June 4, 2023

கிரீன் டீ அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குது! – லேட்டஸ்ட் ரிசல்ட்!

பலருக்கும் டெய்லி இரண்டு வேளை டீ, காபி குடிக்காமல் நாட்களே நகர்வதில்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள். சாப்பாடு கூட இல்லாமல் இருந்துவிடுவேன். ஆனால் நாள் ஒன்றுக்கு 5 டீயாவது உள்ளே விடுவேன் என்று பெருமையாக பேசி உடலை கெடுத் துக் கொள்வார்கள். தற்போது இஞ்சி டீ, மசாலா டீ, சுக்கு காபி என்று விதவிதமான மூலிகைகள் கலந்து டீ குடித்தாலும் கூட வருகின்ற ஆரோக்ய குறைபாடுகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதனால் அநேகம் பேர் க்ரீன் டீ பிரியர் களாகி விட்டார்கள்.சற்றே கசப்பு கலந்த இந்த டீயில் உடல் ஆரோக்யத்தைக் குறைக்காமல் கூட்டும் சக்தி இணைந்திருப்பதே காரணம்கிரீன் டீயை நாம் தினமும் குடித்து வந்தால் அது உடலில் பல வகையான நன்மைகளை கொடுக்கிறது. உடல் பருமன் அதிகம் இருப்பவர்கள் இந்த கிரீன் டீயை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும் என்று ஆய்வுகள் பல கூறும் நிலையில் கிரீன் டீ அருந்துவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சர்வதேச அளவில் பலரும் பருகும் ஆரோக்கிய பானங்களில் முதலிடத்தில் இருப்பது டீ தான். சிலர் தேநீரில் ஏலக்காய் மற்றும் இஞ்சி சேர்த்தால் இன்னும் ருசியாக இருக்கும். மேலும் சிலர் ப்ளாக் மற்றும் க்ரீன் டீ குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். தேநீர் குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் இருக்கிறதென்பதை நீங்கள் அறிவீர்களா?? தேநீர் குடிப்பதால் மூளை செயல்பாடுகள் சீராக இருப்பதுடன் நினைவாற்றலும் சிறப்பாக இருக்கிறது. தொடர்ச்சியாக தேநீர் குடிப்பவர் களுக்கு வயது முதிர்ச்சி காரணமாக ஏற்படும் ஞாபக குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. தேநீர் குடிப்பதால் உணர்ச்சிநிலை மேம்படுவதுடன் உடல் உபாதைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. அதிலும் சமீப காலமாக மக்களிடையே கிரீன் மற்றும் பிளாக் டீ ஆகியவையும் பிரபலமடைந்து வருகின்றன. உடல் எடையை குறைக்க பெரும்பாலான மக்கள் க்ரீன் டீ பயன்படுத்த தொடங்கி உள்ள சூழலில் ‘ஜர்னல் ஆஃப் மெடிக்கல் மைக்ரோபயாலஜி‘ எனும் இதழில், கிரீன் டீயில் நுண்ணுயிர் நோய்க் கிருமிகளால் ஏற்படும் நோய்த்தொற்றை நீக்கி நன்மை பயக்கும் பாக்டீரியா இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சூடோமோனாஸ் அரோகினோசா என்ற கிருமி சுவாசக் குழாய் மற்றும் ரத்த ஓட்டம் நோய்த் தொற்றுடன் தொடர்புடையது. இந்தக் கிருமியை அழிப்பதில் கிரீன் டீ முக்கியப் பங்கு வகிப்பதாக வும் அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடோமோனாஸ் அரோகினோசா கிருமித் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பது சவாலானதாகவே மருத்துவ உலகில் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிரீன் டீ இந்தக் கிருமியை அழிக்கவல்லது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“சூடோமோனாஸ் அரோகினோசா கிருமித் தொற்று மனித உடலுக்கு மிகவும் ஆபத்தானது என, உலக சுகாதார மையம் பட்டியலிட்டுள்ளது. இந்நிலையில், இயற்கையாகக் கிடைக்கும் ஆன்ட்டி பயாட்டிக் மூலம் இதனைச் சரிசெய்ய முடியும் என நாங்கள் நிரூபித்துள்ளோம்,” என இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவினர் தெரிவித்துள்ளனர். கிரீன் டீ அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனப் பரவலாக நம்பப்பட்டு வரும் நிலையில், அது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும், கிரீன் டீ நோய்த்தொற்று கிருமியை அழிப்பதிலும் முக்கியப் பங்காற்றுவது தெரியவந்துள்ளது.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்

கிரீன் டீ குடித்தால் அப்படி நல்லது இதுகு நல்லது என்ற ரேஞ்சில் பல விளம்பரங்கள், செய்திகள் படையெடுத்திருக்கின்றன. அவர்கள் சொல்லும் தரவுகளில் பெரும் வித்தியாசம் இருக்கிறது உண்மைதான் என்ற போதிலும் கிரீன் டீ உடல்நலத்திற்கு எந்த வகையிலும் ஆபத்தானது அல்ல என்பதே மருத்துவர்களின் ஆலோசனை. ரொம்ப சிம்பிள். கிரீன் டீ குடிக்க வேண்டுமென்றால் குடிக்கலாம். அது உங்களின் விருப்பம் மட்டுமே.