ஆளுநர் என்றழைக்கப்படும் கவர்னர் ரவியின் தேநீர் விருந்து செலவு 22 லட்சம் ரூபாய் சொச்சம்!

ஆளுநர் என்றழைக்கப்படும் கவர்னர் ரவியின் தேநீர் விருந்து செலவு 22 லட்சம் ரூபாய் சொச்சம்!

டந்த ஏப்ரலில் சித்திரை முதல் நாளுக்காகத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் ரவி. நீட் உள்ளிட்ட தீர்மானங்களைக் கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அந்த விருந்தை புறக்கணித்தன. பா.ஜ.க அ.தி.மு.க, பா.ம.க கட்சிகள் மட்டுமே பங்கேற்றன. ஆளுநரின் தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணித்ததும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகிறது’’ என்றார். உடனே நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், “இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியில் இருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் வரும் வரை காத்திருப்போம்” என்றார்.

அந்த பில்லை நான் பிரத்யோகமாக பெற்றேன். அண்ணாமலை சொன்னது போல மக்களின் வரிப்பணம் எல்லாம் மிச்சமாகவில்லை 22.73 லட்சம் ரூபாயைத் தேநீர் அருந்திச் செலவிட்டிருக்கிறார்கள். இந்து மதம், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆளுநர் ரவி வெளிப்படையாக ஆதரிப்பதை எதிர்க் கட்சிகள் கண்டித்து வருகின்றன. குடியரசு மற்றும் சுதந்திர தினத்திற்கு மாநில ஆளுநர்கள், தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். ஆளுநர் ரவி வந்த பிறகு ஏப்ரல் 14-ம் தேதி தமிழ்ப் புத்தாண்டுதான் என்பதை முன்னெடுக்கத் தனியாகத் தேநீர் விருந்தை அறிவித்தார் போல.

ராஜ்பவனில் மாலை நேரத்தில் தேநீர் விருந்து நடைபெறும். தேநீர் விருந்து என்று பெயர் வைக்கப்பட்டாலும் அது சிற்றுண்டி அளவுக்கு இருக்கும். சித்திரை முதல் நாள் தேநீர் விருந்துக்கு என்னென்ன செலவுகள் செய்யப்பட்டன என்பதை பார்ப்போம்.

ஆளுநரின் இல்ல அலுவலகத்தின் கட்டுப்பாட்டாளர் செங்கோட்டையன் தேநீர் விருந்து நடத்த முன்பணமாக 25 லட்சம் ரூபாயை ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு 29/03/2022 அன்று கோரிக்கை வைக்கிறார்.

* ஆளுநர் மாளிகை கேட்ட 25 லட்சம் ரூபாய்க்குப் பதிலாக 18,51,440 ரூபாயை அரசின் பொதுத் துறை செயலாளர் ஜெகன்நாதன் 31/03/2022 அன்று ஒதுக்கீடு செய்கிறார்.

* அரசின் சார்பில் பணம் ஒதுக்கப்பட்டதும் அழைப்பிதழ் முதல் கேட்டரிங் வரை தடபுடலாக வேலையை ஆரம்பிக்கிறது ஆளுநர் மாளிகை. ஆறு பிரிவுகளில் தேநீர் விருந்துக்குச் செலவுகள் செய்திருக்கிறார்கள். முதலில் கேட்டரிங்.

* தேநீர் விருந்துக்கான உணவுப் பொருட்கள் பெரும்பாலும் ஸ்டார் ஹோட்டல்களில் இருந்துதான் ஆர்டர் செய்வார்கள். இதற்காகச் சென்னையில் தரமான நட்சத்திர ஹோட்டல்கள் தேர்வு செய்வார்கள். அதன்படி சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.ஆர்.டி கிராண்ட் ஹோட்டலில் 2 ஆயிரம் பேருக்குத் தேநீர் விருந்து அளிக்க கொட்டேஷன் கேட்கிறது ராஜ்பவன். அதனை ஏற்று கேட்டரிங் சேவைக்கான விநியோக ஆர்டரை ஆளுநர் இல்ல அலுவலக கட்டுப்பாட்டாளர் செங்கோட்டையன் அளிக்கிறார்.

* சாக்லேட் பிரௌனி, காலா ஜாமூன் ஆகிய இனிப்பு வகைகளும் வெஜ்டேபிள் சாண்ட்விஜ், சிறிய சமூசா, முந்திரி பக்கோடா, மசால் வடை, பழங்கள், பிளாக் காபி, க்ரீன் டீ, பிளாக் டீ, வாட்டர் பாட்டல் ஆகியவை தேநீர் விருந்தில் வழங்கப்பட்டிருக்கிறது.

* கேட்டரிங் வகையில் மட்டும் ஜி.ஆர்.டி ஹோட்டலுக்கு 13,35,200 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

* உணவுப்பொருட்கள் தவிர, தேநீர் விருந்து நடைபெறும் ராஜ்பவனில் தற்காலிக மின்விளக்குகள் பொருத்துதல், மலர் அலங்காரம், பரிசுப் பொருட்கள், தற்காலிக பணியாளர்களுக்கான தினக்கூலி போன்ற செலவுகளும் செய்யப்படும்.

* அடுத்து கார்டன் செலவுகள். ஊட்டி தோட்டக்காரர்களின் போக்குவரத்துக் கட்டணங்கள், CMY மலர்கள், DPS புளோரா, பால் வெல்டிங் ஒர்க்ஸ், வர்ஷினி மலர் நிலையம், பூக்கடை நடத்துபவர் ஆகியோருக்கு 1,88,601 ரூபாய் செலவிட்டிருக்கிறார்கள்.

* இல்ல பராமரிப்பு என்ற பிரிவில் விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட் , விஜய் சூப்பர் மார்க்கெட், சரவணா சூப்பர் மார்க்கெட், சண்முக ஆயில் ஸ்டோர், சரவணா ஸ்டோர், நல்லி சின்னசாமி செட்டி ஆகிய கடைகளுக்கு 1,07,516 ரூபாய் அளிக்கப்பட்டிருக்கிறது.

* RB PRESS என்ற பிரிவில் அழைப்பிதழ்கள், பிரிண்டிங் ஆகியவை செய்யப்பட்டிருக்கிறது. இதற்காக வேர்ட்வைட் பேப்பர் கம்பெனி, ஸ்டார் டிஜிட்டல் பிரிண்ட், ஆதி பிரிண்டர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 1,51,681 ரூபாய் செலவிட்டுள்ளனர்.

* பி.ஆர்.ஒ பிரிவில் தொகுப்பாளருக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அளித்திருக்கிறார்கள். கலர் லேபையும் சேர்த்து மொத்தமாக 30,768 ரூபாய் செலவிட்டுள்ளனர்.

* பொது செலவுகள் என்ற தலைப்பில் 17,130 ரூபாய் செலவாகியிருக்கிறது.

* ஆறு பிரிவுகளில் ஒட்டு மொத்தமாக 18 லட்சத்து 30 ஆயிரத்து 896 ரூபாய் செலவிட்டிருக்கிறார்கள். ஆனால் ஜி.ஆர்.டி ஹோட்டலுக்கு 4,42,500 ரூபாய் பாக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த தொகையை சேர்த்தால் 22,73,396 ரூபாய் மொத்தமாகச் செலவிட்டிருக்கிறார்கள்.

இனம் வாரியாக செலவு விவரம்

1. கேட்டரிங் – 17,77,700
2. கார்டன் – 1,88,601
3. ஹவுஸ்கீப்பிங் – 1,07,516
4. ஆர்பி பிரஸ் – 1,51,681
5. பி.ஆர்.ஒ – 30,768
6. பொது – 17,130
மொத்தம் – 22,73,396

மக்கள் வரிப்பணம் வீணானதா அண்ணாமலை?

எஸ்.ஏ.எம். பரக்கத் அலி

error: Content is protected !!