்களை பயன்படுத்த வேண்டாம். மேலும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தின் மூலம் மக்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.