ஜி.ஹெச். டாக்டர்கள் ஸ்டரைக் : அவுட் பேஷண்ட் அப்செட்!

ஜி.ஹெச் எனப்படும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற இனியும் தமிழக அரசு முன் வராவிட்டால் வேலை நிறுத்த போராட்டத்தை தொடருவதை தவிர வேறு வழி இல்லை என அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக கோரி வரும் காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும், பிற மாநிலத்தில் மருத்து வர்களுக்கு வழங்கும் ஊதியத்தை தமிழகத்தில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் தமிழகம் முழுவதும் இன்று கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த மருத்துவர்கள் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். பட்ட மேற்படிப்பில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட அனைத்து அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில், அரசு மருத்துவர்களுக்கு முதுநிலை பட்டப்படிப்பில் 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், 200 மருத்துவர்கள் பணிக்கு செல்லாததால், மாற்று ஏற்பாடாக பயிற்சி மருத்துவர்களை கொண்டு வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதே போல், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 71 மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 60 மருத்துவர்கள் என மொத்தம் 130 மருத்துவர்கள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட்டனர். மர்ம காய்ச்சலால் ஏராளமான நோயாளிகள் மருத்துவ மனைக்கு சிகிச்சை வரும் சூழ்நிலையில் மருத்துவர்கள் போரட்டத்தால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.