இது தப்பாச்சே..துணை வேந்தர்கள் நியமன மசோதாவுக்கு கவர்னர் எதிர்ப்பு!
தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவுக்கும் கவர்னர் ரவிக்கும் மோதல் போக்கு நீறு பூத்த நெருப்பாக தொடர்கிறது. தற்போது பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழுசட்டத்துக்கு புறம்பானது எனக் கூறி இது தொடர்பான மசோதா குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு கவர்னர் ஆர் என் ரவி கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் பலகலைக்கழகங்களில் வேந்தரான கவர்னருக்கு இருந்து வருகிறது. துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழகங்களின் செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களில் தலா ஒருவர், கவர்னர் சார்பில் ஒரு பிரதிநிதி என 3 பேர் நியமிக்கப்படுவர்.
இந்த தேடல் மற்றும் தேர்வுக் குழு துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் இருந்து 3 பேரை தேர்வு செய்து கவர்னருக்கு பரிந்துரை செய்யும். இவர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி ஒருவரை துணைவேந்தராக கவர்னர் நியமித்து உத்தரவிடுவார் இந்த நடை முறையில் மாற்றம் கொண்டு வரும் வகையில் ‘தமிழகத்தில் உள்ள பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையிலும், தேவைப்பட்டால் துணைவேந்தரை நீக்கம் செய்யும் இறுதி முடிவை மாநில அரசே மேற்கொள்ளும் வகையிலும் 2 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசை கவர்னர் கலந்தாலோசிப்பதில்லை என்பதால் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.
துணைவேந்தர்களை மாநில அரசு நியமிக்கும் மசோதா கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த மசோதா குறித்து தமிழக அரசின் தலைமைசெயலாளருக்கு கவர்னர் சில விளக்கங்களை கோரி கடிதம் எழுதி உள்ளார்.துணைவேந்தர்களை அரசே நியமிப்பது என்பது பல்கலைக்கழக சட்டத்துக்கு புறம்பானது, அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கிறது’ எனக் கூறி விளக்கம் அளிக்க தலைமைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.