முதியோர்களுக்கு இன்னும் கொஞ்சம் சலுகைக் கொடுக்க முன்வரலாமே!

முதியோர்களுக்கு இன்னும் கொஞ்சம் சலுகைக் கொடுக்க முன்வரலாமே!

சோறு தேடி நிதம் தின்று…..என்றார். பாரதி.. நினைத்துப் பார்க்கிறேன்..இந்த வயதில் என்ன செய்கிறோம்..? வேறு என்ன செய்ய முடியும்..?தினம் ஒரு பிரச்சினை..தினம் ஒரு அல்லாட்டம். மனதிற்குள் அல்லது வெளியில்..ஏதாவதொரு அலைச்சல்.ஆதார் கார்டு, பேன் கார்டு, ரேஷன் கார்டு , எலக்ரிக்சிட்டி பில், வீட்டு வரி, குடிநீர் வரி, சுவரேஜ் கட்டணம்…மார்ச் ஆனால் வருமான வரி…..!

எதுவும் நினைவிருப்பதில்லை..கார்டுகளை எடுத்துப் பார்த்து எல்லாம் எழுதிவைத்த நோட்டுப் புத்தகம் எங்கு வைத்தோம் என்பது ஞாபகமிருப்பதில்லை. போதாக்குறைக்கு உடலிலும் மனதிலும் வலு இருந்தபோது உழைத்து சேர்த்து எஃப்டியில் போட்ட பணம் எப்போது மெச்சூர் ஆகிறது என்று பார்த்து, மீண்டும் ரின்யூ பண்ண வேண்டும்..

சேமித்த பணத்திற்கு வரும் வட்டியில் வாழ்கின்ற முதியவர்களின் பாடு மிகவும் திண்டாட்டம்தான்.வட்டி விகிதம் குறைந்து கொண்டே போவது ஒரு பக்கம்.. விலைவாசி ஏற்றம் மறுபக்கம்.இந்த வயதில் அத்யாவசியத் தேவைகள் தவிர வேறு என்ன இருக்கப் போகிறது அவர்களுக்கு..? எந்த வகையிலும் சம்பாதிக்கும் வழி இன்றி, வட்டி மூலம் வருகின்ற பணம் போதாத காரணத்தினால் அவதிப்படுகின்ற நிறைய முதியவர்களை நான் அறிவேன். இது மட்டுமின்றி மேற்கூறிய அனைத்துத் திண்டாட்டங்களும் அவர்களுக்கு உண்டு. உதவிக்கு யாரையாவது வைத்துக் கொள்வதுதானே என்றால் கண்கலங்குவார்கள். ‘ அதற்கு சக்தி இருந்தால் ஏன் இப்படி திண்டாடப் போகிறோம்..?” என்ற கேள்வி தொனிக்கும்.

இது போன்ற வயது முதிந்தவர்கள் தனியாக இருக்கும் வீட்டில் மனைவிக்கு உடம்பு சரியில்லை என்றால் சாப்பாட்டிற்கு அவர்கள் திண்டாடுகிற திண்டாட்டம் சொல்ல முடியாதது.. மருத்துவ மனை போக வர என்கிற அலைச்சல் வேறு..

இந்த தேர்தல் நேரத்தில் எந்தக் கட்சியின் மனதிலும் ஏன் இந்த முதியவர்கள் இல்லாமல் போனார்கள்…,அவர்களுக்கும்தானே ஓட்டுரிமை இருக்கிறது. நியாயமான பிரச்சினைகள் இருக்கின்றன. அவைகள் ஏன் யார் கண்ணிலும் படவில்லை…? விதவைகளுக்கு உதவுகிற அரசாங்கம் 70-75 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் உதவ முன்வரலாமே..குறைந்த பட்சம் ரயில் பஸ் கட்டணங்கள், மருத்துவம், வட்டி விகிதம் இவற்றிலாவது சலுகை தரலாம் அல்லவா…?

இந்துமதி

error: Content is protected !!