தேனி நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி.. ! – முழு விபரம்!

தேனி நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி.. ! – முழு விபரம்!

தமிழகத்தில் எத்தனை பேர் கூடி எதிர்ப்பு தெரிவித்தாலும் மத்திய அரசோ அல்லது பாஜக-வோ தான் நினைப்பதை தமிழ்நாட்டினுள் அரங்கேற்றுவது வாடிக்கையாகி விட்டது. அது நவோதயா பள்ளி மற்றும் நீட் தேர்வு ஆகட்டும் அல்லது ராம ராஜ்ய ரத யாத்திரை யாகட்டும் அல்லது அனு உலைத் திட்டம் ஆகட்டும் நம்மாட்களின் எதிர்ப்பு சட்டை செய்யப்படுவதே இல்லை. அந்த வகையில் தற்போது தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வு திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைக்கம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழக மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இந்திட்டத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளதும் (வழக்கம் போல்)( அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது நம் தேனியில் நியூட்ரினோ ஆய்வகத் திட்டம் கொண்டு வர சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இத்திட்டத்திற்காக மலையைக் குடைந்தால் அப்பகுதியில் உள்ள 12 அணைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என்றும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால் அணுவின் அடிப்படைத் துகளான புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் போல ஓர் அடிப்படைத் துகள் நியூட்ரினோ ஆகும். பல கோடி கோடி நியூட்ரினோக்கள் நொடிக்கு நொடி நம்மை சுற்றிப் பாய்ந்து ஊடுருவிச் சென்று கொண்டே உள்ளன. இவை எந்தப் பொருளையும் ஊடுருவிச் செல்லக்கூடியவை. விண்ணிலிருந்தும் காலுக்கு அடியில் பூமியிலிருந்தும் வெளிப்படும் நியூட்ரினோ துகள்கள் கோடி கோடியாக எந்நேரமும் நம்மைச் சுற்றிப் பாய்ந்து கொண்டே உள்ளன. ஆனாலும் இந்தத் துகளை இனம் காண்பது எளிதல்ல. இப்படி ஓர் அடிப்படைத்துகள் இருக்கிறது என்ற யூகம் தர்க்க ரீதியாக 1930களில் வெளிப்படுத்தப் பட்டாலும் தற்காலத்தில்தான் இந்தத் துகள் குறித்து நுணுக்கமாக ஆராய கருவிகள் படைக்க முடிந்துள்ளது.

இந்த நியூட்ரினோவை தனியாக ஆய்வு செய்ய வேண்டுமானால், அதனுடன் வேறு எந்த துகளும் உணர்விக் கருவியில் படக்கூடாது. சூரியன் மற்றும் அண்டவெளியிலிருந்து வரும் நியூட்ரினோக்கள் தனியாக வருவதில்லை. காஸ்மிக் கதிர் போன்ற பல்வேறு துகள்கள் இணைந்து கலந்துதான் வருகின்றன. மலையைக் குடைந்து அதில் நியூட்ரினோவை உணரும் ஆய்வுக் கருவியை வைக்கும் போது, அந்த ஆய்வுக்கருவியில் நியூட்ரினோ மட்டும் வந்து விழும். மற்ற பொருட்களை எல்லாம் மலை வடிகட்டி விடும். காஸ்மிக் கதிர்களின் பாதிப்பு இல்லாமல் நியூட்ரினோ துகள்களை மட்டும் ஆய்வு செய்ய வேண்டுமானால், எல்லா திசைகளிலிருந்தும் குறைந்தது 1,000 மீட்டர் கற்களால் சூழப்பட்ட நிலையில், மலையின் உள்ளே அமைந்த குகைக்குள் மட்டுமே ஆய்வு நடத்த முடியும்.

அதன்படி நியூட்ரினோவை மட்டும் ஆய்வு செய்வதற்கு வேறு துகள்களை வடிகட்ட காலத்தால் மிகப்பழைய மலையாக இருக்க வேண்டும். இமயமலை உயரமானதுதான். ஆனால் கடினமானது அல்ல. பழைய மலைகள்தான் கடினமாக இருக்கும். இமயமலைப் பகுதி பெரும்பாலும் படிமப் பாறைகளால் ஆனது. சிறு சிறு பாறைகளால் ஆன தொகுப்பாக அந்த மலைப் பகுதி உள்ளதால், அங்குள்ள பாறைகளில் உறுதித்தன்மை மிகவும் குறைவு. மற்ற மாநிலங்களிலும் பாறைகளின் தன்மை இந்த ஆய்வுக்கு ஏற்றதாக இல்லை. ஆனால், தேனி மாவட்டத்தின் மேற்கு போடி மலையிலுள்ள பாறைகள் மிகவும் கடினமான சார்னோக்கைட் பாறைகளால் ஆனவை. அதுமட்டுமல்ல காடுகள் அடர்ந்த பகுதி என்றால் மரங்களை வெட்ட வேண்டிவரும். விவசாய நிலம் இருக்கும் பகுதி என்றால் விவசாய நிலத்தை கையகப்படுத்த வேண்டி வரும். அவ்வாறு விவசாய நிலமற்ற, மரங்கள் அடர்ந்து இல்லாத இடமாக தேடித் தேடித் தான் இந்த மலை இறுதிசெய்யப்பட்டது. நேரடியாக இந்தக் கருவியால் மனிதன், விலங்கு, பறவை எதற்கும் பாதிப்பு இல்லை. விவசாயம் போன்ற பயன்பாட்டில் உள்ள நிலத்தை கையகப்படுத்தக் கூடாது, மரங்கள் செறிவாக உள்ள பகுதிகள் தவிர்க்கப்படவேண்டும் என கவனத்தில் கொள்ளப்பட்டது. எனவே இறுதியில் தேனி மாவட்டத்தில் பயனற்ற தரிசுப் பகுதியாக உள்ள குறிப்பிட்ட மலைப் பகுதிதான் பொருத்தமானது எனத் தேர்வு செய்யப்பட்டது என்றெல்லாம் மத்திய அரசு விளக்கம் சொல்லியது. அத்துடன் பெரும் பொருள் செலவிலான இந்த ஆய்வின் மூலம் “பிரபஞ்சம் உருவான விதம், அதன் வயது போன்ற நுணுக்கமான கேள்விகளுக்கு துல்லியமான விடை கிடைக்கும். நிலநடுக்கம், சுனாமி அபாயங்களை முன்னரே தெரிந்துகொள்ளலாம். நம் நாட்டின் மாணவர்கள் ஆராய்ச்சிப் படிப்பில் முன்னேறலாம். உலக நாடுகளின் மத்தியில் இந்தியாவின் மதிப்பு உயரும். உலக வரைபடத்தில் பொட்டிப்புரம் கிராமம் முக்கிய இடம் பெறும்’’ என்று நியூட்ரினோ ஆய்வுத்திட்ட விஞ்ஞானிகள் விளக்கக் கூட்டத்தில் கூறுகிறார்கள்.

அதே சமயம் அந்த குறிப்பிட்ட தேனி வாழ் மக்கள்,“பிராபரான பர்மிஷன் இல்லாமலே வந்து இந்த அடிவாரக் காடுகளை வேலி போட்டு அடைத்து விட்டார்கள். அதனால் ஆடு, மாடு மேய்ச்சல் பறிபோய்விட்டது. காட்டுக்குள் போனால் வனத்துறை அதிகாரிகள் விரட்டுவார்கள், ஆடு மாடு வளர்க்கவே முடியாது. நாளைக்கு வெடிவைத்து மலையைத் தோண்டினால் நிலத்தடி நீரோட்டம் மாறிவிடும். பாறை தூசிகளால் பயிர்களும் நாசமாகிவிடும். கிராம மக்களின் சுகாதார வாழ்வு சீர்கேடாகி விடும். பிழைப்புக்கு வழியில்லாத ஊரில் எப்படி குடியிருக்க முடியும்?” என்று புலம்புகிறார்கள்

சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, “மூன்று வருடம், நடக்கும் சுரங்கக் கட்டுமான வேலைகளால் இப்பகுதியின் பல்லுயிர்வளம் சிதைந்து போகும். 5000 டன் வெடிமருந்துகளை பயன்படுத்துவதால் பாறை அடுக்குகளில் அதிர்வு ஏற்பட்டு 15 கி.மி சுற்றளவிலுள்ள (இடுக்கி, பெரியாறு, வைகை அணை உட்பட) பல அணைகள் சேதமடையும். மேலும், எதிர்காலத்தில் இம்மலைக்குகையை அணுக்கழிவுகளை பாதுகாக்கும் இடமாக மத்திய அரசு பயன்படுத்தும் அபாயமும் உள்ளது.” என்று பீதியை கிளப்பும் விதத்தில் பல தகவல்களை சொல்லி வந்தார்கள்.

கூடவே இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்யக்கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடந்திருந்தார். முன்னதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்காததால் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கின் பேரில், நியுட்ரினோ திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில்தான் இந்த திட்டத்தால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. எனவே திட்டம் தொடங்க அனுமதிக்கலாம் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பரிந்துரை செய்தது. அதே நேரத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக வனத்துறை ஆகியவற்றின் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் இதற்கு எதிர்ப்பு எதுவும் இருந்தால் உடனடியாக அது குறித்து புகார் அளிக்கலாம் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!