கவர்னர் என்போர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல- சுப்ரீம் கோர்ட் பளீர்!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கவர்னருக்கும், முதலமைச்சருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. பல்வேறு மசோத்தாக்களை நிரைவேற்ற முடிவெடுப்பதில் காலவரையற்ற தாமதம் சட்டமன்றத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. இச்சூழலில் பஞ்சாப் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநில அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுகி நியாயம் கோரியுள்ளது.அதை அடுத்து பஞ்சாப் அரசுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் இடையே மோதல் குறிட்த மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று – திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின், அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பான செயல், ஒட்டு மொத்த நிர்வாகத்தையும் முடக்குவதாக தெரிவித்து இருந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அச்சமயம் ”கவர்னர்கள் கொஞ்சம் முனைப்புடன் செயல்பட வேண்டும், அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வழக்கு நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்பே கவர்னர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ”நவம்பர் ஒன்றாம் தேதி மாநில அரசு அனுப்பி இருந்த மூன்று மசோதாக்களில் இரண்டுக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். சட்டப்பேரவையில் தாக்கல் செய்யும் முன்பு, அனைத்து முன்மொழியப்பட்ட சட்டங்களையும் தகுதியின் அடிப்படையில் ஆய்வு செய்வேன் என்று பன்வாரிலால் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நிதி தொடர்பான மசோதாக்கள் தாக்கல் செய்வதற்கு முன்பு ஆளுநரின் ஒப்புதல் தேவைப்படும்.
பஞ்சாப் சரக்கு மற்றும் சேவை வரி (திருத்தம்) மசோதா, 2023 மற்றும் இந்திய முத்திரை (பஞ்சாப் திருத்தம்) மசோதா 2023 ஆகியவற்றுக்கு பன்வாரிலால் ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும், அக்டோபர் 19 ஆம் தேதி முதல்வருக்கு அவர் எழுதிய கடிதத்தில், மூன்று நிதி மசோதாக்களுக்கு ஆளுநர் தனது ஒப்புதலை நிறுத்தி வைத்துஇருப்பதாக தெரிவித்துள்ளார். ” என்று தெரிவித்தார்.
மீண்டும் இந்த மனு மீதான விசாரணை வரும் வெள்ளிக்கிழமைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. கவர்னர் எடுத்த நடவடிக்கை குறித்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்கட்டும் என்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. மேலும் தலைமை நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், “சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்கு வருவதற்கு முன்பே கவர்னர்கள் செயலாற்றி இருக்க வேண்டும்…மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா ?.அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு கவர்னர் முடிவு எடுக்க வேண்டும். நீதிமன்றத்திற்கு வழக்கு வந்த பிறகு ஆளுநர்கள் செயல்படுவதை தவிர்க்க வேண்டும். கவர்னர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்கும் முன்னர், அம்மசோதாவை ஆய்வு செய்யவும் அதுவரை அதை நிறுத்தி வைக்கவும் அதிகாரம் உள்ளது. ஆனாலும் மசோதா விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப் ஆளுநருக்கு உத்தரவிடப்படுகிறது. பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை நவம்பர் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது,”என்று தெரிவித்தார்.