ஜிப்ஸி- விமர்சனம்

ஜிப்ஸி- விமர்சனம்

காதல் என்ற மூன்றெழுத்து மந்திரத்தைக் கொண்டு இது வரை வந்த சினிமாக்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.. அத்துடன் இந்த காதலில் மதம் குறுக்கிடுவதைக் கொண்டு வந்த படங்களின் எண்ணிக்கையும் அதிகம்தான்.. அதே சமயம் யாதொரு அடையாள ஆவணமும் இல்லாத நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்தவன் ஒருவனின் காதல் போராட்டம் என்ற பெயரில் மதத்தை, அரசியலை இணைத்து குழம்பி குழப்ப வந்திருக்கும் படம்தான் ‘ஜிப்ஸி’

கடந்த 2002-ம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் நிலையம் 57 பேர் தீயில் கருகி உயிரிழந்ததும் அதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும்  நீடித்த அந்த கலவரத்தில் பலர் கொல்லப் பட்ட சூழலில் ஒரு புகைப்படம் கோத்ரா கலவரத்தின் முழுமையான முகத்தை அப்பட்டமாகக் காட்டியது பலருக்கும் நினைவிருக்கும். அந்த போட்டோவில் இளைஞர் ஒருவர் கண்கள் முழுக்க கண்ணீருடன் கலவரக்காரர்களிடம் கைக் கூப்பி, அச்சத்துடன் நிற்க எதிரே கைகளில் இரும்புக் கம்பி, முகத்தில் கோபத்துடன் கர்ஜிக்கும் இன்னொரு இளைஞன். நடந்து முடிந்தஅக்கொடூரத்தைக் காட்டும் விதத்தில் இந்திய பத்திரிகைகள் பலவற்றின் தலையங்கத்தில் இந்தப் புகைப்படம்தான் இடம் பிடித்தன.

அந்த ஒற்றை போட்டோ வை கையில் எடுத்துக் கொண்டு அதில் கைக்கூப்பி கெஞ்சும் ஆளை பெண்(நாயகி)ணாக மாற்றி இடைச் செருகலாக ஒரு காதல் சடு குடு ஆடி இருக்கிறார் ராஜுமுருகன்.

ஆம்..  இயக்குநர் அந்த குஜராத் கலவரத்தை ஒட்டி சொல்ல நினைத்த நாடோடிக் காதல், நாட்டில் நிலவும் மத கலவரங் கள், குழப்பங்கள் மற்றும் அரசியல் எதையும் ஜிப்ஸி மூலம் ஆழமாக சொல்லல்லை. அடிப்படை விசயமான காதல் காட்சிகள் கூட மிகவும் சின்னப் பிள்ளைத்தனமாக திரைக்கதையாக்கப்பட்டு உள்ளன.  அதாவது தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்லும் அளவுக்கு ஒரு நாடோடியின் மேல் ஈர்ப்பு ஏற்படுவதாக காட்டப்படும் காட்சிகளில் சிறிதளவும் நம்பகத்தன்மை இல்லை. அதன் காரணமாக படத்தில் அடுத்தடுத்து வரும் ஒரு காட்சியும் ஒன்ற விடவில்லை.

டைட்டில் ரோலான ஜிப்ஸி என்ற பெயருடன் வரும் ஜீவா தன் பங்களிப்பை நிறைவாகவே கொடுத்திருக்கிறார். நாயகி நடாஷா காதலியாக பரிணமளிக்கும் போதெல்லாம் எல்லை மீறி கவர்கிறார். ஆனால் இவர் காதல் வசப்படும் சூழலும், ஓடலும் ஒட்டாத காட்சி அமைப்பில் பின்னப்பட்டிருப்பதால் சோபிக்காமல போய் விடுகிறார். அதாவது மதரஸா கட்டுப்பாட்டில் கலக்கமுற்றிருக்கும் நாயகி திடீரென கல்யாணம் நடக்கும் ஒரு நாடோடியுடன் குதிரை ஏறி போய் விடும் காட்சியமைப்பே நாடகத்தனமாக இருப்பதால் அடுத்தடுத்து வரும் காட்சிகள் ஒட்டவில்லை.

அதிலும் அண்மையில்தான் டெல்லியில் நடந்த கலவரங்களின் பல்வேறு காட்சிகள் சமூகவலைத் தளங்களில் ஏகப்பட்டவை வந்த சூழலில் இதில் காட்டப்படும் கலவரக் காட்சிகள் கூட மனதை ஊடுருவவில்லை. அத்துடன் பின் பாதியில் கலவரப் பாதிப்பால் பிரிந்த ஜோடியைச் சேர்க்க இயக்குநர் யோசித்திருக்கும் எல்லா வழிகளும் முட்டுச் சந்தில் போய் முடியும் பாதை போலவே போய் விடுகிறது. இடையிடையே வசனங்கள் அருமை என்று சொல்லலாம் என்றால் டாஸ்மாக்-கில் இதை விட வீரியமான வசனங்கள் இப்போதும் ஒலித்துக் கொண்டிருப்பதால் அதுவும் எடுபட வில்லை.

செல்வகுமாரின் ஒளிப்பதிவை நம்பி நிறைய ட்ராவல் செய்திருக்கிறார்கள். அவைகளில் இதை விட நல்லக் காட்சிகளும் எடுத்திருந்தாலும் நம் பார்வைக்கு வந்தவைகள் மோசமில்லை என்றே சொல்ல தோன்றிற்று. மியூசிக் சந்தோஷ் நாரயணன் ‘வெரி பேட்’

இந்த படம் ரிலீஸாவதற்கு முன் இயக்குநர் ராஜூ முருகன், “`ஜோக்கர்’ முடிஞ்ச பிறகு, இந்த தேசத்துல பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், இன்னிக்குச் சொல்லப்படுற ஆதார் கார்டுனு எந்த அடையாளமும் இல்லாத மனிதர்களைச் சம்பந்தப்படுத்தி இந்தியா முழுக்க ஒரு பயணம் போகணும்னு ஆசைப்பட்டுக் கிளம்பினோம். அப்ப கிடைச்ச நிறைய அனுபவத் தையும் இதுல சொல்லியிருக்கேன்” என்றெல்லாம் சொல்லி இருந்தார்.. ஆனால் இந்த அனுபவம் நம்மைப் போன்ற ரசிகனுக்கு ஏமாற்றத்தையே கொடுத்து இருக்கிறது!

மொத்தத்தில் இந்த ஜிப்ஸி – தமிழ் சினிமாவின் எண்ணிக்கையை அதிகரிக்க வந்தவன்= அவ்வளவே!

மார்க் 2.5 / 5

 

error: Content is protected !!