செய்தியைக் கேட்க / Listen to News
உலகெங்கிலும் உள்ள கேமிங் பிரியர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ VI திரைப்பட பாணியிலான தனது புதிய விரிவான பார்வையை வெளியிட்டுள்ளது. ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனம் நெட்ஃபிக்ஸ் தளத்துடன் இணைந்து வெளியிட்டுள்ள இந்த வீடியோ, கேமிங் உலகின் அடுத்தகட்ட பரிணாமத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. முந்தைய பாகங்களின் தொடர்ச்சியாக இல்லாமல், நவீன தொழில்நுட்பத்தின் உச்சத்தைத் தொடும் வகையில் இந்த புதிய பதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கிராபிக்ஸ் பிரம்மாண்டமும் உயிரோட்டமான சூழலும்
முந்தைய ஜிடிஏ பதிப்புகளைக் காட்டிலும் இதன் காட்சி அமைப்பு மற்றும் கிராபிக்ஸ் தரம் பல மடங்கு உயர்ந்துள்ளது. திறந்தவெளி உலகத்தை ஆராய்தல், அதிவேக வாகனப் பயணம், குற்றங்கள், துப்பாக்கிச் சண்டைகள் மற்றும் சினிமா பாணியிலான கதையோட்டம் ஆகியவை ஜிடிஏ-வின் அடையாளமாக இருந்துவந்துள்ளன. அதே அடிப்படை அம்சங்களை தக்கவைத்துக்கொண்டு, முந்தைய எந்தவொரு கேமிலும் இல்லாத அளவுக்கு மிகத் துல்லியமான சூழல்கள் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

வீடியோவில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் அனைத்தும் பிளேஸ்டேஷன் 5 கேமிங் கன்சோலில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டவை என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். கதாபாத்திரங்கள் உலவும் அறைகளின் அடர்த்தி, அதில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள், வெளிப்புறச் சூழலின் பின்னணி விவரங்கள் என ஒவ்வொன்றும் மிகவும் நுணுக்கமாக உருவாக்கப்பட்டுள்ளன. இது கேமர்களுக்கு ஒரு நிஜ உலகத்திற்குள் பயணிக்கும் உணர்வை வழங்கும்.
ஜேசன் – லூசியா இணை: இரட்டை கதாபாத்திரங்களின் அதிரடி
இந்த புதிய பதிப்பின் மிக முக்கியமான அம்சம் அதன் முதன்மை கதாபாத்திரங்களான ஜேசன் டுவால் மற்றும் லூசியா காமினோஸ் ஆகிய இருவரின் கூட்டுச் செயல்பாடாகும். விளையாடும் நபர் இருவரின் கட்டுப்பாட்டையும் தேவைக்கேற்ப மாற்றிக்கொள்ளும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு காட்சியில் லூசியா காரை அதிவேகமாக இயக்க, ஜேசன் டுவால் காரின் ஜன்னல் வழியே வெளியே வந்து தங்களைத் துரத்தும் காவல் துறை வாகனங்களை நோக்கித் துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. மற்றுமொரு காட்சியில், லூசியா காரை ஓட்ட, ஜேசனும் மற்றொரு நபரும் சேர்ந்து போலிஸாரை எதிர்கொள்ளும் வகையில் ஆட்டம் மாறுகிறது. இந்த இரட்டையரின் ஒருங்கிணைப்பு மற்றும் ஆக்ஷன் காட்சிகள் கேமிங் அனுபவத்தை மேலும் விறுவிறுப்பாக்குகின்றன.
தொழில்நுட்ப முன்னேற்றமும் கேமிங் எதிர்காலமும்
நெட்ஃபிக்ஸ் மற்றும் ராக்ஸ்டார் கேம்ஸ் இடையிலான இந்த கூட்டு முயற்சி, பொழுதுபோக்கு மற்றும் கேமிங் துறைகளின் எல்லையை இணைத்துள்ளது. கன்சோல் திறனை முழுமையாகப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த கேம், எதிர்கால கேமிங் துறைக்கு ஒரு புதிய அளவுகோலை நிர்ணயித்துள்ளது. கார் சேஸிங் முதல் கதாபாத்திரங்களின் தீவிரமான உரையாடல்கள் வரை அனைத்தும் மிக உயர்ந்த தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால், ஜிடிஏ VI உலகளவில் கேமிங் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்புக் குட்டி
